campantar tEvAram -tirumuRai 2 part II
(verses 655 - 1331)
(in tamil script, unicode format)
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
இரண்டாம் திருமுறை - இரண்டாம் பகுதி
பாடல்கள் (655 - 1331 )
Acknowledgements:
Etext preparation (romanized/transliteration format) : Dr. Thomas Malten and Colleagues,
Institute of Indology and Tamil Studies, Univ of Koeln Germany.
Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a
Text Convertor that allowed conversion of romanized version to Tamil script version as per TSCII encoding.
Proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
or
© Project Madurai 1999 - 2004
to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
இரண்டாம் திருமுறை - இரண்டாம் பகுதி
- உள்ளுறை
2.61 | திருவெண்காடு | (655-665) | மின்பதிப்பு |
2.62 | திருமீயச்சூர் | (666-676) | மின்பதிப்பு |
2.63 | திருஅரிசிற்கரைப்புத்தூர் | (677-687) | மின்பதிப்பு |
2.64 | திருமுதுகுன்றம் | (688-697) | மின்பதிப்பு |
2.65 | திருப்பிரமபுரம் | (698-708) | மின்பதிப்பு |
2.66 | திருஆலவாய் | (709-719) | மின்பதிப்பு |
2.67 | திருப்பெரும்புலியூர் | (720-730) | மின்பதிப்பு |
2.68 | திருக்கடம்பூர் | (731-741) | மின்பதிப்பு |
2.69 | திருப்பாண்டிக்கொடுமுடி | (742-752) | மின்பதிப்பு |
2.70 | திருப்பிரமபுரம் | (753-764) | மின்பதிப்பு |
2.71 | திருக்குறும்பலா | (765-775) | மின்பதிப்பு |
2.72 | திருநணா | (776-786) | மின்பதிப்பு |
2.73 | திருப்பிரமபுரம் | (787-798) | மின்பதிப்பு |
2.74 | திருப்பிரமபுரம் | (799-810) | மின்பதிப்பு |
2.75 | சீகாழி | (811-821) | மின்பதிப்பு |
2.76 | திருஅகத்தியான்பள்ளி | (822-832) | மின்பதிப்பு |
2.77 | திருஅறையணிநல்லூர் | (833-843) | மின்பதிப்பு |
2.78 | திருவிளநகர் | (844-854) | மின்பதிப்பு |
2.79 | திருவாரூர் | (855-865) | மின்பதிப்பு |
2.80 | திருக்கடவூர்மயானம் | (866-876) | மின்பதிப்பு |
2.81 | திருவேணுபுரம் | (877-886) | மின்பதிப்பு |
2.82 | திருத்தேவூர் | (887-897) | மின்பதிப்பு |
2.83 | திருக்கொச்சைவயம் | (898-908) | மின்பதிப்பு |
2.84 | திருநனிபள்ளி | (908-918) | மின்பதிப்பு |
2.85 | கோளாறு திருப்பதிகம் | (919-929) | மின்பதிப்பு |
2.86 | திருநாரையூர் | (930-940) | மின்பதிப்பு |
2.87 | திருநறையூர் | (941-951) | மின்பதிப்பு |
2.88 | திருமுல்லைவாயில் | (952-962) | மின்பதிப்பு |
2.89 | திருக்கொச்சைவயம் | (963-972) | மின்பதிப்பு |
2.90 | திருநெல்வாயில் | (973-983) | மின்பதிப்பு |
2.91 | திருமறைக்காடு | (984-994) | மின்பதிப்பு |
2.92 | திருப்புகலூர் | (995-1005) | மின்பதிப்பு |
2.93 | திருத்தெங்கூர் | (1006-1016) | மின்பதிப்பு |
2.94 | திருவாழ்கொளிபுத்தூர் | (1017-1027) | மின்பதிப்பு |
2.95 | திருஅரைசிலி | (1028-1037) | மின்பதிப்பு |
2.96 | சீகாழி | (1038-1048) | மின்பதிப்பு |
2.97 | சீகாழி | (1049-1058) | மின்பதிப்பு |
2.98 | திருத்துருத்தி | (1059-1069 | மின்பதிப்பு |
2.99 | திருக்கோடிகா | (1070-1080) | மின்பதிப்பு |
2.100 | திருக்கோவலூர் வீரட்டம் | (1081-1091) | மின்பதிப்பு |
2.101 | திருவாரூர் | (1092-1102) | மின்பதிப்பு |
2.102 | திருச்சிரபுரம் | (1103-1113) | மின்பதிப்பு |
2.103 | திருஅம்பர்த்திருமாகாளம் | (1114-1124) | மின்பதிப்பு |
2.104 | திருக்கடிக்குளம் | (1125-1135) | மின்பதிப்பு |
2.105 | திருக்கீழ்வேளூர் | (1136-1146) | மின்பதிப்பு |
2.106 | திருவலஞ்சுழி | (1147- 1157) | மின்பதிப்பு |
2.107 | திருக்கேதீச்சரம் | (1158-1168) | மின்பதிப்பு |
2.108 | திருவிற்குடிவீரட்டானம் | (1169-1178) | மின்பதிப்பு |
2.109 | திருக்கோட்டூர் | (1179-1189) | மின்பதிப்பு |
2.110 | திருமாந்துறை | (1190-1200 | மின்பதிப்பு |
2.111 | திருவாய்மூர் | (1201-1211) | மின்பதிப்பு |
2.112 | திருஆடானை | (1212-1222) | மின்பதிப்பு |
2.113 | சீகாழி | (1223-1233) | மின்பதிப்பு |
2.114 | திருக்கேதாரம் | (1234-1244) | மின்பதிப்பு |
2.115 | திருப்புகலூர் | (1245-1255) | மின்பதிப்பு |
2.116 | திருநாகைக்காரோணம் | (1256-1266) | மின்பதிப்பு |
2.117 | திருஇரும்பைமாகாளம் | (1267-1277) | மின்பதிப்பு |
2.118 | திருத்திலதைப்பதி | (1278-1288) | மின்பதிப்பு |
2.119 | திருநாகேச்சரம் | (1289-1299) | மின்பதிப்பு |
2.120 | திருமூக்கீச்சரம் | (1300-1310) | மின்பதிப்பு |
2.121 | திருப்பாதிரிப்புலியூர் | (1311-1321) | மின்பதிப்பு |
2.122 | திருப்புகலி | (1322-1331) | மின்பதிப்பு |
2.61 திருவெண்காடு
பண் - காந்தாரம்திருச்சிற்றம்பலம்
655 உண்டாய் நஞ்சை உமையோர் பங்கா என்றுள்கித்
தொண்டாய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்
அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர்போலும்
வெண்டா மரைமேல் கருவண் டியாழ்செய் வெண்காடே.
01
656 நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்றேத்திப்
பாதம் பன்னால் பணியும் அடியார் தங்கள்மேல்
ஏதந் தீர இருந்தான் வாழும் ஊர்போலும்
வேதத் தொலியாற் கிளிசொல் பயிலும் வெண்காடே.
02
657 தண்முத் தரும்பத் தடமூன் றுடையான் றனையுன்னிக்
கண்முத் தரும்பக் கழற்சே வடிகை தொழுவார்கள்
உண்முத் தரும்ப வுவகை தருவான் ஊர்போலும்
வெண்முத் தருவிப் புனல்வந் தலைக்கும் வெண்காடே.
03
658 நரையார் வந்து நாளுங் குறுகி நணுகாமுன்
உரையால் வேறா வுள்குவார்கள் உள்ளத்தே
கரையா வண்ணங் கண்டான் மேவும் ஊர்போலும்
விரையார் கமலத் தன்னம் மருவும் வெண்காடே.
04
659 பிள்ளைப் பிறையும் புனலுஞ் சூடும் பெம்மானென்
றுள்ளத் துள்ளித் தொழுவார் தங்கள் உறுநோய்கள்
தள்ளிப் போக அருளுந் தலைவன் ஊர்போலும்
வெள்ளைச் சுரிசங் குலவித் திரியும் வெண்காடே.
05
660 ஒளிகொள் மேனி யுடையாய் உம்பர் ஆளீயென்
றளிய ராகி அழுதுற் றூறும் அடியார்கட்
கெளியான் அமரர்க் கரியான் வாழும் ஊர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.
06
661 கோள்வித் தனைய கூற்றந் தன்னைக் குறிப்பினால்
மாள்வித் தவனை மகிழ்ந்தங் கேத்த மாணிக்காய்
ஆள்வித் தமரர் உலகம் அளிப்பான் ஊர்போலும்
வேள்விப் புகையால் வானம் இருள்கூர் வெண்காடே.
07
662 வளையார் முன்கை மலையாள் வெருவ வரையூன்றி
முளையார் மதியஞ் சூடியென்று முப்போதும்
இளையா தேத்த இருந்தான் எந்தை ஊர்போலும்
விளையார் கழனிப் பழனஞ் சூழ்ந்த வெண்காடே.
08
663 கரியா னோடு கமல மலரான் காணாமை
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட்
குரியான் அமரர்க் கரியான் வாழும் ஊர்போலும்
விரியார் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே.
09
664 பாடும் அடியார் பலருங் கூடிப் பரிந்தேத்த
ஆடும் அரவம் அசைத்த பெருமான் அறிவின்றி
மூடம் உடைய சமண்சாக் கியர்கள் உணராத
வேடம் உடைய பெருமான் பதியாம் வெண்காடே.
10
665 விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைகள் அமர லோகம் ஆள்வாரே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.62 திருமீயச்சூர்
பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
666 காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப்
பாயப் படர்புன் சடையிற் பதித்த பரமேட்டி
மாயச் சூரன் றறுத்த மைந்தன் தாதைதன்
மீயச் சூரே தொழுது வினையை வீட்டுமே.
01
667 பூவார் சடையின் முடிமேற் புனலர் அனல்கொள்வர்
நாவார் மறையர் பிறையர் நறவெண் டலையேந்தி
ஏவார் மலையே சிலையாக் கழியம் பெரிவாங்கி
மேவார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே.
02
668 பொன்னேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான்
மின்னேர் சடைக ளுடையான் மீயச் சூரானைத்
தன்னேர் பிறரில் லானைத் தலையால் வணங்குவார்க்
கன்னே ரிமையோர் உலக மெய்தற் கரிதன்றே.
03
669 வேக மதநல் லியானை வெருவ வுரிபோர்த்துப்
பாகம் உமையோ டாகப் படிதம் பலபாட
நாகம் அரைமே லசைத்து நடமா டியநம்பன்
மேகம் உரிஞ்சும் பொழில்சூழ் மீயச் சூரானே.
04
670 விடையார் கொடியார் சடைமேல் விளங்கும் பிறைவேடம்
படையார் பூதஞ் சூழப் பாட லாடலார்
பெடையார் வரிவண் டணையும் பிணைசேர் கொன்றையார்
விடையார் நடையொன் றுடையார் மீயச் சூராரே.
05
671 குளிருஞ் சடைகொள் முடிமேற் கோல மார்கொன்றை
ஒளிரும் பிறையொன் றுடையா னொருவன் கைகோடி
நளிரும் மணிசூழ் மாலை நட்டம் நவில்நம்பன்
மிளிரும் மரவம் உடையான் மீயச் சூரானே.
06
672 நீல வடிவர் மிடறு நெடியர் நிகரில்லார்
கோல வடிவு தமதாங் கொள்கை யறிவொண்ணார்
காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர்
மேலர் மதியர் விதியர் மீயச் சூராரே.
07
673 புலியின் உரிதோ லாடை பூசும் பொடிநீற்றர்
ஒலிகொள் புனலோர் சடைமேற் கரந்தார் உமையஞ்ச
வலிய திரள்தோள் வன்கண் அரக்கர் கோன்தன்னை
மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச் சூராரே.
08
674 காதின் மிளிருங் குழையர் கரிய கண்டத்தார்
போதி லவனும் மாலுந் தொழப் பொங் கெரியானார்
கோதி வரிவண் டறைபூம் பொய்கைப் புனல்மூழ்கி
மேதி படியும் வயல்சூழ் மீயச் சூராரே.
09
675 கண்டார் நாணும் படியார் கலிங்க முடைபட்டைக்
கொண்டார் சொல்லைக் குறுகா ருயர்ந்த கொள்கையார்
பெண்டான் பாக முடையார் பெரிய வரைவில்லால்
விண்டார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே.
10
676 வேட முடைய பெருமா னுறையும் மீயச்சூர்
நாடும் புகழார் புகலி ஞான சம்பந்தன்
பாட லாய தமிழீ ரைந்தும் மொழிந்துள்கி
ஆடும் அடியார் அகல்வா னுலகம் அடைவாரே.
11
சுவாமிபெயர் - முயற்சிநாதேசுவரர், தேவியார் - சுந்தரநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.63 திருஅரிசிற்கரைப்புத்தூர்
பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
677 மின்னுஞ் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே
துன்னுங் கடல்நஞ் சிருள்தோய் கண்டர் தொன்மூதூர்
அன்னம் படியும் புனலார் அரிசில் அலைகொண்டு
பொன்னும் மணியும் பொருதென் கரைமேற் புத்தூரே.
01
678 மேவா அசுரர் மேவெயில் வேவ மலைவில்லால்
ஏவார் எரிவெங் கணையா லெய்தான் எய்துமூர்
நாவால் நாதன் நாமம் ஓதி நாடோ றும்
பூவால் நீராற் பூசுரர் போற்றும் புத்தூரே.
02
679 பல்லார் தலைசேர் மாலைசூடிப் பாம்பும்பூண்
டெல்லா விடமும் வெண்ணீ றணிந்தோ ரேறேறிக்
கல்லார் மங்கை பங்க ரேனுங் காணுங்கால்
பொல்லா ரல்லர் அழகியர் புத்தூர்ப் புனிதரே.
03
680 வரியேர் வளையாள் அரிவை யஞ்ச வருகின்ற
கரியேர் உரிவை போர்த்த கடவுள் கருதுமூர்
அரியேர் கழனிப் பழனஞ் சூழ்ந்தங் கழகாய
பொரியேர் புன்கு சொரிபூஞ் சோலைப் புத்தூரே.
04
681 என்போ டரவம் ஏனத் தெயிறோ டெழிலாமை
மின்போற் புரிநூல் விரவிப் பூண்ட மணிமார்பர்
அன்போ டுருகும் அடியார்க் கன்பர் அமருமூர்
பொன்போ தலர்கோங் கோங்கு சோலைப் புத்தூரே.
05
682 வள்ளி முலைதோய் குமரன் தாதை வான்தோயும்
வெள்ளி மலைபோல் விடையொன் றுடையான் மேவுமூர்
தெள்ளி வருநீர் அரிசில் தென்பாற் சிறைவண்டும்
புள்ளும் மலிபூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே.
06
683 நிலந்த ணீரோ டனல்கால் விசும்பின் நீர்மையான்
சிலந்தி செங்கட் சோழனாகச் செய்தானூர்
அலந்த அடியான் அற்றைக் கன்றோர் காசெய்திப்
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே.
07
684 இத்தே ரேக இம்மலை பேர்ப்பன் என்றேந்தும்
பத்தோர் வாயான் வரைக்கீழ் அலறப் பாதந்தான்
வைத்தா ரருள்செய் வரதன் மருவும் ஊரான
புத்தூர் காணப் புகுவார் வினைகள் போகுமே.
08
685 முள்ளார் கமலத் தயன்மால் முடியோ டடிதேட
ஒள்ளா ரெரியா யுணர்தற் கரியான் ஊர்போலுங்
கள்ளார் நெய்தல் கழுநீ ராம்பல் கமலங்கள்
புள்ளார் பொய்கைப் பூப்பல தோன்றும் புத்தூரே.
09
686 கையார் சோறு கவர்குண் டர்களுந் துவருண்ட
மெய்யார் போர்வை மண்டையர் சொல்லும் மெய்யல்ல
பொய்யா மொழியா லந்தணர் போற்றும் புத்தூரில்
ஐயா என்பார்க் கையுற வின்றி யழகாமே.
10
687 நறவங் கமழ்பூங் காழி ஞான சம்பந்தன்
பொறிகொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர்மேல்
செறிவண் டமிழ்செய் மாலை செப்ப வல்லார்கள்
அறவன் கழல்சேர்ந் தன்போ டின்பம் அடைவாரே.
11
சுவாமிபெயர் - படிக்காசளித்தவீசுவரர், தேவியார் - அழகம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.64 திருமுதுகுன்றம்
பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
688 தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே
ஆவா வென்றங் கடியார் தங்கட் கருள்செய்வாய்
ஓவா உவரி கொள்ள உயர்ந்தா யென்றேத்தி
மூவா முனிவர் வணங்குங் கோயில் முதுகுன்றே.
01
689 எந்தை யிவனென் றிரவி முதலா இறைஞ்சுவார்
சிந்தை யுள்ளே கோயி லாகத் திகழ்வானை
மந்தி யேறி யினமா மலர்கள் பலகொண்டு
முந்தித் தொழுது வணங்குங் கோயில் முதுகுன்றே.
02
690 நீடு மலரும் புனலுங் கொண்டு நிரந்தரந்
தேடும் அடியார் சிந்தை யுள்ளே திகழ்வானைப்
பாடுங் குயிலின் அயலே கிள்ளை பயின்றேத்த
மூடுஞ் சோலை முகில்தோய் கோயில் முதுகுன்றே.
03
691 தெரிந்த அடியார் சிவனே யென்று திசைதோறுங்
குருந்த மலருங் குரவின் அலருங் கொண்டேந்தி
இருந்து நின்றும் இரவும் பகலும் ஏத்துஞ்சீர்
முரிந்து மேகந் தவழுஞ் சோலை முதுகுன்றே.
04
692 வைத்த நிதியே மணியே யென்று வருந்தித்தஞ்
சித்தம் நைந்து சிவனே யென்பார் சிந்தையார்
கொத்தார் சந்துங் குரவும் வாரிக் கொணர்ந்துந்தும்
முத்தா றுடைய முதல்வர் கோயில் முதுகுன்றே.
05
693 வம்பார் கொன்றை வன்னி மத்த மலர்தூவி
நம்பா வென்ன நல்கும் பெருமான் உறைகோயில்
கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும்
மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே.
06
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
07
694 வாசங் கமழும் பொழில்சூழ் இலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமான் அமர்கோயில்
பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே.
08
695 அல்லி மலர்மேல் அயனும் அரவின் அணையானுஞ்
சொல்லிப் பரவித் தொடர வொண்ணாச் சோதியூர்
கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட
முல்லை யயலே முறுவல் செய்யும் முதுகுன்றே.
09
696 கருகும் உடலார் கஞ்சி யுண்டு கடுவேதின்
றுருகு சிந்தை யில்லார்க் கயலான் உறைகோயில்
திருகல் வேய்கள் சிறிதே வளையச் சிறுமந்தி
முருகின் பணைமே லிருந்து நடஞ்செய் முதுகுன்றே.
10
697 அறையார் கடல்சூழ் அந்தண் காழிச் சம்பந்தன்
முறையால் முனிவர் வணங்குங் கோயில் முதுகுன்றைக்
குறையாப் பனுவல் கூடிப் பாட வல்லார்கள்
பிறையார் சடையெம் பெருமான் கழல்கள் பிரியாரே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.65 திருப்பிரமபுரம்
பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
698 கறையணி வேலிலர் போலுங் கபாலந் தரித்திலர் போலும்
மறையும் நவின்றிலர் போலும் மாசுணம் ஆர்த்திலர் போலும்
பறையுங் கரத்திலர் போலும் பாசம் பிடித்திலர் போலும்
பிறையுஞ் சடைக்கிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே.
01
699 கூரம் பதுவிலர் போலுங் கொக்கின் இறகிலர் போலும்
ஆரமும் பூண்டிலர் போலும் ஆமை அணிந்திலர் போலுந்
தாருஞ் சடைக்கிலர் போலும் சண்டிக் கருளிலர் போலும்
பேரும் பலவிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே.
02
700 சித்த வடிவிலர் போலுந் தேசந் திரிந்திலர் போலுங்
கத்தி வருங் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலும்
மெய்த்த நயனம் இடந்தார்க் காழி யளித்திலர் போலும்
பித்த வடிவிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே.
03
701 நச்சர வாட்டிலர் போலும் நஞ்சம் மிடற்றிலர் போலுங்
கச்சுத் தரித்திலர் போலுங் கங்கை தரித்திலர் போலும்
மொய்ச்சவன் பேயிலர் போலும் முப்புரம் எய்திலர் போலும்
பிச்சை இரந்திலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே.
04
702 தோடு செவிக்கிலர் போலுஞ் சூலம் பிடித்திலர் போலும்
ஆடு தடக்கை வலிய ஆனை உரித்திலர் போலும்
ஓடு கரத்திலர் போலும் ஒள்ளழல் கையிலர் போலும்
பீடு மிகுத்தெழு செல்வப் பிரம புரம்அமர்ந் தாரே.
05
703 விண்ணவர் கண்டிலர் போலும் வேள்வி யழித்திலர் போலும்
அண்ணல் அயன்றலை வீழ அன்று மறுத்திலர் போலும்
வண்ண எலும்பினொ டக்கு வடங்கள் தரித்திலர் போலும்
பெண்ணினம் மொய்த்தெழு செல்வப் பிரம புரம்அமர்ந் தாரே.
06
704 பன்றியின் கொம்பிலர் போலும் பார்த்தற் கருளிலர் போலுங்
கன்றிய காலனை வீழக் கால்கொடு பாய்ந்திலர் போலுந்
துன்று பிணஞ்சுடு காட்டி லாடித் துதைந்திலர் போலும்
பின்றியும் பீடும் பெருகும் பிரம புரம்அமர்ந் தாரே.
07
705 பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர் போலும்
அரசன் இலங்கையர் கோனை அன்றும் அடர்த்திலர் போலும்
புரைசெய் புனத்திள மானும் புலியின் அதளிலர் போலும்
பிரச மலர்ப்பொழில் சூழ்ந்த பிரம புரம்அமர்ந் தாரே.
08
706 அடிமுடி மாலயன் தேட அன்றும் அளப்பிலர் போலுங்
கடிமலர் ஐங்கணை வேளைக் கனல விழித்திலர் போலும்
படிமலர்ப் பாலனுக் காகப் பாற்கடல் ஈந்திலர் போலும்
பிடிநடை மாதர் பெருகும் பிரம புரம்அமர்ந் தாரே.
09
707 வெற்றரைச் சீவரத் தார்க்கு வெளிப்பட நின்றிலர் போலும்
அற்றவர் ஆழ்நிழல் நால்வர்க் கறங்கள் உரைத்திலர் போலும்
உற்றவ ரொன்றிலர் போலும் ஓடு முடிக் கிலர்போலும்
பெற்றமும் ஊர்ந்திலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே.
10
708 பெண்ணுரு ஆணுரு அல்லாப் பிரம புரநகர் மேய
அண்ணல்செய் யாதன வெல்லாம் அறிந்து வகைவகை யாலே
நண்ணிய ஞானசம் பந்தன் நவின்றன பத்தும் வல்லார்கள்
விண்ணவ ரோடினி தாக வீற்றிருப் பாரவர் தாமே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.66 திருஆலவாய் - திருநீற்றுப்பதிகம்
பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
709 மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.
01
710 வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.
02
711 முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.
03
712 காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.
04
713 பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே.
05
714 அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.
06
715 எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே.
07
716 இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே.
08
717 மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே.
09
718 குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே.
10
719 ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.67 திருப்பெரும்புலியூர்
பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
720 மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார்
விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர்
கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார்
பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே.
01
720 துன்னு கடற்பவ ளஞ்சேர் தூயன நீண்டதிண் டோ ள்கள்
மின்னு சுடர்க்கொடி போலும் மேனியி னாளொரு *கங்கைக்
கன்னி களின்புனை யோடு கலைமதி மாலை கலந்த
பின்னு சடைப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.
02
* கங்கைக்கன்னிகளின் புனையோடு - என்பதனுக்கு கங்கை
யாறுகளாகிய மாலையுடனெனப்பொருள் தோன்றுகின்றது.
722 கள்ள மதித்த கபாலங் கைதனி லேமிக ஏந்தித்
துள்ள மிதித்துநின் றாடுந் தொழிலர் எழில்மிகு செல்வர்
வெள்ள நகுதலை மாலை விரிசடை மேல்மிளிர் கின்ற
பிள்ளை மதிப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.
03
723 ஆட லிலையம் உடையார் அருமறை தாங்கியா றங்கம்
பாட லிலையம் உடையார் பன்மை யொருமைசெய் தஞ்சும்
ஊட லிலையம் உடையார் யோகெனும் பேரொளி தாங்கி
பீட லிலையம் உடையார் பெரும்புலி யூர்பிரி யாரே.
04
724 தோடுடை யார்குழைக் காதிற் சுடுபொடி யாரன லாடக்
காடுடை யாரெரி வீசுங் கையுடை யார்கடல் சூழ்ந்த
நாடுடை யார்பொரு ளின்ப நல்லவை நாளு நயந்த
பீடுடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.
05
725 கற்ற துறப்பணி செய்து காண்டுமென் பாரவர் தங்கண்
முற்றி தறிதுமென் பார்கள் முதலியர் வேதபு ராணர்
மற்றி தறிதுமென் பார்கள் மனத்திடை யார்பணி செய்யப்
பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலி யூர்பிரி யாரே.
06
726 மறையுடை யாரொலி பாடல் மாமலர்ச் சேவடி சேர்வார்
குறையுடை யார்குறை தீர்ப்பார் குழகர் அழகர் நஞ்செல்வர்
கறையுடை யார்திகழ் கண்டங் கங்கை சடையிற் கரந்தார்
பிறையுடை யார்சென்னி தன்மேற் பெரும்புலி யூர்பிரி யாரே.
07
727 உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடெளி தாகித்
துறவியுங் கூட்டமுங் காட்டித் துன்பமும் இன்பமுந் தோற்றி
மறவியென் சிந்தனை மாற்றி வாழவல் லார்தமக் கென்றும்
பிறவி யறுக்கும் பிரானார் பெரும்புலி யூர்பிரி யாரே.
08
728 சீருடை யாரடி யார்கள் சேடரொப் பார்சடை சேரும்
நீருடை யார்பொடிப் பூசு நினைப்புடை யார்விரி கொன்றைத்
தாருடை யார்விடை யூர்வார் தலைவரைந் நூற்றுப்பத் தாய
பேருடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.
09
729 உரிமை யுடையடி யார்கள் உள்ளுற வுள்கவல் லார்கட்
கருமை யுடையன காட்டி அருள்செயும் ஆதி முதல்வர்
கருமை யுடைநெடு மாலுங் கடிமல ரண்ணலுங் காணாப்
பெருமை யுடைப் பெருமானார் பெரும்புலி யூர்பிரி யாரே.
10
730 பிறைவள ரும்முடிச் சென்னிப் பெரும்புலி யூர்ப்பெரு மானை
நறைவள ரும்பொழிற் காழி நற்றமிழ் ஞானசம் பந்தன்
மறைவள ருந்தமிழ் மாலை வல்லவர் தந்துயர் நீங்கி
நிறைவளர் நெஞ்சின ராகி நீடுல கத்திருப் பாரே.
11
சுவாமிபெயர் - வியாக்கிரபுரீசுவரர், தேவியார் - சவுந்தராம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.68 திருக்கடம்பூர்
பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
731 வானமர் திங்களும் நீரும் மருவிய வார்சடை யானைத்
தேனமர் கொன்றையி னானைத் தேவர் தொழப்படு வானைக்
கானம ரும்பிணை புல்கிக் கலைபயி லுங்கடம் பூரில்
தானமர் கொள்கையி னானைத் தாள்தொழ வீடெளி தாமே.
01
732 அரவினொ டாமையும் பூண்டு அந்துகில் வேங்கை யதளும்
விரவுந் திருமுடி தன்மேல் வெண்திங்கள் சூடி விரும்பிப்
பரவுந் தனிக்கடம் பூரிற் பைங்கண்வெள் ளேற்றண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கது வாமே.
02
733 *இளிபடும் இன்சொலி னார்கள் இருங்குழல் மேலிசைந் தேறத்
தெளிபடு கொள்கை கலந்த தீத்தொழி லார்கடம் பூரில்
ஒளிதரு வெண்பிறை சூடி யொண்ணுத லோடுட னாகிப்
புலியத ளாடை புனைந்தான் பொற்கழல் போற்றுதும் நாமே.
03
* இளி - என்பது ஏழிசையிலொன்று.
734 பறையொடு சங்கம் இயம்பப் பல்கொடி சேர்நெடு மாடங்
கறையுடை வேல்வரிக் கண்ணார் கலையொலி சேர்கடம் பூரில்
மறையொலி கூடிய பாடல் மருவிநின் றாடல் மகிழும்
பிறையுடை வார்சடை யானைப் பேணவல் லார்பெரி யோரே.
04
735 தீவிரி யக்கழ லார்ப்பச் சேயெரி கொண்டிடு காட்டில்
நாவிரி கூந்தல்நற் பேய்கள் நகைசெய்ய நட்டம் நவின்றோன்
காவிரி கொன்றை கலந்த கண்ணுத லான்கடம் பூரில்
பாவிரி பாடல் பயில்வார் பழியொடு பாவ மிலாரே.
05
736 தண்புனல் நீள்வயல் தோறுந் தாமரை மேலனம் வைகக்
கண்புணர் காவில்வண் டேறக் கள்ளவி ழுங்கடம் பூரில்
பெண்புனை கூறுடை யானைப் பின்னு சடைப்பெரு மானைப்
பண்புனை பாடல் பயில்வார் பாவமி லாதவர் தாமே.
06
737 பலிகெழு செம்மலர் சாரப் பாடலொ டாட லறாத
கலிகெழு வீதி கலந்த கார்வயல் சூழ்கடம் பூரில்
ஒலிதிகழ் கங்கை கரந்தான் ஒண்ணுத லாள்உமை கேள்வன்
புலியத ளாடையி னான்றன் புனைகழல் போற்றல் பொருளே.
07
738 பூம்படு கிற்கயல் பாயப் புள்ளிரி யப்புறங் காட்டில்
காம்படு தோளியர் நாளுங் கண்கவ ருங்கடம் பூரில்
மேம்படு தேவியோர் பாகம் மேவியெம் மானென வாழ்த்தித்
தேம்படு மாமலர் தூவித் திசைதொழத் தீய கெடுமே.
08
739 திருமரு மார்பி லவனுந் திகழ்தரு மாமல ரோனும்
இருவரு மாயறி வொண்ணா எரியுரு வாகிய ஈசன்
கருவரை காலில் அடர்த்த கண்ணுத லான்கடம் பூரில்
மருவிய பாடல் பயில்வார் வானுல கம்பெறு வாரே.
09
740 ஆடை தவிர்த்தறங் காட்டு மவர்களும் அந்துவராடைச்
சோடைகள் நன்னெறி சொல்லார் சொல்லினுஞ் சொல்லல கண்டீர்
வேடம் பலபல காட்டும் விகிர்தன்நம் வேதமு தல்வன்
காடத னில்நட மாடுங் கண்ணுத லான்கடம் பூரே.
10
741 விடைநவி லுங்கொடி யானை வெண்கொடி சேர்நெடு மாடங்
கடைநவி லுங்கடம் பூரிற் காதல னைக்கடற் காழி
நடைநவில் ஞானசம் பந்தன் நன்மையா லேத்திய பத்தும்
படைநவில் பாடல்ப யில்வார் பழியொடு பாவ மிலாரே.
11
சுவாமிபெயர் - அமுதகடேசுவரர், தேவியார் - சோதிமின்னம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.69 திருப்பாண்டிக்கொடுமுடி
பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
742 பெண்ணமர் மேனியி னாரும் பிறைபுல்கு செஞ்சடை யாருங்
கண்ணமர் நெற்றியி னாருங் காதம ருங்குழை யாரும்
எண்ணம ருங்குணத் தாரும் இமையவ ரேத்த நின்றாரும்
பண்ணமர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
01
743 தனைக்கணி மாமலர் கொண்டு தாள்தொழு வாரவர் தங்கள்
வினைப்பகை யாயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில்
நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார் நிரைவளை மங்கை நடுங்கப்
பனைக்கைப் பகட்டுரி போர்த்தார் பாண்டிக் கொடுமுடி யாரே.
02
744 சடையமர் கொன்றையி னாருஞ் சாந்தவெண் ணீறணிந் தாரும்
புடையமர் பூதத்தி னாரும் பொறிகிளர் பாம்பசைத் தாரும்
விடையம ருங்கொடி யாரும் வெண்மழு மூவிலைச் சூலப்
படையமர் கொள்கையி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
03
745 நறைவளர் கொன்றையி னாரும் ஞாலமெல் லாந்தொழு தேத்தக்
கறைவளர் மாமிடற் றாருங் காடரங் காக்கன லேந்தி
மறைவளர் பாடலி னோடு மண்முழ வங்குழல் மொந்தை
பறைவளர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
04
746 போகமு மின்பமு மாகிப் போற்றியென் பாரவர் தங்கள்
ஆகமு றைவிட மாக அமர்ந்தவர் கொன்றையி னோடும்
நாகமுந் திங்களுஞ் சூடி நன்னுதல் மங்கைதன் மேனிப்
பாகமு கந்தவர் தாமும் பாண்டிக் கொடுமுடி யாரே.
05
747 கடிபடு கூவிளம் மத்தங் கமழ்சடை மேலுடை யாரும்
பொடிபட முப்புரஞ் செற்ற பொருசிலை யொன்றுடை யாரும்
வடிவுடை மங்கைதன் னோடு மணம்படு கொள்கையி னாரும்
படிபடு கோலத்தி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
06
748 ஊனமர் வெண்டலை யேந்தி உண்பலிக் கென்றுழல் வாருந்
தேனம ரும்மொழி மாது சேர்திரு மேனியி னாருங்
கானமர் மஞ்ஞைக ளாலுங் காவிரிக் கோலக் கரைமேல்
பானல நீறணி வாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
07
749 புரந்தரன் தன்னொடு வானோர் போற்றியென் றேத்த நின்றாரும்
பெருந்திறல் வாளரக் கன்னைப் பேரிடர் செய்துகந் தாருங்
கருந்திரை மாமிடற் றாருங் காரகில் பன்மணி யுந்திப்
பரந்திழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக் கொடுமுடி யாரே.
08
750 திருமகள் காதலி னானுந் திகழ்தரு மாமலர் மேலைப்
பெருமக னும்மவர் காணாப் பேரழ லாகிய பெம்மான்
மருமலி மென்மலர்ச் சந்து வந்திழி காவிரி மாடே
பருமணி நீர்த்துறை யாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
09
751 புத்தரும் புந்தியி லாத சமணரும் பொய்ம்மொழி யல்லால்
மெய்த்தவம் பேசிட மாட்டார் வேடம் பலபல வற்றால்
சித்தருந் தேவருங் கூடிச் செழுமலர் நல்லன கொண்டு
பத்தர்கள் தாம்பணிந் தேத்தும் பாண்டிக் கொடுமுடி யாரே.
10
752 கலமல்கு தண்கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம் பந்தன்
பலமல்கு வெண்டலை யேந்திப் பாண்டிக் கொடுமுடி தன்னைச்
சொலமல்கு பாடல்கள் பத்துஞ் சொல்ல வல்லார் துயர்தீர்ந்து
நலமல்கு சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே.
11
சுவாமிபெயர் - கொடுமுடிநாதேசுவரர், தேவியார் - பண்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.70 திருப்பிரமபுரம் - திருச்சக்கரமாற்று
பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
753 பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப் பெருநீர்த் தோணி
புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பை
அரன்மன்னு தண்காழி கொச்சை வயமுள்ளிட் டங்காதி யாய
பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலம் நாம்பரவு மூரே.
01
754 வேணுபுரம் பிரமனூர் புகலிபெரு வெங்குரு வெள்ளத் தோங்குந்
தோணிபுரம் பூந்தராய் தூநீர்ச் சிரபுரம் புறவங் காழி
கோணிய கோட்டாற்றுக் கொச்சை வயஞ்சண்பை கூருஞ் செல்வங்
காணிய வையகத்தா ரேத்துங் கழுமலம் நாங்கருது மூரே.
02
755 புகலி சிரபுரம் வேணுபுரஞ் சண்பை புறவங் காழி
நிகரில் பிரமபுரங் கொச்சை வயம்நீர்மேல் நின்ற மூதூர்
அகலிய வெங்குருவோ டந்தண் டராய்அமரர் பெருமாற் கின்பம்
பகரு நகர்நல்ல கழுமலநாங் கைதொழுது பாடு மூரே.
03
756 வெங்குருத் தண்புகலி வேணுபுரஞ் சண்பை வெள்ளங் கொள்ளத்
தொங்கிய தோணிபுரம் பூந்தராய் தொகுபிரம புரந்தொல் காழி
தங்கு பொழிற்புறவங் கொச்சை வயந்தலைபண் டாண்ட மூதூர்
கங்கை சடைமுடிமே லேற்றான் கழுமலநாங் கருது மூரே.
04
757 தொன்னீரில் தோணிபுரம் புகலி வெங்குருத் துயர்தீர் காழி
இன்னீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழிலார் சண்பை
நன்னீர பூம்புறவங் கொச்சை வயஞ்சிலம்ப னகராம் நல்ல
பொன்னீர புன்சடையான் பூந்தண் கழுமலம்நாம் புகழு மூரே.
05
758 தண்ணந் தராய்புகலி தாமரையா னூர்சண்பை தலைமுன் ஆண்ட
அண்ணல்நகர் கொச்சை வயந்தண் புறவஞ்சீர் அணியார் காழி
விண்ணியல்சீர் வெங்குருநல் வேணுபுரந் தோணிபுரம் மேலா லேந்து
கண்ணுதலான் மேவியநற் கழுமலம்நாங் கைதொழுது கருது மூரே.
06
759 சீரார் சிரபுரமுங் கொச்சைவயஞ் சண்பையொடு புறவ நல்ல
ஆராத் தராய்பிரம னூர்புகலி வெங்குருவோ டந்தண் காழி
ஏரார் கழுமலமும் வேணுபுரந் தோணிபுர மென்றென் றுள்கி
பேரால் நெடியவனும் நான்முகனுங் காண்பரிய பெருமா னூரே.
07
760 புறவஞ் சிரபுரமுந் தோணிபுரஞ் சண்பைமிகு புகலி காழி
நறவ மிகுசோலைக் கொச்சை வயந்தராய் நான்முகன் றனூர்
விறலாய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேலம் பெய்து
திறலால் அரக்கனைச்செற் றான்றன் கழுமலம்நாஞ் சேரு மூரே.
08
761 சண்பை பிரமபுரந் தண்புகலி வெங்குருநற் காழி சாயாப்
பண்பார் சிரபுரமுங் கொச்சை வயந்தராய் புறவம் பார்மேல்
நண்பார் கழுமலஞ்சீர் வேணுபுரந் தோணிபுரம் நாணி லாத
வெண்பற் சமணரொடு சாக்கியரை வியப்பழித்த விமல னூரே.
09
762 செழுமலிய பூங்காழி புறவஞ் சிரபுரஞ்சீர்ப் புகலி செய்ய
கொழுமலரான் நன்னகரந் தோணிபுரங் கொச்சைவயஞ் சண்பை யாய
விழுமியசீர் வெங்குருவோ டோ ங்குதராய் வேணுபுரம் மிகுநன் மாடக்
கழுமலமென் றின்னபெயர் பன்னிரண்டுங் கண்ணுதலான் கருது மூரே.
10
763 கொச்சை வயம்பிரம னூர்புகலி வெங்குரு புறவங் காழி
நிச்சல் விழவோவா நீடார் சிரபுரம்நீள் சண்பை மூதூர்
நச்சினிய பூந்தராய் வேணுபுரந் தோணிபுர மாகி நம்மேல்
அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் கழுமலம்நாம் அமரு மூரே.
11
764 காவி மலர்புரையுங் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும்
பாவியசீர்ப் பன்னிரண்டும் நன்னூலாப் பத்திமையாற் பனுவல் மாலை
நாவி னலம்புகழ்சீர் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன
மேவி யிசைமொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்பு ளாரே.
12
றாசனத்திலிருந்தபோது அவ்வரசன் சுவாமிகளை
நோக்கி எந்தவூரென்று வினவ, நாமின்னவூரென்று
திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.71 திருக்குறும்பலா
பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
765 திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவி பாகம்
பொருந்திப் பொருந்தாத வேடத்தாற் காடுறைதல் புரிந்த செல்வர்
இருந்த இடம்வினவில் ஏலங்கமழ் சோலையின் வண்டு யாழ்செய்
குருந்த மணம்நாறுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்ப லாவே.
01
766 நாட்பலவுஞ் சேர்மதியஞ் சூடிப் பொடியணிந்த நம்பான் நம்மை
ஆட்பலவுந் தானுடைய அம்மா னிடம்போலு மந்தண் சாரல்
கீட்பலவுங் கீண்டு கிளைகிளையன் மந்திபாய்ந் துண்டு விண்ட
கோட்பலவின் தீங்கனியை மாக்கடுவ னுண்டுகளுங் குறும்ப லாவே.
02
767 வாடல் தலைமாலை சூடிப் புலித்தோல் வலித்து வீக்கி
ஆட லரவசைத்த அம்மா னிடம்போலு மந்தண் சாரல்
பாடற் பெடைவண்டு போதலர்த்த தாதவிழ்ந்து பசும்பொ னுந்திக்
கோடன் மணங்கமழுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்ப லாவே.
03
768 பால்வெண் மதிசூடிப் பாகத்தோர் பெண்கலந்து பாடி யாடிக்
கால னுடல்கிழியக் காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ் வெற்பில்
நீல மலர்க்குவளை கண்திறக்க வண்டரற்றும் நெடுந்தண் சாரல்
கோல மடமஞ்ஞை பேடையோ டாட்டயருங் குறும்ப லாவே.
04
769 தலைவாண் மதியங் கதிர்விரியத் தண்புனலைத் தாங்கித் தேவி
முலைபாகங் காதலித்த மூர்த்தி யிடம்போலும் முதுவேய் சூழ்ந்த
மலைவாய் அசும்பு பசும்பொன் கொழித்திழியும் மல்கு சாரல்
குலைவாழைத் தீங்கனியும் மாங்கனியுந் தேன்பிலிற்றுங் குறும்ப லாவே.
05
770 நீற்றே துதைந்திலங்கு வெண்ணூலர் தண்மதியர் நெற்றிக் கண்ணர்
கூற்றேர் சிதையக் கடிந்தா ரிடம்போலுங் குளிர்சூழ் வெற்பில்
ஏற்றேனம் ஏன மிவையோ டவைவிரவி யிழிபூஞ் சாரல்
கோற்றேன் இசைமுரலக் கேளாக் குயில்பயிலுங் குறும்ப லாவே.
06
771 பொன்றொத்த கொன்றையும் பிள்ளை மதியும் புனலுஞ் சூடிப்
பின்றொத்த வார்சடையெம் பெம்மா னிடம்போலும் பிலயந் தாங்கி
மன்றத்து மண்முழவம் ஓங்கி மணிகொழித்து வயிரம் உந்திக்
குன்றத் தருவி யயலே புனல்ததும்புங் குறும்ப லாவே.
07
772 ஏந்து திணிதிண்டோ ள் இராவணனை மால்வரைக்கீழ் அடர வூன்றிச்
சாந்தமென நீறணிந்த சைவர் இடம்போலுஞ் சாரற் சாரல்
பூந்தண் நறுவேங்கைக் கொத்திறுத்து மத்தகத்தில் பொலிய ஏந்திக்
கூந்தற் பிடியுங் களிறு முடன்வணங்குங் குறும்ப லாவே.
08
773 அரவின் அணையானும் நான்முகனுங் காண்பரிய அண்ணல் சென்னி
விரவி மதியணிந்த விகிர்தர்க் கிடம்போலும் விரிபூஞ் சாரல்
மரவம் இருகரையும் மல்லிகையுஞ் சண்பகமும் மலர்ந்து மாந்த
குரவம் முறுவல்செய்யுங் குன்றிடஞ்சூழ் தண்சாரல் குறும்ப லாவே.
09
774 மூடிய சீவரத்தர் முன்கூறுண் டேறுதலும் பின்கூ றுண்டு
காடி தொடுசமணைக் காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ் வெற்பில்
நீடுயர் வேய்குனியப் பாய்கடுவன் நீள்கழைமேல் நிருத்தஞ் செய்யக்
கூடிய வேடுவர்கள் கூய்விளியாக் கைமறிக்குங் குறும்ப லாவே.
10
775 கொம்பார்பூஞ் சோலைக் குறும்பலா மேவிய கொல்லேற் றண்ணல்
நம்பான் அடிபரவும் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன
இன்பாய பாட லிவைபத்தும் வல்லார் விரும்பிக் கேட்பார்
தம்பால தீவினைகள் போயகலும் நல்வினைகள் தளரா வன்றே.
11
சுவாமிபெயர் - குறும்பலாநாதர்,
தேவியார் - குழன்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.72 திருநணா
பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
776 பந்தார் விரல்மடவாள் பாகமா
நாகம்பூண் டேற தேறி
அந்தார் அரவணிந்த அம்மா
னிடம்போலும் அந்தண் சாரல்
வந்தார் மடமந்தி கூத்தாட
வார்பொழிலில் வண்டு பாடச்
செந்தேன் தெளியொளிரத் தேமாக்
கனியுதிர்க்குந் திருந ணாவே.
01
777 நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான்
மற்றொருகை வீணை யேந்தி
ஈட்டுந் துயரறுக்கும் எம்மா
னிடம்போலு மிலைசூழ் கானில்
ஓட்டந் தருமருவி வீழும்
விசைகாட்ட முந்தூ ழோசைச்
சேட்டார் மணிகள் அணியுந்
திரைசேர்க்குந் திருந ணாவே.
02
778 நன்றாங் கிசைமொழிந்து நன்னுதலாள்
பாகமாய் ஞால மேத்த
மின்றாங்கு செஞ்சடையெம் விகிதர்க்
கிடம்போலும் விரைசூழ் வெற்பில்
குன்றோங்கி வன்றிரைகள் மோத
மயிலாலுஞ் சாரற் செவ்வி
சென்றோங்கி வானவர்க ளேத்தி
அடிபணியுந் திருந ணாவே.
03
779 கையில் மழுவேந்திக் காலிற்
சிலம்பணிந்து கரித்தோல் கொண்டு
மெய்யில் முழுதணிந்த விகிர்தர்க்
கிடம்போலு மிடைந்து வானோர்
ஐய ரவரெம் பெருமா
னருளென்றென் றாத ரிக்கச்
செய்ய கமலம் பொழிதே
னளித்தியலுந் திருந ணாவே.
04
780 முத்தேர் நகையா ளிடமாகத்
தம்மார்பில் வெண்ணூல் பூண்டு
தொத்தேர் மலர்ச்சடையில் வைத்தா
ரிடம்போலுஞ் சோலை சூழ்ந்த
அத்தேன் அளியுண் களியா
லிசைமுரல ஆலத் தும்பி
தெத்தே யெனமுரலக் கேட்டார்
வினைகெடுக்குந் திருந ணாவே.
05
781 வில்லார் வரையாக மாநாகம்
நாணாக வேடங் கொண்டு
புல்லார் புரமூன் றெரித்தார்க்
கிடம்போலும் புலியு மானும்
அல்லாத சாதிகளு மங்கழல்மேற்
கைகூப்ப அடியார் கூடிச்
செல்லா வருநெறிக்கே செல்ல
அருள்புரியுந் திருந ணாவே.
06
782 கானார் களிற்றுரிவை மேல்மூடி
ஆடரவொன் றரைமேற் சாத்தி
ஊனார் தலையோட்டி லூணுகந்தான்
றானுகந்த கோயி லெங்கும்
நானா விதத்தால் விரதிகள்நன்
னாமமே யேத்தி வாழ்த்தத்
தேனார் மலர்கொண் டடியார்
அடிவணங்குந் திருந ணாவே.
07
783 மன்னீ ரிலங்கையர்தங் கோமான்
வலிதொலைய விரலா லூன்றி
முந்நீர்க் கடல்நஞ்சை யுண்டார்க்
கிடம்போலும் முநனைசேர் சீயம்
அன்னீர் மைகுன்றி அழலால்
விழிகுறைய வழியு முன்றில்
செந்நீர் பரப்பச் சிறந்து
கரியொளிக்குந் திருந ணாவே.
08
784 மையார் மணிமிடறன் மங்கையோர்
பங்குடையான் மனைக டோ றும்
கையார் பலியேற்ற கள்வன்
இடம்போலுங் கழல்கள் நேடிப்
பொய்யா மறையானும் பூமி
யளந்தானும் போற்ற மன்னிச்
செய்யார் எரியாம் உருவ
முறவணங்குந் திருந ணாவே.
09
785 ஆடை யொழித்தங் கமணே
திரிந்துண்பார் அல்லல் பேசி
மூடு உருவம் உகந்தார்
உரையகற்றும் மூர்த்தி கோயில்
ஓடு நதிசேரும் நித்திலமும்
மொய்த்தகிலுங் கரையில் சாரச்
சேடர் சிறந்தேத்தத் தோன்றி
யொளிபெருகுந் திருந ணாவே.
10
786 கல்வித் தகத்தால் திரைசூழ்
கடற்காழிக் கவுணி சீரார்
நல்வித் தகத்தால் இனிதுணரும்
ஞானசம் பந்தன் எண்ணுஞ்
சொல்வித் தகத்தால் இறைவன்
திருநணா ஏத்து பாடல்
வல்வித் தகத்தான் மொழிவார்
பழியிலரிம் மண்ணின் மேலே.
11
காவிரியுடன் சேருமிடமாதலால், பவானிகூடலெனப்
பெயர் வழங்கப்படுகின்றது.
சுவாமிபெயர் - சங்கமுகநாதேசுவரர்,
தேவியார் - வேதமங்கையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.73 திருப்பிரமபுரம் - திருச்சக்கரமாற்று
பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
787 விளங்கியசீர்ப் பிரமனூர் வேணுபுரம்
புகலிவெங் குருமேற் சோலை
வளங்கவருந் தோணிபுரம் பூந்தராய்ச்
சிரபுரம்வண் புறவ மண்மேல்
களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயங்
கொச்சைகழு மலமென் றின்ன
இளங்குமரன் றன்னைப்பெற் றிமையவர்தம்
பகையெறிவித் திறைவ னூரே.
01
788 திருவளருங் கழுமலமே கொச்சைதே
வேந்திரனூர் அயனூர் தெய்வத்
தருவளரும் பொழிற்புறவஞ் சிலம்பனூர்
காழிதகு சண்பை யொண்பா
வுருவளர்வெங் குருப்புகலி யோங்குதராய்
தோணிபுரம் உயர்ந்த தேவர்
வெருவவளர் கடல்விடம துண்டணிகொள்
கண்டத்தோன் விரும்புமூரே.
02
789 வாய்ந்தபுகழ் மறைவளருந் தோணிபுரம்
பூந்தராய் சிலம்பன் வாழூர்
ஏய்ந்தபுற வந்திகழுஞ் சண்பையெழில்
காழியிறை கொச்சை யம்பொன்
வேய்ந்தமதிற் கழுமலம்விண் ணோர்பணிய
மிக்கயனூர் அமரர் கோனூர்
ஆய்ந்தகலை யார்புகலி வெங்குருவ
தரன்நாளும் அமரு மூரே.
03
790 மாமலையாள் கணவன்மகிழ் வெங்குருமாப்
புகலிதராய் தோணிபுரம் வான்
சேமமதில் புடைதிகழுங் கழுமலமே
கொச்சைதே வேந்திரனூர் சீர்ப்
பூமகனூர் பொலிவுடைய புறவம்விறற்
சிலம்பனூர் காழி சண்பை
பாமருவு கலையெட்டெட் டுணர்ந்தவற்றின்
பயன்நுகர்வோர் பரவு மூரே.
04
*தரைத்தேவர் பணிசண்பை தமிழ்க்காழி
791 வயங்கொச்சை தயங்கு பூமேல்
விரைச்சேருங் கழுமலம்மெய் யுணர்ந்தயனூர்
விண்ணவர்தங் கோனூர் வென்றித்
திரைச்சேரும் புனற்புகலி வெங்குருசெல்
வம்பெருகு தோணிபுரஞ் சீர்
உரைசேர்பூந் தராய்சிலம்ப னூர்புறவம்
உலகத்தில் உயர்ந்த வூரே.
05
792 புண்டரிகத் தார்வயல்சூழ் புறவமிகு
சிரபுரம்பூங் காழி சண்பை
எண்டிசையோர் இறைஞ்சியவெங் குருப்புகலி
பூந்தராய் தோணிபுரஞ் சீர்
வண்டமரும் பொழில்மல்கு கழுமலம்நற்
கொச்சைவா னவர்தங் கோனூர்
அண்டயனூ ரிவையென்பர் அருங்கூற்றை
யுதைத்துகந்த அப்ப னூரே.
06
793 வண்மைவளர் வரத்தயனூர் வானவர்தங்
கோனூர்வண் புகலி யிஞ்சி
வெண்மதிசேர் வெங்குருமிக் கோரிறைஞ்சு
சண்பைவியன் காழி கொச்சை
கண்மகிழுங் கழுமலங்கற் றோர்புகழுந்
தோணிபுரம் பூந்தராய் சீர்ப்
பண்மலியுஞ் சிரபுரம்பார் புகழ்புறவம்
பால்வண்ணன் பயிலு மூரே.
07
794 மோடிபுறங் காக்குமூர் புறவஞ்சீர்ச்
சிலம்பனூர் காழி மூதூர்
நீடியலுஞ் சண்பைகழு மலங்கொச்சை
வேணுபுரங் கமல நீடு
கூடியய னூர்வளர்வெங் குருப்புகலி
தராய்தோணி புரங்கூ டப்போர்
தேடியுழல் அவுணர்பயில் திரிபுரங்கள்
செற்றமலைச் சிலைய னூரே.
08
795 இரக்கமுடை யிறையவனூர் தோணிபுரம்
பூந்தராய் சிலம்பன் தன்னூர்
நிரக்கவரு புனற்புறவம் நின்றதவத்
தயனூர்சீர்த் தேவர் கோனூர்
வரக்கரவாப் புகலிவெங் குருமாசி
லாச்சண்பை காழி கொச்சை
அரக்கன்விறல் அழித்தருளி கழுமலமந்
தணர்வேத மறாத வூரே.
09
796 மேலோதுங் கழுமலமெய்த் தவம்வளருங்
கொச்சையிந் திரனூர் மெய்ம்மை
நூலோதும் அயன்றனூர் நுண்ணறிவார்
குருப்புகலி தராய்தூ நீர்மேல்
சேலோடு தோணிபுரந் திகழ்புறவஞ்
சிலம்பனூர் செருச்செய் தன்று
மாலோடும் அயனறியான் வண்காழி
சண்பைமண்ணோர் வாழ்த்து மூரே.
10
797 ஆக்கமர்சீ ரூர்சண்பை காழியமர்
கொச்சைகழு மலமன் பானூர்
ஓக்கமுடைத் தோணிபுரம் பூந்தராய்
சிரபுரமொண் புறவ நண்பார்
பூக்கமலத் தோன்மகிழூர் புரந்தரனூர்
புகலிவெங் குருவு மென்பர்
சாக்கியரோ டமண்கையர் தாமறியா
வகைநின்றான் தங்கு மூரே.
11
798 அக்கரஞ்சேர் தருமனூர் புகலிதராய்
தோணிபுரம் அணிநீர்ப் பொய்கைப்
புக்கரஞ்சேர் புறவஞ்சீர்ச் சிலம்பனூர்
புகழ்க்காழி சண்பை தொல்லூர்
மிக்கரஞ்சீர்க் கழுமலமே கொச்சைவயம்
வேணுபுரம் அயனூர் மேலிச்
சக்கரஞ்சீர்த் தமிழ்விரகன் தான்சொன்ன
தமிழ்தரிப்போர் தவஞ்செய் தோரே.
12
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.74 திருப்பிரமபுரம் - திருக்கோமூத்திரி
பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
799 பூமகனூர் புத்தேளுக் கிறைவனூர்
குறைவிலாப் புகலி பூமேல்
மாமகளூர் வெங்குருநல் தோணிபுரம்
பூந்தராய் வாய்ந்த இஞ்சிச்
சேமமிகு சிரபுரஞ்சீர்ப் புறவநிறை
புகழ்ச்சண்பை காழி கொச்சை
காமனைமுன் காய்ந்தநுதற் கண்ணவனூர்
கழுமலம்நாங் கருது மூரே.
01
800 கருத்துடைய மறையவர்சேர் கழுமலம்மெய்த்
தோணிபுரம் கனக மாட
உருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதரா
யுலகாருங் கொச்சை காழி
திருத்திகழுஞ் சிரபுரந்தே வேந்திரனூர்
செங்கமலத் தயனூர் தெய்வத்
தருத்திகழும் பொழிற்புறவஞ் சண்பைசடை
முடியண்ணல் தங்கு மூரே.
02
801 ஊர்மதியைக் கதுவவுயர் மதிற்சண்பை
யொளிமருவு காழி கொச்சை
கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெய்த்
தோணிபுரங் கற்றோ ரேத்துஞ்
சீர்மருவு பூந்தராய் சிரபுரம்மெய்ப்
புறவம்அய னூர்பூங் கற்பத்
தார்மருவும் இந்திரனூர் புகலிவெங்
குருக்கங்கை தரித்தோ னூரே.
03
802 தரித்தமறை யாளர்மிகு வெங்குருச்சீர்த்
தோணிபுரந் தரியா ரிஞ்சி
எரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபூந்
தராய்புகலி யிமையோர் கோனூர்
தெரித்தபுகழ்ச் சிரபுரஞ்சீர் திகழ்காழி
சண்பைசெழு மறைக ளெல்லாம்
விரித்தபுகழ்ப் புறவம்விரைக் கமலத்தோ
னூருலகில் விளங்கு மூரே.
04
803 விளங்கயனூர் பூந்தராய் மிகுசண்பை
வேணுபுரம் மேக மேய்க்கும்
இளங்கமுகம் பொழிற்றோணி புரங்காழி
யெழிற்புகலி புறவம் ஏரார்
வளங்கவரும் வயற்கொச்சை வெங்குருமாச்
சிரபுரம்வன் னஞ்ச முண்டு
களங்கமலி களத்தவன்சீர்க் கழுமலங்கா
மன்னுடலங் காய்ந்தோ னூரே.
05
804 காய்ந்துவரு காலனையன் றுதைத்தவனூர்
கழுமலமாத் தோணிபுரஞ் சீர்
ஏய்ந்தவெங் குருபுகலி இந்திரனூர்
இருங்கமலத் தயனூர் இன்பம்
வாய்ந்தபுற வந்திகழுஞ் சிரபுரம்பூந்
தராய்கொச்சை காழி சண்பை
சேந்தனைமுன் பயந்துலகில் தேவர்கள்தம்
பகைகெடுத்தோன் திகழு மூரே.
06
805 திகழ்மாட மலிசண்பை பூந்தராய்
பிரமனூர் காழி தேசார்
மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம்
வயங்கொச்சை புறவம் விண்ணோர்
புகழ்புகலி கழுமலஞ்சீர்ச் சிரபுரம்வெங்
குருவெம்போர் மகிடற் செற்று
நிகழ்நீலி நின்மலன்றன் அடியிணைகள்
பணிந்துலகில் நின்ற வூரே.
07
806 நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி
புரநிகழும் வேணு மன்றில்
ஒன்றுகழு மலங்கொச்சை உயர்காழி
சண்பைவளர் புறவ மோடி
சென்றுபுறங் காக்குமூர் சிரபுரம்பூந்
தராய்புகலி தேவர் கோனூர்
வென்றிமலி பிரமபுரம் பூதங்கள்
தாங்காக்க மிக்க வூரே.
08
807 மிக்ககம லத்தயனூர் விளங்குபுற
வஞ்சண்பை காழி கொச்சை
தொக்கபொழிற் கழுமலந்தூத் தோணிபுரம்
பூந்தராய் சிலம்பன் சேரூர்
மைக்கொள்பொழில் வேணுபுரம் மதிற்புகலி
வெங்குருவல் அரக்கன் திண்டோ ள்
ஒக்கஇரு பதுமுடிகள் ஒருபதுமீ
டழித்துகந்த எம்மா னூரே.
09
808 எம்மான்சேர் வெங்குருச்சீர்ச் சிலம்பனூர்
கழுமலநற் புகலி யென்றும்
பொய்ம்மாண்பி லோர்புறவங் கொச்சைபுரந்
தரனூர்நற் றோணிபுரம் போர்க்
கைம்மாவை யுரிசெய்தோன் காழியய
னூர்தராய் சண்பை காரின்
மெய்ம்மால்பூ மகனுணரா வகைதழலாய்
விளங்கியஎம் இறைவ னூரே.
10
809 இறைவனமர் சண்பையெழிற் புறவம்அய
னூர்இமையோர்க் கதிபன் சேரூர்
குறைவில்புகழ்ப் புகலிவெங் குருத்தோணி
புரங்குணமார் பூந்தராய் நீர்ச்
சிறைமலிநற் சிரபுரஞ்சீர்க் காழிவளர்
கொச்சைகழு மலந்தே சின்றிப்
பறிதலையோ டமண்கையர் சாக்கியர்கள்
பரிசறியா அம்மா னூரே.
11
810 அம்மான்சேர் கழுமலமாச் சிரபுரம்வெங்
குருக்கொச்சை புறவ மஞ்சீர்
மெய்ம்மானத் தொண்புகலி மிகுகாழி
தோணிபுரந் தேவர் கோனூர்
அம்மான்மன் னுயர்சண்பை தராய்அயனூர்
வழிமுடக்கு மாவின் பாச்சல்
தம்மானொன் றியஞான சம்பந்தன்
தமிழ்கற்போர் தக்கோர் தாமே.
12
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.75 சீகாழி
பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
811 விண்ணி யங்குமதிக் கண்ணியான்விரி யுஞ்சடைப்
பெண்ண யங்கொள்திரு மேனியான்பெரு மானனற்
கண்ண யங்கொள்திரு நெற்றியான்கலிக் காழியுள்
மண்ண யங்கொள்மறை யாளரேத்துமலர்ப் பாதனே.
01
812 வலிய காலனுயிர் வீட்டினான்மட வாளொடும்
பலிவி ரும்பியதோர் கையினான்பர மேட்டியான்
கலியை வென்றமறை யாளர்தங்கலிக் காழியுள்
நலிய வந்தவினை தீர்த்துகந்தஎம் நம்பனே.
02
813 சுற்ற லாநற்புலித் தோலசைத்தயன் வெண்டலைத்
துற்ற லாயதொரு கொள்கையான்சுடு நீற்றினான்
கற்றல் கேட்டலுடை யார்கள்வாழ்கலிக் காழியுள்
மற்ற யங்குதிரள் தோளெம்மைந்தனவன் அல்லனே.
03
814 பல்ல யங்குதலை யேந்தினான்படு கானிடை
மல்ல யங்குதிரள் தோள்களாரநட மாடியுங்
கல்ல யங்குதிரை சூழநீள்கலிக் காழியுள்
தொல்ல யங்குபுகழ் பேணநின்றசுடர் வண்ணனே.
04
815 தூந யங்கொள்திரு மேனியிற்பொடிப் பூசிப்போய்
நாந யங்கொள்மறை யோதிமாதொரு பாகமாக்
கான யங்கொள்புனல் வாசமார்கலிக் காழியுள்
தேன யங்கொள்முடி ஆனைந்தாடிய செல்வனே.
05
816 சுழியி லங்கும்புனற் கங்கையாள்சடை யாகவே
மொழியி லங்கும்மட மங்கைபாகம் உகந்தவன்
கழியி லங்குங்கடல் சூழுந்தண்கலிக் காழியுள்
பழியி லங்குந்துய ரொன்றிலாப்பர மேட்டியே.
06
817 முடியி லங்கும்உயர் சிந்தையான்முனி வர்தொழ
அடியி லங்குங்கழ லார்க்கவேயன லேந்தியுங்
கடியி லங்கும்பொழில் சூழுந்தண்கலிக் காழியுள்
கொடியி லங்கும்மிடை யாளொடுங்குடி கொண்டதே.
07
818 வல்ல ரக்கன்வரை பேர்க்கவந்தவன் தோள்முடி
கல்ல ரக்கிவ்விறல் வாட்டினான்கலிக் காழியுள்
நல்லொ ருக்கியதோர் சிந்தையார்மலர் தூவவே
தொல்லி ருக்குமறை யேத்துகந்துடன் வாழுமே.
08
819 மருவு நான்மறை யோனுமாமணி வண்ணனும்
இருவர் கூடியிசைந் தேத்தவேயெரி யான்றனூர்
வெருவ நின்றதிரை யோதமார்வியன் முத்தவை
கருவை யார்வயற் சங்குசேர்கலிக் காழியே.
09
820 நன்றி யொன்றுமுண ராதவன்சமண் சாக்கியர்
அன்றி யங்கவர் சொன்னசொல்லவை கொள்கிலான்
கன்று மேதியிளங் கானல்வாழ்கலிக் காழியுள்
வென்றி சேர்வியன் கோயில்கொண்டவிடை யாளனே.
10
821 கண்ணு மூன்றுமுடை யாதிவாழ்கலிக் காழியுள்
அண்ண லந்தண்ணருள் பேணிஞானசம் பந்தன்சொல்
வண்ண மூன்றுந்தமி ழிற்றெரிந்திசை பாடுவார்
விண்ணு மண்ணும்விரி கின்றதொல்புக ழாளரே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.76 திருஅகத்தியான்பள்ளி
பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
822 வாடிய வெண்டலை மாலைசூடி வயங்கிருள்
நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி
ஆடிய எம்பெரு மான்அகத்தியான் பள்ளியைப்
பாடிய சிந்தையி னார்கட்கில்லையாம் பாவமே.
01
823 துன்னங் கொண்டவுடை யான்துதைந்தவெண் ணீற்றினான்
மன்னுங் கொன்றைமத மத்தஞ்சூடினான் மாநகர்
அன்னந் தங்கும்பொழில் சூழ்அகத்தியான் பள்ளியை
உன்னஞ் செய்தமனத் தார்கள்தம்வினை யோடுமே.
02
824 உடுத்ததுவும் புலித்தோல் பலிதிரிந் துண்பதுங்
கடுத்துவந்த கழற்காலன் தன்னையுங் காலினால்
அடுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
தொடுத்தது வுஞ்சரம் முப்புரந் துகளாகவே.
03
825 காய்ந்ததுவு மன்றுகாமனை நெற்றிக் கண்ணினால்
பாய்ந்ததுவுங் கழற்காலனைப் பண்ணி னான்மறை
ஆய்ந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
ஏய்ந்ததுவு மிமவான் மகளொரு பாகமே.
04
826 போர்த்ததுவுங் கரியின் னுரிபுலித் தோலுடை
கூர்த்ததோர் வெண்மழு வேந்திக்கோளர வம்மரைக்
கார்த்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
பார்த்ததுவும் மரணம் படரெரி மூழ்கவே.
05
827 தெரிந்ததுவுங் கணையொன்று முப்புரஞ் சென்றுடன்
எரிந்ததுவும் முன்னெழிலார் மலருறை வான்றலை
அரிந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
புரிந்ததுவும் முமையாளொர் பாகம் புனைதலே.
06
828 ஓதியெல்லாம் உலகுக்கோர் ஒண்பொரு ளாகிமெய்ச்
சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும்
ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை
நீதியால் தொழுவார் அவர்வினை நீங்குமே.
07
829 செறுத்ததுவுந் தக்கன் வேள்வியைத்திருந் தார்புரம்
ஒறுத்ததுவும் ஒளிமா மலருறை வான்சிரம்
அறுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
இறுத்ததுவும் அரக்கன்றன் தோள்கள் இருபதே.
08
830 சிரமுநல்ல மதிமத்த முந்திகழ் கொன்றையும்
அரவுமல்குஞ் சடையான் அகத்தியான் பள்ளியைப்
பிரமனோடு திருமாலுந் தேடிய பெற்றிமை
பரவவல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே.
09
831 செந்துவ ராடையி னாரும்வெற்றரை யேதிரி
புந்தியி லார்களும் பேசும்பேச்சவை பொய்ம்மொழி
அந்தணன் எங்கள்பி ரான்அகத்தியான் பள்ளியைச்
சிந்திமின் நும்வினை யானவைசிதைந் தோடுமே.
10
832 ஞால மல்குந்தமிழ் ஞானசம்பந்தன் மாமயில்
ஆலுஞ் சோலைபுடை சூழ்அகத்தியான் பள்ளியுள்
சூல நல்லபடை யான்அடிதொழு தேத்திய
மாலை வல்லாரவர் தங்கள்மேல்வினை மாயுமே.
11
சுவாமிபெயர் - அகத்தீசுவரர்,
தேவியார் - மங்கைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.77 திருஅறையணிநல்லூர்
பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
833 பீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெடத் தீதிலா
வீடினாலுயர்ந் தார்களும் வீடிலாரிள வெண்மதி
சூடினார்மறை பாடினார் சுடலைநீறணிந் தாரழல்
ஆடினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே.
01
834 இலையினார்சூலம் ஏறுகந் தேறியேயிமை யோர்தொழ
நிலையினாலொரு காலுறச் சிலையினால்மதி லெய்தவன்
அலையினார்புனல் சூடிய அண்ணலாரறை யணிநல்லூர்
தலையினாற்றொழு தோங்குவார் நீங்குவார்தடு மாற்றமே.
02
835 என்பினார்கனல் சூலத்தார் இலங்குமாமதி யுச்சியான்
பின்பினார்பிறங் குஞ்சடைப் பிஞ்ஞகன்பிறப் பிலியென்று
முன்பினார்மூவர் தாந்தொழு முக்கண்மூர்த்திதன் தாள்களுக்
கன்பினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே.
03
836 விரவுநீறுபொன் மார்பினில் விளங்கப்பூசிய வேதியன்
உரவுநஞ்சமு தாகவுண் டுறுதிபேணுவ தன்றியும்
அரவுநீள்சடைக் கண்ணியார் அண்ணலாரறை யணிநல்லூர்
பரவுவார்பழி நீங்கிடப் பறையுந்தாஞ்செய்த பாவமே.
04
837 தீயினார்திகழ் மேனியாய் தேவர்தாந்தொழும் தேவன்நீ
ஆயினாய்கொன்றை யாய்அன லங்கையாயறை யணிநல்லூர்
மேயினார்தம தொல்வினை வீட்டினாய்வெய்ய காலனைப்
பாயினாயெதிர் கழலினாய் பரமனேயடி பணிவனே.
05
838 விரையினார்கொன்றை சூடியும் வேகநாகமும் வீக்கிய
அரையினாரறை யணிநல்லூர் அண்ணலாரழ காயதோர்
நரையினார்விடை யூர்தியார் நக்கனார்நறும் போதுசேர்
உரையினாலுயர்ந் தார்களும் உரையினாலுயர்ந் தார்களே.
06
839 வீரமாகிய வேதியர் வேகமாகளி யானையின்
ஈரமாகிய வுரிவைபோர்த் தரிவைமேற்சென்ற எம்மிறை
ஆரமாகிய பாம்பினார் அண்ணலாரறை யணிநல்லூர்
வாரமாய்நினைப் பார்கள்தம் வல்வினையவை மாயுமே.
07
840 தக்கனார்பெரு வேள்வியைத் தகர்த்துகந்தவன் தாழ்சடை
முக்கணான்மறை பாடிய முறைமையான்முனி வர்தொழ
அக்கினோடெழில் ஆமைபூண் அண்ணலாரறை யணிநல்லூர்
நக்கனாரவர் சார்வலால் நல்குசார்விலோம் நாங்களே.
08
841 வெய்யநோயிலர் தீதிலர் வெறியராய்ப்பிறர் பின்செலார்
செய்வதேயலங் காரமாம் இவையிவைதேறி யின்புறில்
ஐயமேற்றுணுந் தொழிலராம் அண்ணலாரறை யணிநல்லூர்ச்
சைவனாரவர் சார்வலால் யாதுஞ்சார்விலோம் நாங்களே.
09
842 வாக்கியஞ்சொல்லி யாரொடும் வகையலாவகை செய்யன்மின்
சாக்கியஞ்சம ணென்றிவை சாரேலும்மர ணம்பொடி
ஆக்கியம்மழு வாட்படை அண்ணலாரறை யணிநல்லூர்ப்
பாக்கியங்குறை யுடையீரேற் பறையுமாஞ்செய்த பாவமே.
10
843 கழியுலாங்கடற் கானல்சூழ் கழுமலம்அமர் தொல்பதிப்
பழியிலாமறை ஞானசம் பந்தன்நல்லதோர் பண்பினார்
மொழியினாலறை யணிநல்லூர் முக்கண்மூர்த்திதன் தாள்தொழக்
கெழுவினாரவர் தம்மொடுங் கேடில்வாழ்பதி பெறுவரே.
11
சுவாமிபெயர் - அறையணிநாதேசுவரர், தேவியார் - அருள்நாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.78 திருவிளநகர்
பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
844 ஒளிரிளம்பிறை சென்னிமேல் உடையர் கோவணஆடையர்
குளிரிளம்மழை தவழ்பொழிற் கோலநீர்மல்கு காவிரி
நளிரிளம்புனல் வார்துறை நங்கைகங்கையை நண்ணினார்
மிளிரிளம்பொறி அரவினார் மேயதுவிள நகரதே.
01
845 அக்கரவ்வணி கலனென அதனொடார்த்ததோர் ஆமைபூண்
டுக்கவர்சுடு நீறணிந் தொளிமல்குபுனற் காவிரிப்
புக்கவர்துயர் கெடுகெனப் பூசுவெண்பொடி மேவிய
மிக்கவர்வழி பாடுசெய் விளநகரவர் மேயதே.
02
846 வாளிசேரடங் கார்மதில் தொலையநூறிய வம்பின்வேய்த்
தோளிபாகம் அமர்ந்தவர் உயர்ந்ததொல்கடல் நஞ்சுண்ட
காளமல்கிய கண்டத்தர் கதிர்விரிசுடர் முடியினர்
மீளியேறுகந் தேறினார் மேயதுவிள நகரதே.
03
847 கால்விளங்கெரி கழலினார் கையிளங்கிய வேலினார்
நூல்விளங்கிய மார்பினார் நோயிலார்பிறப் பும்மிலார்
மால்விளங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்
மேல்விளங்குவெண் பிறையினார் மேயதுவிள நகரதே.
04
848 பன்னினார்மறை பாடினார் பாயசீர்ப்பழங் காவிரித்
துன்னுதண்டுறை முன்னினார் தூநெறிபெறு வாரெனச்
சென்னிதிங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார்
மின்னுபொன்புரி நூலினார் மேயதுவிள நகரதே.
05
849 தேவரும்மம ரர்களுந் திசைகள்மேலுள தெய்வமும்
யாவரும்மறி யாததோர் அமைதியாற்றழ லுருவினார்
மூவரும்மிவ ரென்னவும் முதல்வரும்மிவ ரென்னவும்
மேவரும்பொரு ளாயினார் மேயதுவிள நகரதே.
06
850 சொற்றரும்மறை பாடினார் சுடர்விடுஞ் சடைமுடியினார்
கற்றருவ்வடங் கையினார் காவிரித்துறை காட்டினார்
மற்றருந்திரள் தோளினார் மாசில்வெண்பொடிப் பூசினார்
விற்றரும்மணி மிடறினார் மேயதுவிள நகரதே.
07
851 படர்தருஞ்சடை முடியினார் பைங்கழல்லடி பரவுவார்
அடர்தரும்பிணி கெடுகென அருளுவாரர வரையினார்
விடர்தரும்மணி மிடறினார் மின்னுபொன்புரி நூலினார்
மிடறரும்படை மழுவினார் மேயதுவிள நகரதே.
08
852 கையிலங்கிய வேலினார் தோலினார்கரி காலினார்
பையிலங்கர வல்குலாள் பாகமாகிய பரமனார்
மையிலங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்
மெய்யிலங்குவெண் ணீற்றினார் மேயதுவிள நகரதே.
09
853 உள்ளதன்றனைக் காண்பன்கீ ழென்றமாமணி வண்ணனும்
உள்ளதன்றனைக் காண்பன்மே லென்றமாமலர் அண்ணலும்
உள்ளதன்றனைக் கண்டிலார் ஒளியார்தருஞ்சடை முடியின்மேல்
உள்ளதன்றனைக் கண்டிலா வொளியார்விளநகர் மேயதே.
10
854 மென்சிறைவண் டியாழ்முரல் விளநகர்த்துறை மேவிய
நன்பிறைநுதல் அண்ணலைச் சண்பைஞானசம் பந்தன்சீர்
இன்புறுந்தமி ழாற்சொன்ன ஏத்துவார்வினை நீங்கிப்போய்த்
துன்புறுந் துயரம்மிலாத் தூநெறிபெறு வார்களே.
11
சுவாமிபெயர் - துறைகாட்டும்வள்ளநாதர், தேவியார் - தோழியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.79 திருவாரூர்
பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
855 கவனமாய்ச் சோடையாய் நாவெழாப்
பஞ்சுதோய்ச் சட்ட வுண்டு
சிவனதாட் சிந்தியாப் பேதைமார்
போலநீ வெள்கி னாயே
கவனமாய்ப் பாய்வதோர் ஏறுகந்
தேறிய காள கண்டன்
அவனதா ரூர்தொழு துய்யலாம்
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
01
856 தந்தையார் போயினார் தாயரும்
போயினார் தாமும் போவார்
கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார்
பார்க்கின்றார் கொண்டு போவார்
எந்தநாள் வாழ்வதற் கேமனம்
வைத்தியால் ஏழை நெஞ்சே
அந்தணா ரூர்தொழு துய்யலா
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
02
857 நிணங்குடர் தோல்நரம் பென்புசேர்
ஆக்கைதான் நிலாய தன்றால்
குணங்களார்க் கல்லது குற்றம்நீங்
காதெனக் குலுங்கி னாயே
வணங்குவார் வானவர் தானவர்
வைகலும் மனங்கொ டேத்தும்
அணங்கனா ரூர்தொழு துய்யலாம்
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
03
858 நீதியால் வாழ்கிலை நாள்செலா
நின்றன நித்த நோய்கள்
வாதியா ஆதலால் நாளும்நாள்
இன்பமே மருவி னாயே
சாதியார் கின்னரர் தருமனும்
வருணனும் ஏத்து முக்கண்
ஆதியா ரூர்தொழு துய்யலாம்
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
04
859 பிறவியால் வருவன கேடுள
ஆதலாற் பெரிய இன்பத்
துறவியார்க் கல்லது துன்பம்நீங்
காதெனத் தூங்கி னாயே
மறவல்நீ மார்க்கமே நண்ணினாய்
தீர்த்தநீர் மல்கு சென்னி
அறவனா ரூர்தொழு துய்யலாம்
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
05
860 செடிகொள்நோ யாக்கையம் பாம்பின்வாய்த்
தேரையாய்ச் சிறு பறவை
கடிகொள்பூந் தேன்சுவைத் தின்புற
லாமென்று கருதி னாயே
முடிகளால் வானவர் முன்பணிந்
தன்பரா யேத்து முக்கண்
அடிகளா ரூர்தொழு துய்யலாம்
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
06
861 ஏறுமால் யானையே சிவிகையந்
தளகமீச் சேர்ப்பி வட்டில்
மாறிவா ழுடம்பினார் படுவதோர்
நடலைக்கு மயங்கி னாயே
மாறிலா வனமுலை மங்கையோர்
பங்கினர் மதியம் வைத்த
ஆறனா ரூர்தொழு துய்யலாம்
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
07
862 என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண்
சுவரெறிந் திதுநம் இல்லம்
புன்புலால் நாறுதோல் போர்த்துப்பொல்
லாமையான் முகடு கொண்டு
முன்பெலாம் ஒன்பது வாய்தலார்
குரம்பையின் மூழ்கி டாதே
அன்பனா ரூர்தொழு துய்யலாம்
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
08
863 தந்தைதாய் தன்னுடன் தோன்றினார்
புத்திரர் தார மென்னும்
பந்தம்நீங் காதவர்க் குய்ந்துபோக்
கில்லெனப் பற்றி னாயே
வெந்தநீ றாடியார் ஆதியார்
சோதியார் வேத கீதர்
எந்தையா ரூர்தொழு துய்யலாம்
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
09
864 நெடியமால் பிரமனும் நீண்டுமண்
ணிடந்தின்னம் நேடிக் காணாப்
படியனார் பவளம்போல் உருவனார்
பனிவளர் மலையாள் பாக
வடிவனார் மதிபொதி சடையனார்
மணியணி கண்டத் தெண்டோ ள்
அடிகளா ரூர்தொழு துய்யலாம்
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
10
865 பல்லிதழ் மாதவி அல்லிவண்
டியாழ்செயுங் காழி யூரன்
நல்லவே நல்லவே சொல்லிய
ஞானசம் பந்தன் ஆரூர்
எல்லியம் போதெரி யாடுமெம்
மீசனை யேத்து பாடல்
சொல்லவே வல்லவர் தீதிலார்
ஓதநீர் வைய கத்தே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.80 திருக்கடவூர்மயானம்
பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
866 வரிய மறையார் பிறையார் மலையோர் சிலையா வணக்கி
எரிய மதில்கள் எய்தார் எறியு முசலம் உடையார்
கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பெரிய விடைமேல் வருவா ரவரெம் பெருமான் அடிகளே.
01
867 மங்கை மணந்த மார்பர் மழுவாள் வலனொன் றேந்திக்
கங்கை சடையிற் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார்
செங்கண் வெள்ளே றேறிச் செல்வஞ் செய்யா வருவார்
அங்கை யேறிய மறியார் அவரெம் பெருமான் அடிகளே.
02
868 ஈட லிடபம் இசைய ஏறி மழுவொன் றேந்திக்
காட திடமா வுடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பாட லிசைகொள் கருவி படுதம் பலவும் பயில்வார்
ஆட லரவம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே.
03
869 இறைநின் றிலங்கு வளையாள் இளையா ளொருபா லுடையார்
மறைநின் றிலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார்
கறைநின் றிலங்கு பொழில்சூழ் கடவூர் மயானம் அமர்ந்தார்
பிறைநின் றிலங்கு சடையார் அவரெம் பெருமான் அடிகளே.
04
870 வெள்ளை யெருத்தின் மிசையார் விரிதோ டொருகா திலங்கத்
துள்ளு மிளமான் மறியார் சுடர்பொற் சடைகள் துளங்கக்
கள்ள நகுவெண் டலையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பிள்ளை மதியம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே.
05
871 பொன்றா துதிரு மணங்கொள் புனைபூங் கொன்றை புனைந்தார்
ஒன்றா வெள்ளே றுயர்த்த துடையா ரதுவே யூர்வார்
கன்றா வினஞ்சூழ் புறவிற் கடவூர் மயானம் அமர்ந்தார்
பின்றாழ் சடையார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே.
06
872 பாச மான களைவார் பரிவார்க் கமுதம் அனையார்
ஆசை தீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார்
காசை மலர்போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பேச வருவார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே.
07
873 செற்ற அரக்கன் அலறத் திகழ்சே வடிமெல் விரலாற்
கற்குன் றடர்த்த பெருமான் கடவூர் மயானம் அமர்ந்தார்
மற்றொன் றிணையில் வலிய மாசில் வெள்ளி மலைபோல்
பெற்றொன் றேறி வருவார் அவரெம் பெருமான் அடிகளே.
08
874 வருமா கரியின் உரியார் வளர்புன் சடையார் விடையார்
கருமான் உரிதோல் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
திருமா லொடுநான் முகனுந் தேர்ந்துங் காணமுன் ஒண்ணாப்
பெருமா னெனவும் வருவார் அவரெம் பெருமான் அடிகளே.
09
875 தூய விடைமேல் வருவார் துன்னா ருடைய மதில்கள்
காய வேவச் செற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்
தீய கருமஞ் சொல்லுஞ் சிறுபுன் தேரர் அமணர்
பேய்பே யென்ன வருவார் அவரெம் பெருமான் அடிகளே.
10
876 மரவம் பொழில்சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த
அரவ மசைத்த பெருமான் அகலம் அறிய லாகப்
பரவு முறையே பயிலும் பந்தன் செஞ்சொல் மாலை
இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே.
11
சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர், தேவியார் - மலர்க்குழல்மின்னம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.81 திருவேணுபுரம்
பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
877 பூதத்தின் படையினீர் பூங்கொன்றைத் தாரினீர்
ஓதத்தின் ஒலியோடும் உம்பர்வா னவர்புகுந்து
வேதத்தின் இசைபாடி விரைமலர்கள் சொரிந்தேத்தும்
பாதத்தீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.
01
878 சுடுகாடு மேவினீர் துன்னம்பெய் கோவணந்தோல்
உடையாடை யதுகொண்டீர் உமையாளை யொருபாகம்
அடையாளம் அதுகொண்டீர் அங்கையினிற் பரசுவெனும்
படையாள்வீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.
02
879 கங்கைசேர் சடைமுடியீர் காலனைமுன் செற்றுகந்தீர்
திங்களோ டிளஅரவந் திகழ்சென்னி வைத்துகந்தீர்
மங்கையோர் கூறுடையீர் மறையோர்கள் நிறைந்தேத்தப்
பங்கயஞ்சேர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.
03
880 நீர்கொண்ட சடைமுடிமேல் நீள்மதியம் பாம்பினொடும்
ஏர்கொண்ட கொன்றையினோ டெழில்மத்தம் இலங்கவே
சீர்கொண்ட மாளிகைமேற் சேயிழையார் வாழ்த்துரைப்பக்
கார்கொண்ட வேணுபுரம் பதியாகக் கலந்தீரே.
04
881 ஆலைசேர் தண்கழனி அழகாக நறவுண்டு
சோலைசேர் வண்டினங்கள் இசைபாடத் தூமொழியார்
காலையே புகுந்திறைஞ்சிக் கைதொழமெய் மாதினொடும்
பாலையாழ் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.
05
882 மணிமல்கு மால்வரைமேல் மாதினொடு மகிழ்ந்திருந்தீர்
துணிமல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டுகந்தீர்
பணிமல்கு மறையோர்கள் பரிந்திறைஞ்ச வேணுபுரத்
தணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.
06
883 நீலஞ்சேர் மிடற்றினீர் நீண்டசெஞ் சடையினீர்
கோலஞ்சேர் விடையினீர் கொடுங்காலன் தனைச்செற்றீர்
ஆலஞ்சேர் கழனியழ கார்வேணு புரம்அமருங்
கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே.
07
884 இரைமண்டிச் சங்கேறுங் கடல்சூழ்தென் னிலங்கையர்கோன்
விரைமண்டு முடிநெரிய விரல்வைத்தீர் வரைதன்னிற்
கரைகண்டிப் பேரோதங் கலந்தெற்றுங் கடற்கவினார்
விரைமண்டு வேணுபுர மேயமர்ந்து மிக்கீரே.
08
885 தீயோம்பு மறைவாணர்க் காதியாந் திசைமுகன்மால்
போயோங்கி யிழிந்தாரும் போற்றரிய திருவடியீர்
பாயோங்கு மரக்கலங்கள் படுதிரையால் மொத்துண்டு
சேயோங்கு வேணுபுரஞ் செழும்பதியாத் திகழ்ந்தீரே.
09
886 நிலையார்ந்த வுண்டியினர் நெடுங்குண்டர் சாக்கியர்கள்
புலையானார் அறவுரையைப் போற்றாதுன் பொன்னடியே
நிலையாகப் பேணிநீ சரணென்றார் தமையென்றும்
விலையாக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே.
10
இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.82 திருத்தேவூர்
பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
887 பண்ணி லாவிய மொழியுமை பங்கனெம் பெருமான்
விண்ணில் வானவர் கோன்விம லன்விடை யூர்தி
தெண்ணி லாமதி தவழ்தரு மாளிகைத் தேவூர்
அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லலொன் றிலமே.
01
888 ஓதி மண்டலத் தோர்முழு துய்யவெற் பேறு
சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூநீர்த்
தீதில் பங்கயந் தெரிவையர் முகமலர் தேவூர்
ஆதி சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.
02
889 மறைக ளான்மிக வழிபடு மாணியைக் கொல்வான்
கறுவு கொண்டவக் காலனைக் காய்ந்தவெங் கடவுள்
செறுவில் வாளைகள் சேலவை பொருவயல் தேவூர்
அறவன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.
03
890 முத்தன் சில்பலிக் கூர்தொறும் முறைமுறை திரியும்
பித்தன் செஞ்சடைப் பிஞ்ஞகன் தன்னடி யார்கள்
சித்தன் மாளிகை செழுமதி தவழ்பொழில் தேவூர்
அத்தன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.
04
891 பாடு வாரிசை பல்பொருட் பயனுகந் தன்பால்
கூடு வார்துணைக் கொண்டதம் பற்றறப் பற்றித்
தேடு வார்பொரு ளானவன் செறிபொழில் தேவூர்
ஆடு வானடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.
05
892 பொங்கு பூண்முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின்
மங்கை பங்கினன் கங்கையை வளர்சடை வைத்தான்
திங்கள் சூடிய தீநிறக் கடவுள்தென் தேவூர்
அங்க ணன்றனை அடைந்தனம் அல்லலொன் றிலமே.
06
893 வன்பு யத்தவத் தானவர் புரங்களை யெரியத்
தன்பு யத்துறத் தடவரை வளைத்தவன் தக்க
தென்ற மிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்
அன்பன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.
07
894 தருவு யர்ந்தவெற் பெடுத்தவத் தசமுகன் நெரிந்து
வெருவ வூன்றிய திருவிரல் நெகிழ்த்துவாள் பணித்தான்
தெருவு தோறும்நல் தென்றல்வந் துலவிய தேவூர்
அரவு சூடியை அடைந்தனம் அல்லலொன் றிலமே.
08
895 முந்திக் கண்ணனும் நான்முக னும்மவர் காணா
எந்தை திண்டிறல் இருங்களி றுரித்தவெம் பெருமான்
செந்தி னத்திசை யறுபத முரல்திருத் தேவூர்
அந்தி வண்ணனை யடைந்தனம் அல்லலொன் றிலமே.
09
896 பாறு புத்தருந் தவமணி சமணரும் பலநாள்
கூறி வைத்ததோர் குறியினைப் பிழையெனக் கொண்டு
தேறி மிக்கநஞ் செஞ்சடைக் கடவுள்தென் தேவூர்
ஆறு சூடியை யடைந்தனம் அல்லலொன் றிலமே.
10
897 அல்ல லின்றிவிண் ணாள்வர்கள் காழியர்க் கதிபன்
நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம் பந்தன்
எல்லை யில்புகழ் மல்கிய எழில்வளர் தேவூர்த்
தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும் வல்லாரே.
11
சுவாமிபெயர் - தேவகுருநாதர், தேவியார் - தேன்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.83 திருக்கொச்சைவயம்
பண் - பியந்தைக்காந்தாரம்திருச்சிற்றம்பலம்
898 நீலநன் மாமிடற்றன் இறைவன் சினத்த
நெடுமா வுரித்த நிகரில்
சேலன கண்ணிவண்ணம் ஒருகூ றுருக்கொள்
திகழ்தேவன் மேவு பதிதான்
வேலன கண்ணிமார்கள் விளையாடு மோசை
விழவோசை வேத வொலியின்
சாலநல் வேலையோசை தருமாட வீதி
கொடியாடு கொச்சை வயமே.
01
899 விடையுடை யப்பனொப்பில் நடமாட வல்ல
விகிர்தத் துருக்கொள் விமலன்
சடையிடை வெள்ளெருக்க மலர்கங்கை திங்கள்
தகவைத்த சோதிபதி தான்
மடையிடை யன்னமெங்கும் நிறையப் பரந்து
கமலத்து வைகும் வயல்சூழ்
கொடையுடை வண்கையாளர் மறையோர்க ளென்றும்
வளர்கின்ற கொச்சை வயமே.
02
900 படவர வாடுமுன்கை யுடையா னிடும்பை
களைவிக்கும் எங்கள் பரமன்
இடமுடை வெண்டலைக்கை பலிகொள்ளு மின்பன்
இடமாய வேர்கொள் பதிதான்
நடமிட மஞ்ஞைவண்டு மதுவுண்டு பாடும்
நளிர்சோலை கோலு கனகக்
குடமிடு கூடமேறி வளர்பூவை நல்ல
மறையோது கொச்சை வயமே.
03
901 எண்டிசை பாலரெங்கும் இகலிப் புகுந்து
முயல்வுற்ற சிந்தை முடுகி
பண்டொளி தீபமாலை யிடுதூப மோடு
பணிவுற்ற பாதர் பதிதான்
மண்டிய வண்டன்மிண்டி வரும்நீர பொன்னி
வயல்பாய வாளை குழுமிக்
குண்டகழ் பாயுமோசை படைநீட தென்ன
வளர்கின்ற கொச்சை வயமே.
04
902 பனிவளர் மாமலைக்கு மருகன் குபேர
னொடுதோழ மைக்கொள் பகவன்
இனியன அல்லவற்றை யினிதாக நல்கும்
இறைவன் இடங்கொள் பதிதான்
முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்க ளோமம்
வளர்தூம மோடி யணவிக்
குனிமதி மூடிநீடும் உயர்வான் மறைத்து
நிறைகின்ற கொச்சை வயமே.
05
903 புலியதள் கோவணங்கள் உடையாடை யாக
வுடையான் நினைக்கு மளவில்
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன்
நலமா இருந்த நகர்தான்
கலிகெட அந்தணாளர் கலைமேவு சிந்தை
யுடையார் நிறைந்து வளரப்
பொலிதரு மண்டபங்கள் உயர்மாட நீடு
வரைமேவு கொச்சை வயமே.
06
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
07
904 மழைமுகில் போலுமேனி யடல்வா ளரக்கன்
முடியோடு தோள்கள் நெரியப்
பிழைகெட மாமலர்ப்பொன் அடிவைத்த பேயொ
டுடனாடி மேய பதிதான்
இழைவள ரல்குல்மாதர் இசைபாடி யாட
விடுமூச லன்ன கமுகின்
குழைதரு கண்ணிவிண்ணில் வருவார்கள் தங்கள்
அடிதேடு கொச்சை வயமே.
08
905 வண்டமர் பங்கயத்து வளர்வானும் வையம்
முழுதுண்ட மாலும் இகலிக்
கண்டிட வொண்ணுமென்று கிளறிப் பறந்தும்
அறியாத சோதி பதிதான்
நண்டுண நாரைசெந்நெல் நடுவே யிருந்து
விரைதேரப் போது மடுவிற்
புண்டரி கங்களோடு குமுதம் மலர்ந்து
வயல்மேவு கொச்சை வயமே.
09
906 கையினி லுண்டுமேனி யுதிர்மாசர் குண்டர்
இடுசீவ ரத்தி னுடையார்
மெய்யுரை யாதவண்ணம் விளையாட வல்ல
விகிர்தத் துருக்கொள் விமலன்
பையுடை நாகவாயில் எயிறார மிக்க
குரவம் பயின்று மலரச்
செய்யினில் நீலமொட்டு விரியக் கமழ்ந்து
மணநாறு கொச்சை வயமே.
10
907 இறைவனை ஒப்பிலாத ஒளிமேனி யானை
உலகங்க ளேழு முடனே
மறைதரு வெள்ளமேறி வளர்கோயில் மன்னி
இனிதா இருந்த மணியைக்
குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த
தமிழ்மாலை பாடு மவர்போய்
அறைகழ லீசனாளும் நகர்மேவி யென்றும்
அழகா இருப்ப தறிவே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.84 திருநனிபள்ளி
பண் - பியந்தைக்காந்தாரம் திருச்சிற்றம்பலம்
908 காரைகள் கூகைமுல்லை களவாகை ஈகை
படர்தொடரி கள்ளி கவினிச்
சூரைகள் பம்மிவிம்மு சுடுகா டமர்ந்த
சிவன்மேய சோலை நகர்தான்
தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை
குதிகொள்ள வள்ளை துவள
நாரைக ளாரல்வார வயன்மேதி வைகும்
நனிபள்ளி போலு நமர்காள்.
01
909 சடையிடை புக்கொடுங்கி உளதங்கு வெள்ளம்
வளர்திங்கள் கண்ணி அயலே
இடையிடை வைத்ததொக்கும் மலர்தொத்து மாலை
யிறைவன்னி டங்கொள் பதிதான்
மடையிடை வாளைபாய முகிழ்வாய் நெரிந்து
மணநாறும் நீல மலரும்
நடையுடை அன்னம்வைகு புனலம் படப்பை
நனிபள்ளி போலு நமர்காள்.
02
910 பெறுமலர் கொண்டுதொண்டர் வழிபாடு செய்யல்
ஒழிபாடி லாத பெருமான்
கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை
யிடமாய காதல் நகர்தான்
வெறுமலர் தொட்டுவிட்ட விசைபோன கொம்பின்
விடுபோ தலர்ந்த விரைசூழ்
நறுமலர் அல்லிபல்லி ஒலிவண் டுறங்கும்
நனிபள்ளி போலு நமர்காள்.
03
911 குளிர்தரு கங்கைதங்கு சடைமா டிலங்கு
தலைமாலை யோடு குலவி
ஒளிர்தரு திங்கள்சூடி உமைபாக மாக
வுடையா னுகந்த நகர்தான்
குளிர்தரு கொம்மலோடு குயில்பாடல் கேட்ட
பெடைவண்டு தானும் முரல
நளிர்தரு சோலைமாலை நரைகுருகு வைகும்
நனிபள்ளி போலு நமர்காள்.
04
912 தோடொரு காதனாகி யொருகா திலங்கு
சுரிசங்கு நின்று புரளக்
காடிட மாகநின்று கனலாடு மெந்தை
யிடமாய காதல் நகர்தான்
வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று
வெறிநீர் தெளிப்ப விரலால்
நாடுட னாடுசெம்மை ஒளிவெள்ள மாரும்
நனிபள்ளி போலு நமர்காள்.
05
913 மேகமொ டோ டுதிங்கள் மலரா அணிந்து
மலையான் மடந்தை மணிபொன்
ஆகமோர் பாகமாக அனலாடு மெந்தை
பெருமான் அமர்ந்த நகர்தான்
ஊகமோ டாடுமந்தி உகளுஞ் சிலம்ப
அகிலுந்தி யொண்பொன் இடறி
நாகமோ டாரம்வாரு புனல்வந் தலைக்கும்
நனிபள்ளி போலு நகர்காள்.
06
914 தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங்
கொடுகொட்டி வீணை முரல
வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த
பெருமான் உகந்த நகர்தான்
புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல்
பணிவார்கள் பாடல் பெருகி
*நகைமலி முத்திலங்கு மணல்சூழ் கிடக்கை
நனிபள்ளி போலு நமர்காள்.
07
* பாலை நெய்தல் பாடியது - இந்த நான்காவது
சரணத்தால் விளங்குகின்றது. எவ்வாறெனில்,
முத்துகள் விளங்கு மணல் சூழ்ந்த நிலமென்றதனா
லென்க. பாலை நெய்தல் பாடியதும் -பாம்பழியப்
பாடியதும் என்னுந் திருவெண்பாவானுமுணர்க.
915 வலமிகு வாளன்வேலன் வளைவா ளெயிற்று
மதியா அரக்கன் வலியோ
டுலமிகு தோள்கள்ஒல்க விரலா லடர்த்த
பெருமான் உகந்த நகர்தான்
நிலமிகு கீழுமேலும் நிகராது மில்லை
எனநின்ற நீதி யதனை
நலம்மிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும்
நனிபள்ளி போலு நமர்காள்.
08
916 நிறவுரு வொன்றுதோன்றி யெரியொன்றி நின்ற
தொருநீர்மை சீர்மை நினையார்
அறவுரு வேதநாவன் அயனோடு மாலும்
அறியாத அண்ணல் நகர்தான்
புறவிரி முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை
புனைகொன்றை துன்று பொதுளி
நறவிரி போதுதாது புதுவாச நாறும்
நனிபள்ளி போலு நமர்காள்.
09
917 அனமிகு செல்குசோறு கொணர்கென்று கையில்
இடவுண்டு பட்ட அமணும்
மனமிகு கஞ்சிமண்டை அதிலுண்டு தொண்டர்
குணமின்றி நின்ற வடிவும்
வினைமிகு வேதநான்கும் விரிவித்த நாவின்
விடையா னுகந்த நகர்தான்
நனிமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும்
நனிபள்ளி போலு நமர்காள்.
10
918 கடல்வரை யோதமல்கு கழிகானல் பானல்
கமழ்காழி என்று கருத
படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த
பதியான ஞான முனிவன்
இடுபறை யொன்றஅத்தர் பியன்மே லிருந்தி
னிசையா லுரைத்த பனுவல்
நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க
வினைகெடுதல் ஆணை நமதே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.85 கோளாறு திருப்பதிகம்
பண் - பியந்தைக்காந்தாரம் திருச்சிற்றம்பலம்
919 வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
01
920 என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
*ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
02
*இரண்டாவது தேவாரம் மூன்றாவது சரணத்தில் பிரயாணத் துக்காகாத
12-நட்சத்திரங்களைக் குறித்திருக்கின்றது.
விவரம்: நட்சத்திரங்களில் முதலுற்பத்தி கிருத்திகையாம்.
ஆதலாலதனை முதலாகக்கொண்டு பார்க்கில் 9-வது
நட்சத்திரம் பூரம். ஒன்றென்றது கிருத்திகை, 7- ஆயிலிய
நட்சத்திரம், 18 பூராடம் ஆறுமுடனாய நாள்கள் என்றது
மேற்கூறிய நான்கும் அல்லாத 8 நட்சத்திரங்களுமாம்.
12 நட்சத்திரங்களாவன: பூரம், பூராடம், பூரட்டாதி, மகம்,
கேட்டை, பரணி, கிருத்திகை, சுவாதி, ஆயிலியம், விசாகம்,
ஆதிரை, சித்திரை என்பவைகளாகும்.
921 உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வ மானபலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
03
922 மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து
மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய்க ளான பலவும்
அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
04
923 நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு முருமிடியு மின்னு
மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
05
924 வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்
மடவாள் தனோடு முடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
06
925 செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
07
926 வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
08
927 பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
09
928 கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
10
929 தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.86 திருநாரையூர்
பண் - பியந்தைக்காந்தாரம் திருச்சிற்றம்பலம்
930 உரையினில் வந்தபாவம் உணர்நோய்க ளும்ம
செயல்தீங்கு குற்ற முலகில்
வரையினி லாமைசெய்த அவைதீரும் வண்ணம்
மிகவேத்தி நித்தம் நினைமின்
வரைசிலை யாகவன்று மதில்மூன் றெரித்து
வளர்கங்குல் நங்கை வெருவ
திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே.
01
931 ஊனடை கின்றகுற்ற முதலாகி யுற்ற
பிணிநோ யொருங்கும் உயரும்
வானடை கின்றவெள்ளை மதிசூடு சென்னி
விதியான வேத விகிர்தன்
கானிடை யாடிபூதப் படையா னியங்கு
விடையான் இலங்கு முடிமேல்
தேனடை வண்டுபாடு சடையண்ணல் நண்ணு
திருநாரை யூர்கை தொழவே.
02
932 ஊரிடை நின்றுவாழும் உயிர்செற்ற காலன்
துயருற்ற தீங்கு விரவிப்
பாரிடை மெள்ளவந்து பழியுற்ற வார்த்தை
ஒழிவுற்ற வண்ண மகலும்
போரிடை யன்றுமூன்று மதிலெய்த ஞான்று
புகழ்வானு ளோர்கள் புணருந்
தேரிடை நின்றஎந்தை பெருமா னிருந்த
திருநாரை யூர்கை தொழவே.
03
933 தீயுற வாயஆக்கை அதுபற்றி வாழும்
வினைசெற்ற வுற்ற உலகின்
தாயுறு தன்மையாய தலைவன்றன் நாமம்
நிலையாக நின்று மருவும்
பேயுற வாயகானில் நடமாடி கோல
விடமுண்ட கண்டன் முடிமேல்
தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே.
04
934 வசையப ராதமாய வுவரோத நீங்குந்
தவமாய தன்மை வரும்வான்
மிசையவ ராதியாய திருமார் பிலங்கு
விரிநூலர் விண்ணும் நிலனும்
இசையவ ராசிசொல்ல இமையோர்க ளேத்தி
யமையாத காத லொடுசேர்
திசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே.
05
935 உறைவள ரூன்நிலாய வுயிர்நிற்கும் வண்ணம்
உணர்வாக்கும் உண்மை உலகில்
குறைவுள வாகிநின்ற குறைதீர்க்கு நெஞ்சில்
நிறைவாற்று நேசம் வளரும்
மறைவளர் நாவன்மாவின் உரிபோர்த்த மெய்யன்
அரவார்த்த அண்ணல் கழலே
திறைவளர் தேவர்தொண்டின் அருள்பேண நின்ற
திருநாரை யூர்கை தொழவே.
06
936 தனம்வரும் நன்மையாகுந் தகுதிக் குழந்து
வருதிக் குழன்ற உடலின்
இனம்வள ரைவர்செய்யும் வினையங்கள் செற்று
நினைவொன்று சிந்தை பெருகும்
முனமொரு காலம்மூன்று புரம்வெந்து மங்கச்
சரமுன் றெரிந்த அவுணர்
சினமொரு காலழித்த சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே.
07
937 உருவரை கின்றநாளில் உயிர்கொள்ளுங் கூற்றம்
நனியஞ்சு மாத லுறநீர்
மருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின்
அழிபா டிலாத கடலின்
அருவரை சூழிலங்கை அரையன்றன் வீரம்
அழியத் தடக்கை முடிகள்
திருவிரல் வைத்துகந்த சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே.
08
938 வேறுயர் வாழ்வுதன்மை வினைதுக்க மிக்க
பகைதீர்க்கு மேய வுடலில்
தேறிய சிந்தைவாய்மை தெளிவிக்க நின்ற
கரவைக் கரந்து திகழுஞ்
சேறுயர் பூவின்மேய பெருமானு மற்றைத்
திருமாலும் நேட எரியாய்ச்
சீறிய செம்மையாகுஞ் சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே.
09
939 மிடைபடு துன்பமின்பம் உளதாக்கு முள்ளம்
வெளியாக்கு முன்னி யுணரும்
படையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ணம்
ஒலிபாடி யாடி பெருமை
உடையினை விட்டுளோரும் உடல்போர்த் துளோரும்
உரைமாயும் வண்ணம் அழியச்
செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே.
10
940 எரியொரு வண்ணமாய உருவானை யெந்தை
பெருமானை உள்கி நினையார்
திரிபுர மன்றுசெற்ற சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழுவான்
பொருபுனல் சூழ்ந்தகாழி மறைஞான பந்தன்
உரைமாலை பத்தும் மொழிவார்
திருவளர் செம்மையாகி யருள்பேறு மிக்க
துளதென்பர் செம்மை யினரே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.87 திருநறையூர்
பண் - பியந்தைக்காந்தாரம்திருச்சிற்றம்பலம்
941 நேரிய னாகுமல்ல னொருபாலு மேனி
யரியான்மு னாய வொளியான்
நீரியல் காலுமாகி நிறைவானு மாகி
யுறுதீயு மாய நிமலன்
ஊரியல் பிச்சைபேணி யுலகங்க ளேத்த
நலகண்டு பண்டு சுடலை
நாரியோர் பாகமாக நடமாட வல்ல
நறையூரின் நம்ப னவனே.
01
942 இடமயி லன்னசாயல் மடமங்கை தன்கை
யெதிர்நாணி பூண வரையிற்
கடும்அயி லம்புகோத்து எயில்செற் றுகந்து
அமரர்க் களித்த தலைவன்
மடமயில் ஊர்திதாதை எனநின்று தொண்டர்
மனம்நின்ற மைந்தன் மருவும்
நடமயி லாலநீடு குயில்கூவு சோலை
நறையூரின் நம்ப னவனே.
02
943 சூடக முன்கைமங்கை யொருபாக மாக
அருள்கார ணங்கள் வருவான்
ஈடக மானநோக்கி யிடுபிச்சை கொண்டு
படுபிச்ச னென்று பரவத்
தோடக மாயோர்காதும் ஒருகா திலங்கு
குழைதாழ வேழ வுரியன்
நாடக மாகவாடி மடவார்கள் பாடும்
நறையூரின் நம்ப னவனே.
03
944 சாயல்நன் மாதோர்பாகன் விதியாய சோதி
கதியாக நின்ற கடவுள்
ஆயக மென்னுள்வந்த அருளாய செல்வன்
இருளாய கண்டன் அவனித்
தாயென நின்றுகந்த தலைவன் விரும்பு
மலையின்கண் வந்து தொழுவார்
நாயக னென்றிறைஞ்சி மறையோர்கள் பேணும்
நறையூரின் நம்ப னவனே.
04
945 நெதிபடு மெய்யெம்ஐயன் நிறைசோலை சுற்றி
நிகழம் பலத்தின் நடுவே
அதிர்பட ஆடவல்ல அமரர்க் கொருத்தன்
எமர்சுற்ற மாய இறைவன்
மதிபடு சென்னிமன்னு சடைதாழ வந்து
விடையேறி இல்பலி கொள்வான்
நதிபட வுந்திவந்து வயல்வாளை பாயும்
நறையூரின் நம்ப னவனே.
05
946 கணிகையோர் சென்னிமன்னு மதுவன்னி கொன்றை
மலர்துன்று செஞ்சடை யினான்
பணிகையின் முன்னிலங்க வருவேட மன்னு
பலவாகி நின்ற பரமன்
அணுகிய வேதவோசை யகலங்க மாறின்
பொருளான ஆதி யருளான்
நணுகிய தொண்டர்கூடி மலர்தூவி யேத்து
நறையூரின் நம்ப னவனே.
06
947 ஒளிர்தரு கின்றமேனி யுருவெங்கு மங்க
மவையார ஆட லரவம்
மிளிர்தரு கையிலங்க அனலேந்தி யாடும்
விகிர்தன் விடங்கொள் மிடறன்
துளிதரு சோலையாலை தொழில்மேவ வேதம்
எழிலார வென்றி யருளும்
நளிர்மதி சேருமாடம் மடவார்க ளாரும்
நறையூரின் நம்ப னவனே.
07
948 அடலெரு தேறுகந்த அதிருங் கழற்கள்
எதிருஞ் சிலம்பொ டிசையக்
கடலிடை நஞ்சமுண்டு கனிவுற்ற கண்டன்
முனிவுற் றிலங்கை யரையன்
உடலொடு தோளனைத்து முடிபத் திறுத்தும்
இசைகேட் டிரங்கி யொருவாள்
நடலைகள் தீர்த்துநல்கி நமையாள வல்ல
நறையூரின் நம்ப னவனே.
08
949 குலமலர் மேவினானும் மிகுமாய னாலும்
எதிர்கூடி நேடி நினைவுற்
றிலபல எய்தொணாமை எரியா யுயர்ந்த
பெரியா னிலங்கு சடையன்
சிலபல தொண்டர்நின்று பெருமைக்கள் பேச
வருமைத் திகழ்ந்த பொழிலின்
நலமலர் சிந்தவாச மணநாறு வீதி
நறையூரின் நம்ப னவனே.
09
950 துவருறு கின்றவாடை யுடல்போர்த் துழன்ற
வவர்தாமு மல்ல சமணுங்
கவருறு சிந்தையாளர் உரைநீத் துகந்த
பெருமான் பிறங்கு சடையன்
தவமலி பத்தர்சித்தர் மறையாளர் பேண
முறைமாதர் பாடி மருவும்
நவமணி துன்றுகோயில் ஒளிபொன்செய் மாட
நறையூரின் நம்ப னவனே.
10
951 கானலு லாவியோதம் எதிர்மல்கு காழி
மிகுபந்தன் முந்தி யுணர
ஞானமு லாவுசிந்தை யடிவைத் துகந்த
நறையூரின் நம்ப னவனை
ஈனமி லாதவண்ணம் இசையா லுரைத்த
தமிழ்மாலை பத்தும் நினைவார்
வானநி லாவவல்லர் நிலமெங்கு நின்று
வழிபாடு செய்யும் மிகவே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.88 திருமுல்லைவாயில்
பண் - பியந்தைக்காந்தாரம் திருச்சிற்றம்பலம்
952 துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன்
நடமன்னு துன்னு சுடரோன்
ஒளிமண்டி யும்ப ருலகங் கடந்த
உமைபங்க னெங்க ளரனூர்
களிமண்டு சோலை கழனிக் கலந்த
கமலங்கள் தங்கு மதுவின்
தெளிமண்டி யுண்டு சிறைவண்டு பாடு
திருமுல்லை வாயி லிதுவே.
01
953 பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன்
அயனைப் படைத்த பரமன்
அரவத் தொடங்க மவைகட்டி யெங்கு
மரவிக்க நின்ற அரனூர்
உருவத்தின் மிக்க ஒளிர்சங் கொடிப்பி
யவையோத மோத வெருவித்
தெருவத்தில் வந்து செழுமுத் தலைக்கொள்
திருமுல்லை வாயி லிதுவே.
02
954 வாராத நாடன் வருவார்தம் வில்லின்
உருமெல்கி நாளு முருகில்
ஆராத வின்ப னகலாத அன்பன்
அருள்மேவி நின்ற அரனூர்
பேராத சோதி பிரியாத மார்பின்
அலர்மேவு பேதை பிரியாள்
தீராத காதல் நெதிநேர நீடு
திருமுல்லை வாயி லிதுவே.
03
955 ஒன்றொன்றொ டொன்றும் ஒருநான்கொ டைந்தும்
இருமூன்றொ டேழு முடனாய்
அன்றின்றொ டென்றும் அறிவான வர்க்கும்
அறியாமை நின்ற அரனூர்
குன்றொன்றொ டொன்று குலையொன்றொ டொன்று
கொடியொன்றொ டொன்று குழுமிச்
சென்றொன்றொ டொன்று செறிவாய் நிறைந்த
திருமுல்லை வாயி லிதுவே.
04
956 கொம்பன்ன மின்னின் இடையாளோர் கூறன்
விடைநாளும் ஏறு குழகன்
நம்பன்னெ மன்பன் மறைநாவன் வானின்
மதியேறு சென்னி அரனூர்
அம்பன்ன வொண்க ணவரா டரங்கின்
அணிகோபு ரங்க ளழகார்
செம்பொன்ன செவ்வி தருமாடம் நீடு
திருமுல்லை வாயி லிதுவே.
05
957 ஊனேறு வேலின் உருவேறு கண்ணி
ஒளியேறு கொண்ட வொருவன்
ஆனேற தேறி யழகேறு நீறன்
அரவேறு பூணு மரனூர்
மானேறு கொல்லை மயிலேறி வந்து
குயிலேறு சோலை மருவி
தேனேறு மாவின் வளமேறி யாடு
திருமுல்லை வாயி லிதுவே.
06
958 நெஞ்சார நீடு நினைவாரை மூடு
வினைதேய நின்ற நிமலன்
அஞ்சாடு சென்னி அரவாடு கையன்
அனலாடு மேனி யரனூர்
மஞ்சாரு மாட மனைதோறும் ஐயம்
உளதென்று வைகி வரினுஞ்
செஞ்சாலி நெல்லின் வளர்சோ றளிக்கொள்
திருமுல்லை வாயி லிதுவே.
07
959 வரைவந் தெடுத்த வலிவா ளரக்கன்
முடிபத்து மிற்று நெரிய
உரைவந்த பொன்னின் உருவந்த மேனி
உமைபங்கன் எங்க ளரனூர்
வரைவந்த சந்தொ டகிலுந்தி வந்து
மிளிர்கின்ற பொன்னி வடபால்
திரைவந்து வந்து செறிதேற லாடு
திருமுல்லை வாயி லிதுவே.
08
960 மேலோடி நீடு விளையாடல் மேவு
விரிநூலன் வேத முதல்வன்
பாலாடு மேனி கரியானு முன்னி
யவர்தேட நின்ற பரனூர்
காலாடு நீல மலர்துன்றி நின்ற
கதிரேறு செந்நெல் வயலிற்
சேலோடு வாளை குதிகொள்ள மல்கு
திருமுல்லை வாயி லிதுவே.
09
961 பனைமல்கு திண்கை மதமா வுரித்த
பரமன்ன நம்ப னடியே
நினைவன்ன சிந்தை அடையாத தேரர்
அமண்மாய நின்ற அரனூர்
வனமல்கு கைதை வகுளங்க ளெங்கு
முகுளங்க ளெங்கு நெரியச்
சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு
திருமுல்லை வாயி லிதுவே.
10
962 அணிகொண்ட கோதை யவள்நன்று மேத்த
அருள்செய்த எந்தை மருவார்
திணிகொண்ட மூன்று புரமெய்த வில்லி
திருமுல்லை வாயி லிதன்மேல்
தணிகொண்ட சிந்தை யவர்காழி ஞான
மிகுபந்தன் ஒண்டமிழ் களின்
அணிகொண்ட பத்தும் இசைபாடு பத்தர்
அகல்வானம் ஆள்வர் மிகவே.
11
சுவாமிபெயர் - முல்லைவனநாதர், தேவியார் - கோதையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.89 திருக்கொச்சைவயம்
பண் - பியந்தைக்காந்தாரம்திருச்சிற்றம்பலம்
963 அறையும் பூம்புன லோடு மாடர வச்சடை தன்மேற்
பிறையுஞ் சூடுவர் மார்பிற் பெண்ணொரு பாக மமர்ந்தார்
மறையி னொல்லொலி யோவா மந்திர வேள்வி யறாத
குறைவில் அந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே.
01
964 சுண்ணத்தர் தோலொடு நூல்சேர் மார்பினர் துன்னிய பூதக்
கண்ணத்தர் வெங்கன லேந்திக் கங்குல்நின் றாடுவர் கேடில்
எண்ணத்தர் கேள்விநல் வேள்வி யறாதவர் மாலெரி யோம்பும்
வண்ணத்த அந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே.
02
965 பாலை யன்னவெண் ணீறு பூசுவர் பல்சடை தாழ
மாலை யாடுவர் கீத மாமறை பாடுதல் மகிழ்வர்
வேலை மால்கட லோதம் வெண்டிரை கரைமிசை விளங்குங்
கோல மாமணி சிந்துங் கொச்சை வயமமர்ந் தாரே.
03
966 கடிகொள் கூவிள மத்தங் கமழ்சடை நெடுமுடிக் கணிவர்
பொடிகள் பூசிய மார்பிற் புனைவர்நன் மங்கையோர் பங்கர்
கடிகொள் நீடொலி சங்கின் ஒலியொடு கலையொலி துதைந்து
கொடிக ளோங்கிய மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.
04
967 ஆடன் மாமதி யுடையா ராயின பாரிடஞ் சூழ
வாடல் வெண்டலை யேந்தி வையக மிடுபலிக் குழல்வார்
ஆடல் மாமட மஞ்ஞை அணிதிகழ் பேடையொ டாடிக்
கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சை வயமமர்ந் தாரே.
05
968 மண்டு கங்கையும் அரவு மல்கிய வளர்சடை தன்மேற்
துண்ட வெண்பிறை யணிவர் தொல்வரை வில்லது வாக
விண்ட தானவர் அரணம் வெவ்வழல் எரிகொள விடைமேற்
கொண்ட கோலம துடையார் கொச்சை வயமமர்ந் தாரே.
06
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
07
969 அன்றவ் வால்நிழ லமர்ந்து வறவுரை நால்வர்க் கருளிப்
பொன்றி னார்தலை யோட்டி லுண்பது பொருகட லிலங்கை
வென்றி வேந்தனை யொல்க வூன்றிய விரலினர் வான்தோய்
குன்ற மன்னபொன் மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.
08
970 சீர்கொள் மாமல ரானுஞ் செங்கண்மா லென்றிவ ரேத்த
ஏர்கொள் வெவ்வழ லாகி யெங்கு முறநிமிர்ந் தாரும்
பார்கொள் விண்ணழல் கால்நீர்ப் பண்பினர் பால்மொழி யோடுங்
கூர்கொள் வேல்வல னேந்திக் கொச்சை வயமமர்ந் தாரே.
09
971 குண்டர் வண்துவ ராடை போர்த்ததோர் கொள்கை யினார்கள்
மிண்டர் பேசிய பேச்சு மெய்யல மையணி கண்டர்
பண்டை நம்வினை தீர்க்கும் பண்பின ரொண்கொடி யோடுங்
கொண்டல் சேர்மணி மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.
10
972 கொந்த ணிபொழில் சூழ்ந்த கொச்சை வயநகர் மேய
அந்த ணன்னடி யேத்தும் அருமறை ஞானசம் பந்தன்
சந்த மார்ந்தழ காய தண்டமிழ் மாலைவல் லோர்போய்
முந்தி வானவ ரோடும் புகவலர் முனைகெட வினையே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.90 திருநெல்வாயில் திருஅரத்துறை
பண் - பியந்தைக்காந்தாரம் திருச்சிற்றம்பலம்
973 எந்தை ஈசனெம் பெருமான்
ஏறமர் கடவுளென் றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லால்
சென்றுகை கூடுவ தன்றாற்
கந்த மாமல ருந்திக்
கடும்புனல் நிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலைநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே.
01
974 ஈர வார்சடை தன்மேல்
இளம்பிறை யணிந்த எம்பெருமான்
சீருஞ் செல்வமும் ஏத்தாச்
சிதடர்கள் தொழச்செல்வ தன்றால்
வாரி மாமல ருந்தி
வருபுனல் நிவாமல்கு கரைமேல்
ஆருஞ் சோலைநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே.
02
975 *பிணிக லந்தபுன் சடைமேற்
பிறையணி சிவனெனப் பேணிப்
பணிக லந்துசெய் யாத
பாவிகள் தொழச்செல் வதன்றால்
மணிக லந்துபொன் னுந்தி
வருபுனல் நிவாமல்கு கரைமேல்
அணிக லந்தநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே.
03
*பிணி - கட்டுதல்
976 துன்ன ஆடையொன் றுடுத்துத்
தூயவெண் ணீற்றி னராகி
உன்னி நைபவர்க் கல்லால்
ஒன்றுங்கை கூடுவ தன்றாற்
பொன்னும் மாமணி யுந்திப்
பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
அன்ன மாருநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே.
04
977 வெருகு ரிஞ்சுவெங் காட்டி
லாடிய விமலனென் றுள்கி
உருகி நைபவர்க் கல்லால்
ஒன்றுங்கை கூடுவ தன்றால்
முருகு ரிஞ்சுபூஞ் சோலை
மொய்ம்மலர் சுமந்திழி நிவாவந்
தருகு ரிஞ்சுநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே.
05
978 உரவு நீர்சடைக் கரந்த
வொருவனென் றுள்குளிர்ந் தேத்திப்
பரவி நைபவர்க் கல்லாற்
பரிந்துகை கூடுவ தன்றால்
குரவ நீடுயர் சோலைக்
குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அரவ மாருநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே.
06
979 நீல மாமணி மிடற்று
நீறணி சிவனெனப் பேணுஞ்
சீல மாந்தர்கட் கல்லாற்
சென்றுகை கூடுவ தன்றால்
கோல மாமல ருந்திக்
குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
ஆலுஞ் சோலைநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே.
07
980 செழுந்தண் மால்வரை யெடுத்த
செருவலி இராவணன் அலற
அழுந்த ஊன்றிய விரலான்
போற்றியென் பார்க்கல்ல தருளான்
கொழுங் கனிசுமந் துந்திக்
குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அழுந்துஞ் சோலைநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே.
08
981 நுணங்கு நூலயன் மாலும்
இருவரும் நோக்கரி யானை
வணங்கி நைபவர்க் கல்லால்
வந்துகை கூடுவ தன்றால்
மணங்க மழ்ந்துபொன் னுந்தி
வருபுனல் நிவாமல்கு கரைமேல்
அணங்குஞ் சோலைநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே.
09
982 சாக்கி யப்படு வாருஞ்
சமண்படு வார்களும் மற்றும்
பாக்கி யப்பட கில்லாப்
பாவிகள் தொழச்செல்வ தன்றால்
பூக்க மழ்ந்துபொன் னுந்திப்
பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
ஆர்க்குஞ் சோலைநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே.
10
983 கறையி னார்பொழில் சூழ்ந்த
காழியுள் ஞான சம்பந்தன்
அறையும் பூம்புனல் பரந்த
அரத்துறை யடிகள்தம் அருளை
முறைமை யாற்சொன்ன பாடல்
மொழியும் மாந்தர்தம் வினைபோய்ப்
பறையும் ஐயுற வில்லை
பாட்டிவை பத்தும் வல்லார்க்கே.
11
சுவாமிபெயர் - அரத்துறைநாதர், தேவியார் - ஆனந்தநாயகியம்மை.
நிவா வென்பது ஒரு நதி. புனல்-நிவாவெனப் பதம்பிரிக்க.
இது முத்துச்சிவிகை - முத்துச்சின்ன முதலியவை பெற்றபோதருளிச்செய்தது.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.91 திருமறைக்காடு
பண் - பியந்தைக்காந்தாரம் திருச்சிற்றம்பலம்
984 பொங்கு வெண்மணற் கானற் பொருகடல் திரைதவழ் முத்தங்
கங்கு லாரிருள் போழுங் கலிமறைக் காடமர்ந் தார்தாந்
திங்கள் சூடின ரேனுந் திரிபுரம் எரித்தன ரேனும்
எங்கும் எங்கள் பிரானார் புகழல திகழ்பழி யிலரே.
01
985 கூனி ளம்பிறை சூடிக் கொடுவரித் தோலுடை யாடை
ஆனி லங்கிள ரைந்தும் ஆடுவர் பூண்பது மரவங்
கான லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்பத்
தேன லங்கமழ் சோலைத் திருமறைக் காடமர்ந் தாரே.
02
986 நுண்ணி தாய்வெளி தாகி நூல்கிடந் திலங்கு பொன்மார்பிற்
பண்ணி யாழென முரலும் பணிமொழி யுமையொரு பாகன்
தண்ணி தாயவெள் ளருவி சலசல நுரைமணி ததும்பக்
கண்ணி தானுமோர் பிறையார் கலிமறைக் காடமர்ந் தாரே.
03
986 ஏழை வெண்குரு கயலே யிளம்பெடை தனதெனக் கருதித்
தாழை வெண்மடற் புல்குந் தண்மறைக் காடமர்ந் தார்தாம்
மாழை யங்கய லொண்கண் மலைமகள் கணவன தடியின்
நீழ லேசர ணாக நினைபவர் வினைநலி விலரே.
04
987 அரவம் வீக்கிய அரையும் அதிர்கழல் தழுவிய அடியும்
பரவ நாஞ்செய்த பாவம் பறைதர வருளுவர் பதிதான்
மரவம் நீடுயர் சோலை மழலைவண் டியாழ்செயும் மறைக்காட்
டிரவும் எல்லியும் பகலும் ஏத்துதல் குணமெ னலாமே.
05
989 பல்லி லோடுகை யேந்திப் பாடியும் ஆடியும் பலிதேர்
அல்லல் வாழ்க்கைய ரேனும் அழகிய தறிவரெம் மடிகள்
புல்ல மேறுவர் பூதம் புடைசெல வுழிதர்வர்க் கிடமாம்
மல்கு வெண்டிரை யோதம் மாமறைக் காடது தானே.
06
990 நாகந் தான்கயி றாக நளிர்வரை யதற்கு மத்தாகப்
பாகந் தேவரோ டசுரர் படுகடல் அளறெழக் கடைய
வேக நஞ்செழ ஆங்கே வெருவொடும் இரிந்தெங்கு மோட
ஆகந் தன்னில்வைத் தமிர்தம் ஆக்குவித் தான்மறைக் காடே.
07
991 தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனதொரு பெருமையை ஓரான்
மிக்கு மேற்சென்று மலையை யெடுத்தலும் மலைமகள் நடுங்க
நக்குத் தன்திரு விரலா லூன்றலும் நடுநடுத் தரக்கன்
பக்க வாயும்விட் டலறப் பரிந்தவன் பதிமறைக் காடே.
08
992 விண்ட மாமல ரோனும் விளங்கொளி யரவணை யானும்
பண்டுங் காண்பரி தாய பரிசினன் அவனுறை பதிதான்
கண்ட லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்ப
வண்ட லங்கமழ் சோலை மாமறைக் காடது தானே.
09
993 பெரிய வாகிய குடையும் பீலியும் அவைவெயிற் கரவாக்
கரிய மண்டைகை யேந்திக் கல்லென வுழிதருங் கழுக்கள்
அரிய வாகவுண் டோ து மவர்திறம் ஒழிந்து நம்மடிகள்
பெரிய சீர்மறைக் காடே பேணுமின் மனமுடை யீரே.
10
994 மையுலாம் பொழில் சூழ்ந்த மாமறைக் காடமர்ந் தாரைக்
கையினாற் றொழு தெழுவான் காழியுள் ஞானசம் பந்தன்
செய்த செந்தமிழ் பத்துஞ் சிந்தையுள் சேர்க்க வல்லார்போய்ப்
பொய்யில் வானவ ரோடும் புகவலர் கொளவலர் புகழே.
11
சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர், தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.92 திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்
பண் - பியந்தைக்காந்தாரம் திருச்சிற்றம்பலம்
995 பட்டம் பால்நிற மதியம் படர்சடைச் சுடர்விடு பாணி
நட்டம் நள்ளிரு ளாடும் நாதனார் நவின்றுறை கோயில்
புட்டன் பேடையோ டாடும் பூம்புக லூர்த்தொண்டர் போற்றி
வட்டஞ் சூழ்ந்தடி பரவும் வர்த்தமா னீச்சரத் தாரே.
01
996 முயல் வளாவிய திங்கள் வாண்முகத் தரிவையில் தெரிவை
இயல் வளாவிய துடைய இன்னமு தெந்தையெம் பெருமான்
கயல் வளாவிய கழனிக் கருநிறக் குவளைகள் மலரும்
வயல் வளாவிய புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.
02
997 தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலுஞ் சாந்தமும் புகையுங்
கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன் செய்கோலங்
கண்டு கண்டுகண் குளிரக் களிபரந் தொளிமல்கு கள்ளார்
வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.
03
998 பண்ண வண்ணத்த ராகிப் பாடலொ டாட லறாத
விண்ண வண்ணத்த ராய விரிபுக லூரரோர் பாகம்
பெண்ண வண்ணத்த ராகும் பெற்றியொ டாணிணை பிணைந்த
வண்ண வண்ணத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே.
04
999 ஈசன் ஏறமர் கடவுள் இன்னமு தெந்தையெம் பெருமான்
பூசு மாசில்வெண் ணீற்றர் பொலிவுடைப் பூம்புக லூரில்
மூசு வண்டறை கொன்றை முருகன்முப் போதுஞ்செய் முடிமேல்
வாச மாமல ருடையார் வர்த்தமா னீச்சரத் தாரே.
05
1000 தளிரி ளங்கொடி வளரத் தண்கயம் இரிய வண்டேறிக்
கிளரி ளம்முழை நுழையக் கிழிதரு பொழிற்புக லூரில்
உளரி ளஞ்சுனை மலரும் ஒளிதரு சடைமுடி யதன்மேல்
வளரி ளம்பிறை யுடையார் வர்த்தமா னீச்சரத் தாரே.
06
1001 தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி யெழில்நரம் பெடுத்துத்
துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல்புக லூரில்
அஞ்ச னம்பிதிர்ந் தனைய அலைகடல் கடைய அன்றெழுந்த
வஞ்ச நஞ்சணி கண்டர் வர்த்தமா னீச்சரத் தாரே.
07
1002 சாம வேதமோர் கீத மோதியத் தசமுகன் பரவும்
நாம தேயம துடையார் நன்குணர்ந் தடிகளென் றேத்தக்
காம தேவனை வேவக் கனலெரி கொளுவிய கண்ணார்
வாம தேவர்தண் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.
08
1003 சீர ணங்குற நின்ற செருவுறு திசைமுக னோடு
நார ணன்கருத் தழிய நகைசெய்த சடைமுடி நம்பர்
ஆர ணங்குறும் உமையை அஞ்சுவித் தருளுதல் பொருட்டால்
வார ணத்துரி போர்த்தார் வர்த்தமா னீச்சரத் தாரே.
09
1004 கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையி னாற்றம்
மெய்யைப் போர்த்துழல் வாரும் உரைப்பன மெய்யென விரும்பேற்
செய்யில் வாளைக ளோடு செங்கயல் குதிகொளும் புகலூர்
மைகொள் கண்டத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே.
10
1005 பொங்கு தண்புனல் சூழ்ந்து போதணி பொழிற் புகலூரில்
மங்குல் மாமதி தவழும் வர்த்தமா னீச்சரத் தாரைத்
தங்கு சீர்திகழ் ஞான சம்பந்தன் தண்டமிழ் பத்தும்
எங்கும் ஏத்த வல்லார்கள் எய்துவர் இமையவ ருலகே.
11
சுவாமிபெயர் - வர்த்தமானீசுவரர், தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.93 திருத்தெங்கூர்
பண் - பியந்தைக்காந்தாரம் திருச்சிற்றம்பலம்
1006 புரைசெய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்றக்
கரைசெய் மால்கடல் நஞ்சை உண்டவர் கருதலர் புரங்கள்
இரைசெய் தாரழ லூட்டி யுழல்பவர் இடுபலிக் கெழில்சேர்
விரைசெய் பூம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
01
1007 சித்தந் தன்னடி நினைவார் செடிபடு கொடுவினை தீர்க்குங்
கொத்தின் தாழ்சடை முடிமேற் கோளெயிற் றரவொடு பிறையன்
பத்தர் தாம்பணிந் தேத்தும் பரம்பரன் பைம்புனல் பதித்த
வித்தன் தாழ்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
02
1008 அடையும் வல்வினை யகல அருள்பவர் அனலுடை மழுவாட்
படையர் பாய்புலித் தோலர் பைம்புனற் கொன்றையர் படர்புன்
சடையில் வெண்பிறை சூடித் தார்மணி யணிதரு தறுகண்
விடையர் வீங்கெழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
03
1009 பண்டு நான்செய்த வினைகள் பறையவோர் நெறியருள் பயப்பார்
கொண்டல் வான்மதி சூடிக் குரைகடல் விடமணி கண்டர்
வண்டு மாமல ரூதி மதுவுண இதழ் மறிவெய்தி
விண்ட வார்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
04
1010 சுழித்த வார்புனற் கங்கை சூடியோர் காலனைக் காலால்
தெழித்து வானவர் நடுங்கச் செற்றவர் சிறையணி பறவை
கழித்த வெண்டலை யேந்திக் காமன துடல் பொடியாக
விழித்த வர்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
05
1011 தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலைவெண் பொடியணி சுவண்டர்
எல்லி சூடிநின் றாடும் இறையவர் இமையவ ரேத்தச்
சில்லை மால்விடை யேறித் திரிபுரந் தீயெழச் செற்ற
வில்லி னார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
06
1012 நெறிகொள் சிந்தைய ராகி நினைபவர் வினைகெட நின்றார்
முறிகொள் மேனிமுக் கண்ணர் முளைமதி நடுநடுத் திலங்கப்
பொறிகொள் வாளர வணிந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி
வெறிகொள் பூம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
07
1013 எண்ணி லாவிற லரக்கன் எழில்திகழ் மால்வரை யெடுக்கக்
கண்ணெ லாம்பொடிந் தலறக் கால்விர லூன்றிய கருத்தர்
தண்ணு லாம்புனற் கண்ணி தயங்கிய சடைமுடிச் சதுரர்
விண்ணு லாம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
08
1014 தேடித் தானயன் மாலுந் திருமுடி யடியிணை காணார்
பாடத் தான்பல பூதப் படையினர் சுடலையிற் பலகால்
ஆடத் தான்மிக வல்லர் அருச்சுனற் கருள்செயக் கருதும்
வேடத் தார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்ற மர்ந்தாரே.
09
1015 சடங்கொள் சீவரப் போர்வைச் சாக்கியர் சமணர் சொல்தவிர
இடங்கொள் வல்வினை தீர்க்கும் ஏத்துமின் இருமருப் பொருகைக்
கடங்கொள் மால்களிற் றுரியர் கடல்கடைந் திடக்கனன் றெழுந்த
விடங்கொள் கண்டத்தர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே
.10
1016 வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரைக்
கந்த மார்பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம் பந்தன்
சந்த மாயின பாடல் தண்டமிழ் பத்தும் வல்லார்மேல்
பந்த மாயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே.
11
சுவாமிபெயர் - வெள்ளிமலையீசுவரர், தேவியார் - பெரியாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.94 திருவாழ்கொளிபுத்தூர்
பண் - பியந்தைக்காந்தாரம்திருச்சிற்றம்பலம்
1017 சாகை யாயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார்
ஈகை யார்கடை நோக்கி யிரப்பதும் பலபல வுடையார்
தோகை மாமயி லனைய துடியிடை பாகமும் உடையார்
வாகை நுண்துளி வீசும் வாழ்கொளி புத்தூ ருளாரே.
01
1018 எண்ணி லீரமும் உடையார் எத்தனை யோரிவர் அறங்கள்
கண்ணு மாயிரம் உடையார் கையுமோ ராயிரம் உடையார்
பெண்ணு மாயிரம் உடையார் பெருமையோ ராயிரம் உடையார்
வண்ண மாயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
02
1019 நொடியோ ராயிரம் உடையர் நுண்ணிய ராமவர் நோக்கும்
வடிவு மாயிரம் உடையார் வண்ணமும் ஆயிரம் உடையார்
முடியு மாயிரம் உடையார் மொய்குழ லாளையும் உடையார்
வடிவு மாயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
03
1020 பஞ்சி நுண்துகி லன்ன பைங்கழற் சேவடி யுடையார்
குஞ்சி மேகலை யுடையார் கொந்தணி வேல்வல னுடையார்
அஞ்சும் வென்றவர்க் கணியார் ஆனையின் ஈருரி யுடையார்
வஞ்சி நுண்ணிடை யுடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
04
1021 பரவு வாரையும் உடையார் பழித்திகழ் வாரையும் உடையார்
விரவு வாரையும் உடையார் வெண்டலைப் பலிகொள்வ துடையார்
அரவம் பூண்பதும் உடையார் ஆயிரம் பேர்மிக வுடையார்
வரமும் ஆயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
05
1022 தண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும் புறவில்
கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல வுடையார்
கண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதோர் கரந்தை
வண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
06
1023 மான வாழ்க்கைய துடையார் மலைந்தவர் மதிற்பரி சறுத்தார்
தான வாழ்க்கைய துடையார் தவத்தொடு நாம்புகழ்ந் தேத்த
ஞான வாழ்க்கைய துடையார் நள்ளிருள் மகளிர் நின்றேத்த
வான வாழ்க்கைய துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
07
1024 ஏழு மூன்றுமோர் தலைகள் உடையவன் இடர்பட அடர்த்து
வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பவர் பலபல வுடையார்
கேழல் வெண்பிறை யன்ன கெழுமணி மிடறுநின் றிலங்க
வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
08
1025 வென்றி மாமல ரோனும் விரிகடல் துயின்றவன் றானும்
என்றும் ஏத்துகை யுடையார் இமையவர் துதிசெய விரும்பி
முன்றில் மாமலர் வாசம் முதுமதி தவழ்பொழில் தில்லை
மன்றி லாடல துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
09
1026 மண்டை கொண்டுழல் தேரர் மாசுடை மேனிவன் சமணர்
குண்டர் பேசிய பேச்சுக் கொள்ளன்மின் திகழொளி நல்ல
துண்ட வெண்பிறை சூடிச் சுண்ணவெண் பொடியணிந் தெங்கும்
வண்டு வாழ்பொழில் சூழ்ந்த வாழ்கொளி புத்தூ ருளாரே.
10
1027 நலங்கொள் பூம்பொழிற் காழி நற்றமிழ் ஞான சம்பந்தன்
வலங்கொள் வெண்மழு வாளன் வாழ்கொளி புத்தூ ருளானை
இலங்கு வெண்பிறை யானை யேத்திய தமிழிவை வல்லார்
நலங்கொள் சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே.
11
சுவாமிபெயர் - மாணிக்கவண்ணநாதர், தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.95 திருஅரைசிலி
பண் - பியந்தைக்காந்தாரம் திருச்சிற்றம்பலம்
1028 பாடல் வண்டறை கொன்றை பால்மதி பாய்புனற் கங்கை
கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி
வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியந் தோல்மேல்
ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக் கிடம்அர சிலியே.
01
1029 ஏறு பேணிய தேறி யிளமதக் களிற்றினை யெற்றி
வேறு செய்ததன் உரிவை வெண்புலால் கலக்க மெய்போர்த்த
ஊறு தேனவன் உம்பர்க் கொருவன்நல் லொளிகொளொண் சுடராம்
ஆறு சேர்தரு சென்னி யடிகளுக் கிடம்அர சிலியே.
02
1030 கங்கை நீர்சடை மேலே கதம்மிகக் கதிரிள வனமென்
கொங்கை யாளொரு பாக மருவிய கொல்லை வெள்ளேற்றன்
சங்கை யாய்த்திரி யாமே தன்னடி யார்க் கருள்செய்து
அங்கை யாலன லேந்தும் அடிகளுக் கிடம்அர சிலியே.
03
1031 மிக்க காலனை வீட்டி மெய்கெடக் காமனை விழித்துப்
புக்க ஊரிடு பிச்சை யுண்பது பொன்றிகழ் கொன்றை
தக்க நூல்திகழ் மார்பில் தவளவெண் ணீறணிந் தாமை
அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக் கிடம்அர சிலியே.
04
1032 மானஞ் சும்மட நோக்கி மலைமகள் பாகமு மருவித்
தானஞ் சாவரண் மூன்றுந் தழலெழச் சரமது துரந்து
வானஞ் சும்பெரு விடத்தை யுண்டவன் மாமறை யோதி
ஆனஞ் சாடிய சென்னி யடிகளுக் கிடம்அர சிலியே.
05
1033 பரிய மாசுணங் கயிறாப் பருப்பத மதற்கு மத்தாகப்
பெரிய வேலையைக் கலங்கப் பேணிய வானவர் கடையக்
கரிய நஞ்சது தோன்றக் கலங்கிய அவர்தமைக் கண்டு
அரிய ஆரமு தாக்கும் அடிகளுக் கிடம்அர சிலியே.
06
இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் சிதைந்துபோயிற்று.
07
1034 வண்ண மால்வரை தன்னை மறித்திட லுற்றவல் லரக்கன்
கண்ணுந் தோளுநல் வாயும் நெரிதரக் கால்விர லூன்றிப்
பண்ணின் பாடல்கைந் நரம்பாற் பாடிய பாடலைக் கேட்டு
அண்ண லாயருள் செய்த அடிகளுக் கிடம்அர சிலியே.
08
1035 குறிய மாணுரு வாகிக் குவலயம் அளந்தவன் றானும்
வெறிகொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்த வத்தோனுஞ்
செறிவொ ணாவகை யெங்குந் தேடியுந் திருவடி காண
அறிவொ ணாவுரு வத்தெம் அடிகளுக் கிடம்அர சிலியே.
09
1036 குருளை யெய்திய மடவார் நிற்பவே குஞ்சியைப் பறித்துத்
திரளை கையிலுண் பவருந் தேரருஞ் சொல்லிய தேறேல்
பொருளைப் பொய்யிலி மெய்யெம் நாதனைப் பொன்னடி வணங்கும்
அருளை ஆர்தர நல்கும் அடிகளுக் கிடம்அர சிலியே.
10
1037 அல்லி நீள்வயல் சூழ்ந்த அரசிலி யடிகளைக் காழி
நல்ல ஞானசம் பந்தன் நற்றமிழ் பத்திவை நாளுஞ்
சொல்ல வல்லவர் தம்மைச் சூழ்ந்தம ரர்தொழு தேத்த
வல்ல வானுல கெய்தி வைகலும் மகிழ்ந்திருப் பாரே.
11
சுவாமிபெயர் - அரைசிலிநாதர், தேவியார் - பெரியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.96 சீகாழி
பண் - பியந்தைக்காந்தாரம்திருச்சிற்றம்பலம்
1038 பொங்கு வெண்புரி வளரும் பொற்புடை மார்பனெம் பெருமான்
செங்கண் ஆடர வாட்டுஞ் செல்வனெஞ் சிவனுறை கோயில்
பங்க மில்பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவுந்
தங்கு வெண்டிரைக் கானல் தண்வயல் காழிநன் னகரே.
01
1039 தேவர் தானவர் பரந்து திண்வரை மால்கடல் நிறுவி
நாவ தாலமிர் துண்ண நயந்தவர் இரிந்திடக் கண்டு
ஆவ வென்றரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர்
காவ லார்மதில் சூழ்ந்த கடிபொழிற் காழிநன் னகரே.
02
1040 கரியின் மாமுக முடைய கணபதி தாதை பல்பூதந்
திரிய இல்பலிக் கேகுஞ் செழுஞ்சுடர் சேர்தரு மூதூர்
சரியின் முன்கை நன்மாதர் சதிபட மாநட மாடி
உரிய நாமங்க ளேத்தும் ஒலிபுனற் காழிநன் னகரே.
03
1041 சங்க வெண்குழைச் செவியன் தண்மதி சூடிய சென்னி
அங்கம் பூணென வுடைய அப்பனுக் கழகிய வூராந்
துங்க மாளிகை யுயர்ந்த தொகுகொடி வானிடை மிடைந்து
வங்க வாண்மதி தடவு மணிபொழிற் காழிநன் னகரே.
04
1042 மங்கை கூறமர் மெய்யான் மான்மறி யேந்திய கையான்
எங்க ளீசனென் றெழுவார் இடர்வினை கெடுப்பவற் கூராஞ்
சங்கை யின்றிநன் நியமந் தாஞ்செய்து தகுதியின் மிக்க
கங்கை நாடுயர் கீர்த்தி மறையவர் காழிநன் னகரே.
05
1043 நாறு கூவிள மத்தம் நாகமுஞ் சூடிய நம்பன்
ஏறு மேறிய ஈசன் இருந்தினி தமர்தரு மூதூர்
நீறு பூசிய வுருவர் நெஞ்சினுள் வஞ்சமொன் றின்றித்
தேறு வார்கள்சென் றேத்துஞ் சீர்திகழ் காழிநன் னகரே.
06
1044 நடம தாடிய நாதன் நந்திதன் முழவிடைக் காட்டில்
விடம மர்ந்தொரு காலம் விரித்தறம் உரைத்தவற் கூராம்
இடம தாமறை பயில்வார் இருந்தவர் திருந்தியம் போதிற்
குடம தார்மணி மாடங் குலாவிய காழிநன் னகரே.
07
1045 கார்கொள் மேனியவ் வரக்கன் றன்கடுந் திறலினைக் கருதி
ஏர்கொள் மங்கையும் அஞ்ச எழில்மலை யெடுத்தவன் நெரியச்
சீர்கொள் பாதத்தோர் விரலாற் செறுத்தவெஞ் சிவனுறை கோயில்
தார்கொள் வண்டினஞ் சூழ்ந்த தண்வயல் காழிநன் னகரே.
08
1046 மாலும் மாமல ரானும் மருவிநின் றிகலிய மனத்தாற்
பாலுங் காண்பரி தாய பரஞ்சுடர் தன்பதி யாகுஞ்
சேலும் வாளையுங் கயலுஞ் செறிந்துதன் கிளையொடு மேய
ஆலுஞ் சாலிநற் கதிர்கள் அணிவயற் காழிநன் னகரே.
09
1047 புத்தர் பொய்மிகு சமணர் பொலிகழ லடியிணை காணுஞ்
சித்த மற்றவர்க் கிலாமைத் திகழ்ந்தநற் செழுஞ்சுடர்க் கூராஞ்
சித்த ரோடுநல் லமரர் செறிந்தநன் மாமலர் கொண்டு
முத்த னேயரு ளென்று முறைமைசெய் காழிநன் னகரே.
10
1048 ஊழி யானவை பலவும் ஒழித்திடுங் காலத்தி லோங்கு
---- ---- ---- ----
---- ---- ---- ----
---- ---- ---- ----
11
* இப்பதிகத்தில் 11-ம்செய்யுளின் பின்மூன்றடிகள்
சிதைந்துபோயின.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.97 சீகாழி - திருவிராகம்
பண் - நட்டராகம்திருச்சிற்றம்பலம்
1049 நம்பொருள்நம் மக்களென்று நச்சிஇச்சை செய்துநீர்
அம்பரம்அ டைந்துசால அல்லலுய்ப்ப தன்முனம்
உம்பர்நாதன் உத்தமன் ஒளிமிகுத்த செஞ்சடை
நம்பன்மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே.
01
1050 பாவமேவும் உள்ளமோடு பத்தியின்றி நித்தலும்
ஏவமான செய்துசாவ தன்முனம் மிசைந்துநீர்
தீபமாலை தூபமுஞ் செறிந்தகைய ராகிநந்
தேவதேவன் மன்னுமூர் திருந்துகாழி சேர்மினே.
02
1051 சோறுகூறை யின்றியே துவண்டுதூர மாய்நுமக்
கேறுசுற்றம் எள்கவே யிடுக்கணுய்ப்ப தன்முனம்
ஆறுமோர் சடையினான் ஆதியானை செற்றவன்
நாறுதேன் மலர்ப்பொழில் நலங்கொள்காழி சேர்மினே.
03
1052 நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல நாளையும்
உச்சிவம் மெனும்முரை உணர்ந்துகேட்ப தன்முனம்
பிச்சர்நச் சரவரைப் பெரியசோதி பேணுவார்
இச்சைசெய்யும் எம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே.
04
1053 கண்கள்காண் பொழிந்துமேனி கன்றியொன் றலாதநோய்
உண்கிலாமை செய்துநும்மை யுய்த்தழிப்ப தன்முனம்
விண்குலாவு தேவருய்ய வேலைநஞ் சமுதுசெய்
கண்கள்மூன் றுடையவெங் கருத்தர்காழி சேர்மினே.
05
1054 அல்லல்வாழ்க்கை யுய்ப்பதற் கவத்தமே பிறந்துநீர்
எல்லையில் பிணக்கினிற் கிடந்திடா தெழும்மினோ
பல்லில்வெண் டலையினிற் பலிக்கியங்கு பான்மையான்
கொல்லையேற தேறுவான் கோலக்காழி சேர்மினே.
06
இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் சிதைந்துபோயிற்று.
07
1055 பொய்மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு சொல்லுநீர்
ஐமிகுத்த கண்டரா யடுத்துரைப்ப தன்முனம்
மைமிகுத்த மேனிவா ளரக்கனை நெரித்தவன்
பைமிகுத்த பாம்பரைப் பரமர்காழி சேர்மினே.
08
1056 காலினோடு கைகளுந் தளர்ந்துகாம நோய்தனால்
ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்ப தன்முனம்
மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா
நீலமேவு கண்டனார் நிகழ்ந்தகாழி சேர்மினே.
09
1057 நிலைவெறுத்த நெஞ்சமோடு நேசமில் புதல்வர்கள்
முலைவெறுத்த பேர்தொடங்கி யேமுனிவ தன்முனந்
தலைபறித்த கையர்தேரர் தாந்தரிப் பரியவன்
சிலைபிடித்தெ யிலெய்தான் திருந்துகாழி சேர்மினே.
10
1058 தக்கனார் தலையரிந்த சங்கரன் றனதரை
அக்கினோ டரவசைத்த அந்திவண்ணர் காழியை
ஒக்கஞான சம்பந்தன் உரைத்தபாடல் வல்லவர்
மிக்கஇன்ப மெய்திவீற் றிருந்துவாழ்தல் மெய்ம்மையே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.98 திருத்துருத்தி - திருவிராகம்
பண் - நட்டராகம்திருச்சிற்றம்பலம்
1059 வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலங்கள் உந்திவந்
திரைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரிக்
கரைத்தலைத் துருத்திபுக் கிருப்பதே கருத்தினாய்
உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமாறு வல்லமே.
01
1060 அடுத்தடுத்த கத்தியோடு வன்னிகொன்றை கூவிளந்
தொடுத்துடன் சடைப்பெய்தாய் துருத்தியாயோர் காலனைக்
கடுத்தடிப் புறத்தினா னிறத்துதைத்த காரணம்
எடுத்தெடுத் துரைக்குமாறு வல்லமாகின் நல்லமே.
02
1061 கங்குல்கொண்ட திங்களோடு கங்கைதங்கு செஞ்சடைச்
சங்கிலங்கு வெண்குழை சரிந்திலங்கு காதினாய்
பொங்கிலங்கு பூணநூல் உருத்திரா துருத்திபுக்
கெங்குநின் இடங்களா அடங்கிவாழ்வ தென்கொலோ.
03
1062 கருத்தினாலோர் காணியில் விருத்தியில்லை தொண்டர்தம்
அருத்தியால்தம் மல்லல்சொல்லி ஐயமேற்ப தன்றியும்
ஒருத்திபால் பொருத்திவைத் துடம்புவிட்டி யோகியாய்
இருத்திநீ துருத்திபுக் கிதென்னமாயம் என்பதே.
04
1063 துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி
மறக்குமா றிலாதஎன்னை மையல்செய்திம் மண்ணின்மேல்
பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்புவிட்
டிறக்குமாறு காட்டினாய்க் கிழுக்குகின்ற தென்னையே.
05
1064 வெயிற்கெதிர்ந் திடங்கொடா தகங்குளிர்ந்த பைம்பொழில்
துயிற்கெதிர்ந்த புள்ளினங்கள் மல்குதண் துருத்தியாய்
மயிற்கெதிர்ந் தணங்குசாயல் மாதொர்பாக மாகமூ
வெயிற்கெதிர்ந் தோரம்பினால் எரித்தவில்லி யல்லையே.
06
1065 கணிச்சியம் படைச்செல்வா கழிந்தவர்க் கொழிந்தசீர்
துணிச்சிரக் கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய்
அணிப்படுந் தனிப்பிறைப் பனிக்கதிர்க் கவாவுநல்
மணிப்படும்பை நாகம்நீ மகிழ்ந்தஅண்ணல் அல்லையே.
07
1066 சுடப்பொடிந் துடம்பிழந் தநங்கனாய மன்மதன்
இடர்ப்படக் கடந்திடந் துருத்தியாக எண்ணினாய்
கடற்படை யுடையவக் கடலிலங்கை மன்னனை
அடற்பட அடுக்கலில் லடர்த்தஅண்ணல் அல்லையே.
08
1067 களங்குளிர்ந் திலங்குபோது காதலானும் மாலுமாய்
வளங்கிளம்பொ னங்கழல் வணங்கிவந்து காண்கிலார்
துளங்கிளம்பி றைச்செனித் துருத்தியாய் திருந்தடி
உளங்குளிர்ந்த போதெலா முகந்துகந் துரைப்பனே.
09
1068 புத்தர்தத் துவமிலாச் சமணுரைத்த பொய்தனை
உத்தம மெனக்கொளா துகந்தெழுந்து வண்டினந்
துத்தநின்று பண்செயுஞ் சூழ்பொழில் துருத்தியெம்
பித்தர்பித் தனைத்தொழப் பிறப்பறுத்தல் பெற்றியே.
10
1069 கற்றுமுற்றி னார்தொழுங் கழுமலத் தருந்தமிழ்
சுற்றுமுற்று மாயினான் அவன்பகர்ந்த சொற்களால்
பெற்றமொன் றுயர்த்தவன் பெருந்துருத்தி பேணவே
குற்றமுற்று மின்மையின் குணங்கள்வந்து கூடுமே.
11
சுவாமிபெயர் - வேதேசுவரர், தேவியார் - முகிழாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.99 திருக்கோடிகா - திருவிராகம்
பண் - நட்டராகம்திருச்சிற்றம்பலம்
1070 இன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்
மின்றயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்
கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே.
01
1071 அல்லல்மிக்க வாழ்க்கையை ஆதரித் திராதுநீர்
நல்லதோர் நெறியினை நாடுதும் நடம்மினோ
வில்லையன்ன வாணுதல் வெள்வளையோர் பாகமாங்
கொல்லைவெள்ளை யேற்றினான் கோடிகாவு சேர்மினே.
02
1072 துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர்
தக்கதோர் நெறியினைச் சார்தல்செய்யப் போதுமின்
அக்கணிந் தரைமிசை யாறணிந்த சென்னிமேல்
கொக்கிற கணிந்தவன் கோடிகாவு சேர்மினே.
03
1073 பண்டுசெய்த வல்வினை பற்றறக் கெடும்வகை
உண்டுமக் குரைப்பன்நான் ஒல்லைநீர் எழுமினோ
மண்டுகங்கை செஞ்சடை வைத்துமாதோர் பாகமாக்
கொண்டுகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே.
04
1074 முன்னைநீர்செய் பாவத்தான் மூர்த்திபாதஞ் சிந்தியா
தின்னநீரி டும்பையின் மூழ்கிறீர் எழும்மினோ
பொன்னைவென்ற கொன்றையான் பூதம்பாட ஆடலான்
கொன்னவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே.
05
1075 ஏவமிக்க சிந்தையோ டின்பமெய்த லாமெனப்
பாவமெத் தனையும்நீர் செய்தொரு பயனிலைக்
காவல்மிக்க மாநகர் காய்ந்துவெங் கனல்படக்
கோவமிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே.
06
1076 ஏணழிந்த வாழ்க்கையை இன்பமென் றிருந்துநீர்
மாணழிந்த மூப்பினால் வருந்தன்முன்னம் வம்மினோ
பூணல்வெள் ளெலும்பினான் பொன்றிகழ் சடைமுடிக்
கோணல்வெண் பிறையினான் கோடிகாவு சேர்மினே.
07
1077 மற்றிவாழ்க்கை மெய்யெனும் மனத்தினைத் தவிர்ந்துநீர்
பற்றிவாழ்மின் சேவடி பணிந்துவந் தெழுமினோ
வெற்றிகொள் தசமுகன் விறல்கெட இருந்ததோர்
குற்றமில் வரையினான் கோடிகாவு சேர்மினே.
08
1078 மங்குநோய் உறும்பிணி மாயும்வண்ணஞ் சொல்லுவன்
செங்கண்மால் திசைமுகன் சென்றளந்துங் காண்கிலா
வெங்கண்மால் விடையுடை வேதியன் விரும்புமூர்
கொங்குலாம் வளம்பொழிற் கோடிகாவு சேர்மினே.
09
1079 தட்டொடு தழைமயில் பீலிகொள் சமணரும்
பட்டுடை விரிதுகிலி னார்கள்சொற் பயனிலை
விட்டபுன் சடையினான் மேதகு முழவொடுங்
கொட்டமைந்த ஆடலான் கோடிகாவு சேர்மினே.
10
1080 கொந்தணி குளிர்பொழிற் கோடிகாவு மேவிய
செந்தழ லுருவனைச் சீர்மிகு திறலுடை
அந்தணர் புகலியு ளாயகேள்வி ஞானசம்
பந்தன தமிழ்வல்லார் பாவமான பாறுமே.
11
சுவாமிபெயர் - கோடீசுவரர், தேவியார் - வடிவாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.100 திருக்கோவலூர் வீரட்டம் - திருவிராகம்
பண் - நட்டராகம்திருச்சிற்றம்பலம்
1081 படைகொள்கூற்றம் வந்துமெய்ப் பாசம்விட்ட போதின்கண்
இடைகொள்வா ரெமக்கிலை யெழுகபோது நெஞ்சமே
குடைகொள்வேந்தன் மூதாதை குழகன்கோவ லூர்தனுள்
விடையதேறுங் கொடியினான் வீரட்டானஞ் சேர்துமே.
01
1082 கரவலாளர் தம்மனைக் கடைகள்தோறுங் கால்நிமிர்த்
திரவலாழி நெஞ்சமே இனியதெய்த வேண்டினீர்
குரவமேறி வண்டினங் குழலொடியாழ்செய் கோவலூர்
விரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் சேர்துமே.
02
1083 உள்ளத்தீரே போதுமின் னுறுதியாவ தறிதிரேல்
அள்ளற்சேற்றிற் காலிட்டங் கவலத்துள் அழுந்தாதே
கொள்ளப்பாடு கீதத்தான் குழகன்கோவ லூர்தனுள்
வெள்ளந்தாங்கு சடையினான் வீரட்டானஞ் சேர்துமே.
03
1084 கனைகொளிருமல் சூலைநோய் கம்பதாளி குன்மமும்
இனையபலவும் மூப்பினோ டெய்திவந்து நலியாமுன்
பனைகளுலவு பைம்பொழிற் பழனஞ்சூழ்ந்த கோவலூர்
வினையைவென்ற வேடத்தான் வீரட்டானஞ் சேர்துமே.
04
1085 உளங்கொள் போகமுய்த்திடார் உடம்பிழந்த போதின்கண்
துளங்கிநின்று நாடொறுந் துயரலாழி நெஞ்சமே
வளங்கொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர்
விளங்குகோவ ணத்தினான் வீரட்டானஞ் சேர்துமே.
05
1086 கேடுமூப்புச் சாக்காடு கெழுமிவந்து நாடொறும்
ஆடுபோல நரைகளாய் யாக்கைபோக்க தன்றியுங்
கூடிநின்று பைம்பொழிற் குழகன்கோவ லூர்தனுள்
வீடுகாட்டு நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே.
06
1087 உரையும்பாட்டுந் தளர்வெய்தி உடம்புமூத்த போதின்கண்
நரையுந்திரையுங் கண்டெள்கி நகுவர்நமர்கள் ஆதலால்
வரைகொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர்
விரைகொள்சீர்வெண் ணீற்றினான் வீரட்டானஞ் சேர்துமே.
07
1088 ஏதமிக்க மூப்பினோ டிருமல்ஈளை யென்றிவை
ஊதலாக்கை ஓம்புவீர் உறுதியாவ தறிதிரேல்
போதில்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனுள்
வேதமோது நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே.
08
1089 ஆறுபட்ட புன்சடை அழகனாயி ழைக்கொரு
கூறுபட்ட மேனியான் குழகன்கோவ லூர்தனில்
நீறுபட்ட கோலத்தான் நீலகண்ட னிருவர்க்கும்
வேறுபட்ட சிந்தையான் வீரட்டானஞ் சேர்துமே.
09
1090 குறிகொளாழி நெஞ்சமே கூறைதுவரிட் டார்களும்
அறிவிலாத அமணர்சொல் அவத்தமாவ தறிதிரேல்
பொறிகொள்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனில்
வெறிகொள்கங்கை தாங்கினான் வீரட்டானஞ் சேர்துமே.
10
1091 கழியொடுலவு கானல்சூழ் காழிஞான சம்பந்தன்
பழிகள்தீரச் சொன்னசொல் பாவநாச மாதலால்
அழிவிலீர்கொண் டேத்துமின் அந்தண்கோவ லூர்தனில்
விழிகொள்பூதப் படையினான் வீரட்டானஞ் சேர்துமே.
11
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர், தேவியார் - சிவானந்தவல்லியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.101 திருவாரூர் - திருவிராகம்
பண் - நட்டராகம்திருச்சிற்றம்பலம்
1092 பருக்கையானை மத்தகத் தரிக்குலத் துகிர்ப்புக
நெருக்கிவாய நித்திலந் நிரக்குநீள் பொருப்பனூர்
கருக்கொள்சோலை சூழநீடு மாடமாளி கைக்கொடி
அருக்கன்மண்ட லத்தணாவும் அந்தணாரூ ரென்பதே.
01
1093 விண்டவெள்ளெ ருக்கலர்ந்த வன்னிகொன்றை மத்தமும்
இண்டைகொண்ட செஞ்சடை முடிச்சிவ னிருந்தவூர்
கெண்டைகொண் டலர்ந்தகண்ணி னார்கள்கீத வோசைபோய்
அண்டரண்டம் ஊடறுக்கும் அந்தணாரூ ரென்பதே.
02
1094 கறுத்தநஞ்சம் உண்டிருண்ட கண்டர்காலன் இன்னுயிர்
மறுத்துமாணி தன்றனாகம் வண்மைசெய்த மைந்தனூர்
வெறித்துமேதி யோடிமூசு வள்ளைவெள்ளை நீள்கொடி
அறுத்துமண்டி யாவிபாயும் அந்தணாரூ ரென்பதே.
03
1095 அஞ்சுமொன்றி ஆறுவீசி நீறுபூசி மேனியில்
குஞ்சியார வந்திசெய்ய அஞ்சலென்னி மன்னுமூர்
பஞ்சியாரு மெல்லடிப் பணைத்தகொங்கை நுண்ணிடை
அஞ்சொலார் அரங்கெடுக்கும் அந்தணாரூ ரென்பதே.
04
1096 சங்குலாவு திங்கள்சூடி தன்னையுன்னு வார்மனத்
தங்குலாவி நின்றஎங்க ளாதிதேவன் மன்னுமூர்
தெங்குலாவு சோலைநீடு தேனுலாவு செண்பகம்
அங்குலாவி யண்டநாறும் அந்தணாரூ ரென்பதே.
05
1097 கள்ளநெஞ்ச வஞ்சகக் கருத்தைவிட் டருத்தியோ
டுள்ளமொன்றி யுள்குவார் உளத்துளான் உகந்தவூர்
துள்ளிவாளை பாய்வயற் சுரும்புலாவு நெய்தல்வாய்
அள்ளல்நாரை ஆரல்வாரும் அந்தணாரூ ரென்பதே.
06
1098 கங்கைபொங்கு செஞ்சடைக் கரந்தகண்டர் காமனை
மங்கவெங்க ணால்விழித்த மங்கைபங்கன் மன்னுமூர்
தெங்கினூடு போகிவாழை கொத்திறுத்து மாவின்மேல்
அங்கண்மந்தி முந்தியேறும் அந்தணாரூ ரென்பதே.
07
1099 வரைத்தல மெடுத்தவன் முடித்தலம் முரத்தொடும்
நெரித்தவன் புரத்தைமுன் னெரித்தவன் னிருந்தவூர்
நிரைத்தமாளி கைத்திருவின் நேரனார்கள் வெண்ணகை
அரத்தவாய் மடந்தைமார்கள் ஆடுமாரூ ரென்பதே.
08
1100 இருந்தவன் கிடந்தவன் னிடந்துவிண் பறந்துமெய்
வருந்தியும் அளப்பொணாத வானவன் மகிழ்ந்தவூர்
செருந்திஞாழல் புன்னைவன்னி செண்பகஞ் செழுங்குரா
அரும்புசோலை வாசநாறும் அந்தணாரூ ரென்பதே.
09
1101 பறித்தவெண் டலைக்கடுப் படுத்தமேனி யார்தவம்
வெறித்தவேடன் வேலைநஞ்சம் உண்டகண்டன் மேவுமூர்
மறித்துமண்டு வண்டல்வாரி மிண்டுநீர் வயற்செநெல்
அறுத்தவா யசும்புபாயு மந்தணாரூ ரென்பதே.
10
1102 வல்லிசோலை சூதநீடு மன்னுவீதி பொன்னுலா
அல்லிமா தமர்ந்திருந்த அந்தணாரூ ராதியை
நல்லசொல்லும் ஞானசம் பந்தன்நாவின் இன்னுரை
வல்லதொண்டர் வானமாள வல்லர்வாய்மை யாகவே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.102 திருச்சிரபுரம்
பண் - நட்டராகம்திருச்சிற்றம்பலம்
1103 அன்ன மென்னடை அரிவையோ டினிதுறை
அமரர்தம் பெருமானார்
மின்னு செஞ்சடை வெள்ளெருக் கம்மலர்
வைத்தவர் வேதந்தாம்
பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதிற்
சிரபுரத் தார்சீரார்
பொன்னின் மாமலர் அடிதொழும் அடியவர்
வினையொடும் பொருந்தாரே.
01
1104 கோல மாகரி உரித்தவர் அரவொடும்
ஏனக்கொம் பிளஆமை
சாலப் பூண்டுதண் மதியது சூடிய
சங்கர னார்தம்மைப்
போலத் தம்மடி யார்க்குமின் பளிப்பவர்
பொருகடல் விடமுண்ட
நீலத் தார்மிடற் றண்ணலார் சிரபுரந்
தொழவினை நில்லாவே.
02
1105 மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத்
தவங்கெட மதித்தன்று
கானத் தேதிரி வேடனா யமர்செயக்
கண்டருள் புரிந்தார்பூந்
தேனைத் தேர்ந்துசேர் வண்டுகள் திரிதருஞ்
சிரபுரத் துறையெங்கள்
கோனைக் கும்பிடும் அடியரைக் கொடுவினை
குற்றங்கள் குறுகாவே.
03
1106 மாணி தன்னுயிர் மதித்துண வந்தவக்
காலனை உதைசெய்தார்
பேணி யுள்குமெய் யடியவர் பெருந்துயர்ப்
பிணக்கறுத் தருள்செய்வார்
வேணி வெண்பிறை யுடையவர் வியன்புகழ்ச்
சிரபுரத் தமர்கின்ற
ஆணிப் பொன்னினை அடிதொழும் அடியவர்க்
கருவினை யடையாவே.
04
1107 பாரும் நீரொடு பல்கதிர் இரவியும்
பனிமதி ஆகாசம்
ஓரும் வாயுவும் ஒண்கனல் வேள்வியில்
தலைவனு மாய்நின்றார்
சேருஞ் சந்தனம் அகிலொடு வந்திழி
செழும்புனற் கோட்டாறு
வாருந் தண்புனல் சூழ்சிர புரந்தொழும்
அடியவர் வருந்தாரே.
05
1108 ஊழி யந்தத்தில் ஒலிகடல் ஓட்டந்திவ்
வுலகங்க ளவைமூட
ஆழி யெந்தையென் றமரர்கள் சரண்புக
அந்தரத் துயர்ந்தார்தாம்
யாழின் நேர்மொழி யேழையோ டினிதுறை
இன்பன்எம் பெருமானார்
வாழி மாநகர்ச் சிரபுரந் தொழுதெழ
வல்வினை அடையாவே.
06
1109 பேய்கள் பாடப்பல் பூதங்கள் துதிசெய
பிணமிடு சுடுகாட்டில்
வேய்கொள் தோளிதான் வெள்கிட மாநடம்
ஆடும்வித் தகனாரொண்
சாய்கள் தான்மிக வுடையதண் மறையவர்
தகுசிர புரத்தார்தாந்
தாய்க ளாயினார் பல்லுயிர்க் குந்தமைத்
தொழுமவர் தளராரே.
07
1110 இலங்கு பூண்வரை மார்புடை இராவணன்
எழில்கொள்வெற் பெடுத்தன்று
கலங்கச் செய்தலுங் கண்டுதங் கழலடி
நெரியவைத் தருள்செய்தார்
புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றல்மன்
றதனிடைப் புகுந்தாருங்
குலங்கொள் மாமறை யவர்சிர புரந்தொழு
தெழவினை குறுகாவே.
08
1111 வண்டு சென்றணை மலர்மிசை நான்முகன்
மாயனென் றிவரன்று
கண்டு கொள்ளவோர் ஏனமோ டன்னமாய்க்
கிளறியும் பறந்துந்தாம்
பண்டு கண்டது காணவே நீண்டவெம்
பசுபதி பரமேட்டி
கொண்ட செல்வத்துச் சிரபுரந் தொழுதெழ
வினையவை கூடாவே.
09
1112 பறித்த புன்தலைக் குண்டிகைச் சமணரும்
பார்மிசைத் துவர்தோய்ந்த
செறித்த சீவரத் தேரருந் தேர்கிலாத்
தேவர்கள் பெருமானார்
முறித்து மேதிகள் கரும்புதின் றாவியில்
மூழ்கிட இளவாளை
வெறித்துப் பாய்வயற் சிரபுரந் தொழவினை
விட்டிடும் மிகத்தானே.
10
1113 பரசு பாணியைப் பத்தர்கள் அத்தனைப்
பையர வோடக்கு
நிரைசெய் பூண்திரு மார்புடை நிமலனை
நித்திலப் பெருந்தொத்தை
விரைசெய் பூம்பொழிற் சிரபுரத் தண்ணலை
விண்ணவர் பெருமானைப்
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர்
பரமனைப் பணிவாரே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.103 திரு அம்பர்த்திருமாகாளம்
பண் - நட்டராகம்திருச்சிற்றம்பலம்
1114 புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப்
போழிள மதிசூடிப்
பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும்
பிணையல்செய் தவர்மேய
மல்கு தண்டுறை அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
அல்லும் நண்பக லுந்தொழும் அடியவர்க்
கருவினை அடையாவே.
01
1115 அரவம் ஆட்டுவர் அந்துகில் புலியதள்
அங்கையில் அனலேந்தி
இரவும் ஆடுவர் இவையிவர் சரிதைக
ளிசைவன பலபூதம்
மரவந் தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
பரவி யும்பணிந் தேத்தவல் லாரவர்
பயன்தலைப் படுவாரே.
02
1116 குணங்கள் கூறியுங் குற்றங்கள் பரவியுங்
குரைகழ லடிசேரக்
கணங்கள் பாடவுங் கண்டவர் பரவவுங்
கருத்தறிந் தவர்மேய
மணங்கொள் பூம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
வணங்கும் உள்ளமோ டணையவல் லார்களை
வல்வினை அடையாவே.
03
1117 எங்கு மேதுமோர் பிணியிலர் கேடிலர்
இழைவளர் நறுங்கொன்றை
தங்கு தொங்கலுந் தாமமுங் கண்ணியுந்
தாமகிழ்ந் தவர்மேய
மங்குல் தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளங்
கங்கு லும்பக லுந்தொழும் அடியவர்
காதன்மை யுடையாரே.
04
1118 நெதியம் என்னுள போகமற் றென்னுள
நிலமிசை நலமாய
கதியம் என்னுள வானவர் என்னுளர்
கருதிய பொருள்கூடில்
மதியந் தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
புதிய பூவொடு சாந்தமும் புகையுங்கொண்
டேத்துதல் புரிந்தோர்க்கே.
05
1119 கண்ணு லாவிய கதிரொளி முடிமிசைக்
கனல்விடு சுடர்நாகந்
தெண்ணி லாவொடு திலதமு நகுதலை
திகழவைத் தவர்மேய
மண்ணு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
உண்ணி லாநினைப் புடையவ ரியாவரிவ்
வுலகினில் உயர்வாரே.
06
1120 தூசு தானரைத் தோலுடைக் கண்ணியஞ்
சுடர்விடு நறுங்கொன்றை
பூசு வெண்பொடிப் பூசுவ தன்றியும்
புகழ்புரிந் தவர்மேய
மாசு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
பேசு நீர்மையர் யாவரிவ் வுலகினிற்
பெருமையைப் பெறுவாரே.
07
1121 பவ்வ மார்கடல் இலங்கையர் கோன்றனைப்
பருவரைக் கீழூன்றி
எவ்வந் தீரவன் றிமையவர்க் கருள்செய்த
இறையவன் உறைகோயில்
மவ்வந் தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளங்
கவ்வை யாற்றொழும் அடியவர் மேல்வினை
கனலிடைச் செதிளன்றே.
08
1122 உய்யுங் காரணம் உண்டென்று கருதுமின்
ஒளிகிளர் மலரோனும்
பைகொள் பாம்பணைப் பள்ளிகொள் அண்ணலும்
பரவநின் றவர்மேய
மையு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளங்
கையி னாற்றொழு தவலமும் பிணியுந்தங்
கவலையுங் களைவாரே.
09
1123 பிண்டி பாலரும் மண்டைகொள் தேரரும்
பீலிகொண் டுழல்வாருங்
கண்ட நூலருங் கடுந்தொழி லாளருங்
கழறநின் றவர்மேய
வண்டு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
பண்டு நாஞ்செய்த பாவங்கள் பற்றறப்
பரவுதல் செய்வோமே.
10
1124 மாறு தன்னொடு மண்மிசை யில்லது
வருபுனல் மாகாளத்
தீறும் ஆதியு மாகிய சோதியை
ஏறமர் பெருமானை
நாறு பூம்பொழில் காழியுள் ஞானசம்
பந்தன தமிழ்மாலை
கூறு வாரையுங் கேட்கவல் லாரையுங்
குற்றங்கள் குறுகாவே.
11
சுவாமிபெயர் - காளகண்டேசுவரர்,
தேவியார் - பட்சநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.104 திருக்கடிக்குளம்
பண் - நட்டராகம்திருச்சிற்றம்பலம்
1125 பொடிகொள் மேனிவெண் ணூலினர் தோலினர்
புலியுரி யதளாடை
கொடிகொள் ஏற்றினர் மணிகிணின் எனவரு
குரைகழல் சிலம்பார்க்கக்
கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்
துறையுங்கற் பகத்தைத்தம்
முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை
முன்வினை மூடாவே.
01
1126 விண்க ளார்தொழும் விளக்கினை துளக்கிலா
விகிர்தனை விழவாரும்
மண்க ளார்துதித் தன்பராய் இன்புறும்
வள்ளலை மருவித்தங்
கண்க ளார்தரக் கண்டுநங் கடிக்குளத்
துறைதரு கற்பகத்தைப்
பண்க ளார்தரப் பாடுவார் கேடிலர்
பழியிலர் புகழாமே.
02
1127 பொங்கு நற்கரி யுரியது போர்ப்பது
புலியதள் அழல்நாகந்
தங்க மங்கையைப் பாகம துடையவர்
தழல்புரை திருமேனிக்
கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத்
துறைதரு கற்பகத்தை
எங்கு மேத்திநின் றின்புறும் அடியரை
இடும்பைவந் தடையாவே.
03
1128 நீர்கொள் நீள்சடை முடியனை நித்திலத்
தொத்தினை நிகரில்லாப்
பார்கொள் பாரிடத் தவர்தொழும் பவளத்தை
பசும்பொன்னை விசும்பாருங்
கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்
துறையுங்கற் பகந்தன்னைச்
சீர்கொள் செல்வங்க ளேத்தவல் லார்வினை
தேய்வது திணமாமே.
04
1129 சுரும்பு சேர்சடை முடியினன் மதியொடு
துன்னிய தழல்நாகம்
அரும்பு தாதவிழ்ந் தலர்ந்தன மலர்பல
கொண்டடி யவர்போற்றக்
கரும்பு கார்மலி கொடிமிடை கடிக்குளத்
துறைதரு கற்பகத்தை
விரும்பு வேட்கையோ டுளமகிழ்ந் துரைப்பவர்
விதியுடை யவர்தாமே.
05
1130 மாதி லங்கிய பாகத்தன் மதியமொ
டலைபுனல் அழல்நாகம்
போதி லங்கிய கொன்றையும் மத்தமும்
புரிசடைக் கழகாகக்
காதி லங்கிய குழையினன் கடிக்குளத்
துறைதரு கற்பகத்தின்
பாதங் கைதொழு தேத்தவல் லார்வினை
பற்றறக் கெடுமன்றே.
06
1131 குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள்
குழாம்பல குளிர்பொய்கை
உலவு புள்ளினம் அன்னங்கள் ஆலிடும்
பூவைசே ருங்கூந்தல்
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்
துறையுங்கற் பகத்தைச்சீர்
நிலவி நின்றுநின் றேத்துவார் மேல்வினை
நிற்ககில் லாதானே.
07
1132 மடுத்த வாளரக் கன்னவன் மலைதன்மேல்
மதியிலா மையிலோடி
எடுத்த லும்முடி தோள்கரம் நெரிந்திற
இறையவன் விரலூன்றக்
கடுத்து வாயொடு கையெடுத் தலறிடக்
கடிக்குளந் தனில்மேவிக்
கொடுத்த பேரருட் கூத்தனை யேத்துவார்
குணமுடை யவர்தாமே.
08
1133 நீரி னார்கடல் துயின்றவன் அயனொடு
நிகழடி முடிகாணார்
பாரி னார்விசும் புறப்பரந் தெழுந்ததோர்
பவளத்தின் படியாகிக்
காரி னார்பொழில் சூழ்தரு கடிக்குளத்
துறையுங்கற் பகத்தின்றன்
சீரி னார்கழ லேத்தவல் லார்களைத்
தீவினை யடையாவே.
09
1134 குண்டர் தம்மொடு சாக்கியர் சமணருங்
குறியினில் நெறிநில்லா
மிண்டர் மிண்டுரை கேட்டவை மெய்யெனக்
கொள்ளன்மின் விடமுண்ட
கண்டர் முண்டநன் மேனியர் கடிக்குளத்
துறைதரும் எம்மீசர்
தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள்
தூநெறி எளிதாமே.
10
1135 தனம லிபுகழ் தயங்குபூந் தராயவர்
மன்னன்நற் சம்பந்தன்
மனம லிபுகழ் வண்டமிழ் மாலைகள்
மாலதாய் மகிழ்வோடுங்
கனம லிகட லோதம்வந் துலவிய
கடிக்குளத் தமர்வானை
இனம லிந்திசை பாடவல் லார்கள்போய்
இறைவனோ டுறைவாரே.
11
சுவாமிபெயர் - கற்பகேசுவரர், தேவியார் - சவுந்தரநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.105 திருக்கீழ்வேளூர்
பண் - நட்டராகம்திருச்சிற்றம்பலம்
1136 மின்னு லாவிய சடையினர் விடையினர்
மிளிர்தரும் அரவோடும்
பன்னு லாவிய மறைஒலி நாவினர்
கறையணி கண்டத்தர்
பொன்னு லாவிய கொன்றையந் தாரினர்
புகழ்மிகு கீழ்வேளூர்
உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை
யோடிட வீடாமே.
01
1137 நீரு லாவிய சடையிடை யரவொடு
மதிசிர நிரைமாலை
வாரு லாவிய வனமுலை யவளொடு
மணிசிலம் பவையார்க்க
ஏரு லாவிய இறைவன துறைவிடம்
எழில்திகழ் கீழ்வேளூர்
சீரு லாவிய சிந்தைசெய் தணைபவர்
பிணியொடு வினைபோமே.
02
1138 வெண்ணி லாமிகு விரிசடை யரவொடு
வெள்ளெருக் கலர்மத்தம்
பண்ணி லாவிய பாடலோ டாடலர்
பயில்வுறு கீழ்வேளூர்ப்
பெண்ணி லாவிய பாகனைப் பெருந்திருக்
கோயிலெம் பெருமானை
உண்ணி லாவிநின் றுள்கிய சிந்தையார்
உலகினில் உள்ளாரே.
03
1139 சேடு லாவிய கங்கையைச் சடையிடைத்
தொங்கவைத் தழகாக
நாடு லாவிய பலிகொளும் நாதனார்
நலமிகு கீழ்வேளூர்ப்
பீடு லாவிய பெருமையர் பெருந்திருக்
கோயிலுட் பிரியாது
நீடு லாவிய நிமலனைப் பணிபவர்
நிலைமிகப் பெறுவாரே.
04
1140 துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை
வடமணி சிரமாலை
மன்று லாவிய மாதவ ரினிதியன்
மணமிகு கீழ்வேளூர்
நின்று நீடிய பெருந்திருக் கோயிலின்
நிமலனை நினைவோடுஞ்
சென்று லாவிநின் றேத்தவல் லார்வினை
தேய்வது திணமாமே.
05
1141 கொத்து லாவிய குழல்திகழ் சடையனைக்
கூத்தனை மகிழ்ந்துள்கித்
தொத்து லாவிய நூலணி மார்பினர்
தொழுதெழு கீழ்வேளூர்ப்
பித்து லாவிய பத்தர்கள் பேணிய
பெருந்திருக் கோயில்மன்னும்
முத்து லாவிய வித்தினை யேத்துமின்
முடுகிய இடர்போமே.
06
1142 பிறைநி லாவிய சடையிடைப் பின்னலும்
வன்னியுந் துன்னாரும்
கறைநி லாவிய கண்டரெண் டோ ளினர்
காதல்செய் கீழ்வேளூர்
மறைநி லாவிய அந்தணர் மலிதரு
பெருந்திருக் கோயில்மன்னும்
நிறைநி லாவிய ஈசனை நேசத்தால்
நினைபவர் வினைபோமே.
07
1143 மலைநி லாவிய மைந்தனம் மலையினை
யெடுத்தலும் அரக்கன்றன்
தலையெ லாம்நெரிந் தலறிட வூன்றினான்
உறைதரு கீழ்வேளூர்க்
கலைநி லாவிய நாவினர் காதல்செய்
பெருந்திருக் கோயிலுள்
நிலைநி லாவிய ஈசனை நேசத்தால்
நினையவல் வினைபோமே.
08
1144 மஞ்சு லாவிய கடல்கிடந் தவனொடு
மலரவன் காண்பொண்ணாப்
பஞ்சு லாவிய மெல்லடிப் பார்ப்பதி
பாகனைப் பரிவோடுஞ்
செஞ்சொ லார்பலர் பரவிய தொல்புகழ்
மல்கிய கீழ்வேளூர்
நஞ்சு லாவிய கண்டனை நணுகுமின்
நடலைகள் நணுகாவே.
09
1145 சீறு லாவிய தலையினர் நிலையிலா
அமணர்கள் சீவரத்தார்
வீறி லாதவெஞ் சொற்பல விரும்பன்மின்
சுரும்பமர் கீழ்வேளூர்
ஏறு லாவிய கொடியனை யேதமில்
பெருந்திருக் கோயில்மன்னு
பேறு லாவிய பெருமையன் திருவடி
பேணுமின் தவமாமே.
10
1146 குருண்ட வார்குழற் சடையுடைக் குழகனை
அழகமர் கீழ்வேளூர்த்
திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திருக்
கோயிலெம் பெருமானை
இருண்ட மேதியின் இனமிகு வயல்மல்கு
புகலிமன் சம்பந்தன்
தெருண்ட பாடல்வல் லாரவர் சிவகதி
பெறுவது திடமாமே.
11
சுவாமிபெயர் - அட்சயலிங்கநாதர், தேவியார் - வனமுலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.106 திருவலஞ்சுழி
பண் - நட்டராகம்திருச்சிற்றம்பலம்
1147 என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே
யிருங்கடல் வையத்து
முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை
முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி
வாணனை வாயாரப்
பன்னி யாதரித் தேத்தியும் பாடியும்
வழிபடும் அதனாலே.
01
1148 விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை
விரிகடல் வருநஞ்சம்
உண்டி றைஞ்சுவா னவர்தமைத் தாங்கிய
இறைவனை உலகத்தில்
வண்டு வாழ்குழன் மங்கையோர் பங்கனை
வலஞ்சுழி யிடமாகக்
கொண்ட நாதன்மெய்த் தொழில்புரி தொண்டரோ
டினிதிருந் தமையாலே.
02
1149 திருந்த லார்புரந் தீயெழச் செறுவன
விறலின்கண் அடியாரைப்
பரிந்து காப்பன பத்தியில் வருவன
மத்தமாம் பிணிநோய்க்கு
மருந்து மாவன மந்திர மாவன
வலஞ்சுழி யிடமாக
இருந்த நாயகன் இமையவ ரேத்திய
இணையடித் தலந்தானே.
03
1150 கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர்
அறத்திற முனிவர்க்கன்
றிறைவ ராலிடை நீழலி லிருந்துகந்
தினிதருள் பெருமானார்
மறைக ளோதுவர் வருபுனல் வலஞ்சுழி
யிடமகிழ்ந் தருங்கானத்
தறைக ழல்சிலம் பார்க்கநின் றாடிய
அற்புதம் அறியோமே.
04
1151 மண்ணர் நீரர்விண் காற்றின ராற்றலாம்
எரியுரு வொருபாகம்
பெண்ண ராணெனத் தெரிவரு வடிவினர்
பெருங்கடற் பவளம்போல்
வண்ண ராகிலும் வலஞ்சுழி பிரிகிலார்
பரிபவர் மனம்புக்க
எண்ண ராகிலும் எனைப்பல இயம்புவர்
இணையடி தொழுவாரே.
05
1152 ஒருவ ராலுவ மிப்பதை யரியதோர்
மேனியர் மடமாதர்
இருவ ராதரிப் பார்பல பூதமும்
பேய்களும் அடையாளம்
அருவ ராததோர் வெண்டலை கைப்பிடித்
தகந்தொறும் பலிக்கென்று
வருவ ரேலவர் வலஞ்சுழி யடிகளே
வரிவளை கவர்ந்தாரே.
06
1153 குன்றி யூர்குட மூக்கிடம் வலம்புரங்
குலவிய நெய்த்தானம்
என்றிவ் வூர்களி லோமென்றும் இயம்புவர்
இமையவர் பணிகேட்பார்
அன்றி யூர்தமக் குள்ளன அறிகிலோம்
வலஞ்சுழி யரனார்பால்
சென்ற வூர்தனில் தலைப்பட லாமென்று
சேயிழை தளர்வாமே.
07
1154 குயிலின் நேர்மொழிக் கொடியிடை வெருவுறக்
குலவரைப் பரப்பாய
கயிலை யைப்பிடித் தெடுத்தவன் கதிர்முடி
தோளிரு பதுமூன்றி
மயிலி னேரன சாயலோ டமர்ந்தவன்
வலஞ்சுழி யெம்மானைப்
பயில வல்லவர் பரகதி காண்பவர்
அல்லவர் காணாரே.
08
1155 அழல தோம்பிய அலர்மிசை யண்ணலும்
அரவணைத் துயின்றானுங்
கழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர்
மாண்பமர் தடக்கையில்
மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி
வலங்கொடு பாதத்தால்
சுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு
துன்பங்கள் களைவாரே.
09
1156 அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர்
தவம்புரிந் தவஞ்செய்வார்
நெறிய லாதன கூறுவர் மற்றவை
தேறன்மின் மாறாநீர்
மறியு லாந்திரைக் காவிரி வலஞ்சுழி
மருவிய பெருமானைப்
பிறிவி லாதவர் பெறுகதி பேசிடில்
அளவறுப் பொண்ணாதே.
10
1157 மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய
மருந்தினை வயற்காழி
நாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய்
நவிற்றிய தமிழ்மாலை
ஆத ரித்திசை கற்றுவல் லார்சொலக்
கேட்டுகந் தவர்தம்மை
வாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும்
வருத்தம்வந் தடையாவே.
11
சுவாமிபெயர் - சித்தீசநாதர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.107 திருக்கேதீச்சரம்
பண் - நட்டராகம்திருச்சிற்றம்பலம்
1158 விருது குன்றமா மேருவில் நாணர
வாவனல் எரியம்பாப்
பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின்
றுறைபதி யெந்நாளுங்
கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ்
பொழிலணி மாதோட்டங்
கருத நின்றகே தீச்சரங் கைதொழக்
கடுவினை யடையாவே.
01
1159 பாடல் வீணையர் பலபல சரிதையர்
எருதுகைத் தருநட்டம்
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ்
சுண்டிருள் கண்டத்தர்
ஈட மாவது இருங்கடற் கரையினில்
எழில்திகழ் மாதோட்டம்
கேடி லாதகே தீச்சரங் கைதொழக்
கெடுமிடர் வினைதானே.
02
1160 பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர்
அறைகழல் சிலம்பார்க்கச்
சுண்ண மாதரித் தாடுவர் பாடுவர்
அகந்தொறும் இடுபிச்சைக்
குண்ண லாவதோர் இச்சையி னுழல்பவர்
உயர்தரு மாதோட்டத்
தண்ணல் நண்ணுகே தீச்சரம் அடைபவர்க்
கருவினை யடையாவே.
03
1161 பொடிகொள் மேனியர் புலியத ளரையினர்
விரிதரு கரத்தேந்தும்
வடிகொள் மூவிலை வேலினர் நூலினர்
மறிகடல் மாதோட்டத்
தடிக ளாதரித் திருந்தகே தீச்சரம்
பரிந்தசிந் தையராகி
முடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேல்
மொய்த்தெழும் வினைபோமே.
04
1162 நல்ல ராற்றவும் ஞானநன் குடையர்தம்
மடைந்தவர்க் கருளீய
வல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர்
மலிகடல் மாதோட்டத்
தெல்லை யில்புகழ் எந்தைகே தீச்சரம்
இராப்பகல் நினைந்தேத்தி
அல்லல் ஆசறுத் தரனடி யிணைதொழும்
அன்பராம் அடியாரே.
05
1163 பேழை வார்சடைப் பெருந்திரு மகள்தனைப்
பொருந்தவைத் தொருபாகம்
மாழை யங்கயற் கண்ணிபா லருளிய
பொருளினர் குடிவாழ்க்கை
வாழை யம்பொழில் மந்திகள் களிப்புற
மருவிய மாதோட்டக்
கேழல் வெண்மருப் பணிந்தநீள் மார்பர்கே
தீச்சரம் பிரியாரே.
06
1164 பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல்
லுலகினில் உயிர்வாழ்க்கை
கண்ட நாதனார் கடலிடங் கைதொழக்
காதலித் துறைகோயில்
வண்டு பண்செயு மாமலர்ப் பொழில்மஞ்ஞை
நடமிடு மாதோட்டந்
தொண்டர் நாடொறுந் துதிசெய அருள்செய்கே
தீச்சர மதுதானே.
07
1165 தென்னி லங்கையர் குலபதி மலைநலிந்
தெடுத்தவன் முடிதிண்டோ ள்
தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த
தலைவனார் கடல்வாயப்
பொன்னி லங்கிய முத்துமா மணிகளும்
பொருந்திய மாதோட்டத்
துன்னி யன்பொடும் அடியவ ரிறைஞ்சுகே
தீச்சரத் துள்ளாரே.
08
1166 பூவு ளானுமப் பொருகடல் வண்ணனும்
புவியிடந் தெழுந்தோடி
மேவி நாடிநின் அடியிணை காண்கிலா
வித்தக மென்னாகும்
மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா
தோட்டநன் னகர்மன்னித்
தேவி தன்னொடுந் திருந்துகே தீச்சரத்
திருந்தஎம் பெருமானே.
09
1167 புத்த ராய்ச்சில புனைதுகி லுடையவர்
புறனுரைச் சமணாதர்
எத்த ராகிநின் றுண்பவ ரியம்பிய
ஏழைமை கேலேன்மின்
மத்த யானையை மறுகிட உரிசெய்து
போர்த்தவர் மாதோட்டத்
தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே
தீச்சரம் அடைமின்னே.
10
1168 மாடெ லாமண முரசெனக் கடலின
தொலிகவர் மாதோட்டத்
தாட லேறுடை அண்ணல்கே தீச்சரத்
தடிகளை யணிகாழி
நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல்
நவின்றெழு பாமாலைப்
பாட லாயின பாடுமின் பத்தர்காள்
பரகதி பெறலாமே.
11
சுவாமிபெயர் - கேதீச்சுவரர், தேவியார் - கௌரிநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.108 திருவிற்குடிவீரட்டானம்
பண் - நட்டராகம்திருச்சிற்றம்பலம்
1169 வடிகொள் மேனியர் வானமா மதியினர்
நதியினர் மதுவார்ந்த
கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர்
உடைபுலி யதளார்ப்பர்
விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை
விற்குடி வீரட்டம்
அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை
அருவினை யடையாவே.
01
1170 களங்கொள் கொன்றையுங் கதிர்விரி மதியமுங்
கடிகமழ் சடைக்கேற்றி
உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர்
பொருகரி யுரிபோர்த்து
விளங்கு மேனியர் எம்பெரு மானுறை
விற்குடி வீரட்டம்
வளங்கொள் மாமல ரால்நினைந் தேத்துவார்
வருத்தம தறியாரே.
02
1171 கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி
மார்பினர் வலங்கையில்
எரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத்
தாடிய வேடத்தர்
விரியும் மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி
விற்குடி வீரட்டம்
பிரிவி லாதவர் பெருந்தவத் தோரெனப்
பேணுவ ருலகத்தே.
03
1172 பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர்
பொலிதர நலமார்ந்த
பாதஞ் சேரிணைச் சிலம்பினர் கலம்பெறு
கடலெழு விடமுண்டார்
வேத மோதிய நாவுடை யானிடம்
விற்குடி வீரட்டஞ்
சேரும் நெஞ்சினர்க் கல்லதுண் டோ பிணி
தீவினை கெடுமாறே.
04
1173 கடிய ஏற்றினர் கனலன மேனியர்
அனலெழ வூர்மூன்றும்
இடிய மால்வரை கால்வளைத் தான்றன
தடியவர் மேலுள்ள
வெடிய வல்வினை வீட்டுவிப் பானுறை
விற்குடி வீரட்டம்
படிய தாகவே பரவுமின் பரவினாற்
பற்றறும் அருநோயே.
05
1174 பெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறிக்
கையினர் மெய்யார்ந்த
அண்ண லன்புசெய் வாரவர்க் கெளியவர்
அரியவர் அல்லார்க்கு
விண்ணி லார்பொழில் மல்கிய மலர்விரி
விற்குடி வீரட்டம்
எண்ணி லாவிய சிந்தையி னார்தமக்
கிடர்கள்வந் தடையாவே.
06
இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
07
1175 இடங்கொள் மாகடல் இலங்கையர் கோன்றனை
யிகலழி தரவூன்று
திடங்கொள் மால்வரை யானுரை யார்தரு
பொருளினன் இருளார்ந்த
விடங்கொள் மாமிட றுடையவ னுறைபதி
விற்குடி வீரட்டந்
தொடங்கு மாறிசை பாடிநின் றார்தமைத்
துன்பநோ யடையாவே.
08
1176 செங்கண் மாலொடு நான்முகன் தேடியுந்
திருவடி யறியாமை
எங்கு மாரெரி யாகிய இறைவனை
யறைபுனல் முடியார்ந்த
வெங்கண் மால்வரைக் கரியுரித் துகந்தவன்
விற்குடி வீரட்டந்
தங்கை யாற்றொழு தேத்தவல் லாரவர்
தவமல்கு குணத்தாரே.
09
1177 பிண்ட முண்டுழல் வார்களும் பிரிதுவ
ராடைய ரவர்வார்த்தை
பண்டு மின்றுமோர் பொருளெனக் கருதன்மின்
பரிவுறு வீர்கேண்மின்
விண்ட மாமலர்ச் சடையவ னிடமெனில்
விற்குடி வீரட்டங்
கண்டு கொண்டடி காதல்செய் வாரவர்
கருத்துறுங் குணத்தாரே.
10
1178 விலங்க லேசிலை யிடமென வுடையவன்
விற்குடி வீரட்டத்
திலங்கு சோதியை எம்பெரு மான்றனை
யெழில்திகழ் கழல்பேணி
நலங்கொள் வாழ்பொழிற் காழியுள் ஞானசம்
பந்தனற் றமிழ்மாலை
வலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால்
மற்றது வரமாமே.
11
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர், தேவியார் - மைவார்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.109 திருக்கோட்டூர்
பண் - நட்டராகம்திருச்சிற்றம்பலம்
1179 நீல மார்தரு கண்டனே நெற்றியோர்
கண்ணனே ஒற்றைவிடைச்
சூல மார்தரு கையனே துன்றுபைம்
பொழில்கள்சூழ்ந் தழகாய
கோல மாமலர் மணங்கமழ் கோட்டூர்நற்
கொழுந்தேயென் றெழுவார்கள்
சால நீள்தல மதனிடைப் புகழ்மிகத்
தாங்குவர் பாங்காலே.
01
1180 பங்க யம்மலர்ச் சீறடி பஞ்சுறு
மெல்விர லரவல்குல்
மங்கை மார்பலர் மயில்குயில் கிளியென
மிழற்றிய மொழியார்மென்
கொங்கை யார்குழாங் குணலைசெய் கோட்டூர்நற்
கொழுந்தேயென் றெழுவார்கள்
சங்கை யொன்றில ராகிச்சங் கரன்திரு
அருள்பெறல் எளிதாமே.
02
1181 நம்ப னார்நல மலர்கொடு தொழுதெழும்
அடியவர் தமக்கெல்லாஞ்
செம்பொ னார்தரும் எழில்திகழ் முலையவர்
செல்வமல் கியநல்ல
கொம்ப னார்தொழு தாடிய கோட்டூர்நற்
கொழுந்தேயென் றெழுவார்கள்
அம்பொ னார்தரு முலகினில் அமரரோ
டமர்ந்தினி திருப்பாரே.
03
1182 பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா
மாங்கனி பயில்வாய
கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைகள்
அன்னஞ்சேர்ந் தழகாய
குலவு நீள்வயல் கயலுகள் கோட்டூர்நற்
கொழுந்தேயென் றெழுவார்கள்
நிலவு செல்வத்த ராகிநீள் நிலத்திடை
நீடிய புகழாரே.
04
1183 உருகு வாருள்ளத் தொண்சுடர் தனக்கென்றும்
அன்பராம் அடியார்கள்
பருகும் ஆரமு தெனநின்று பரிவொடு
பத்திசெய் தெத்திசையுங்
குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர்நற்
கொழுந்தேயென் றெழுவார்கள்
அருகு சேர்தரு வினைகளும் அகலும்போய்
அவனருள் பெறலாமே.
05
1184 துன்று வார்சடைத் தூமதி மத்தமுந்
துன்னெருக் கார்வன்னி
பொன்றி னார்தலைக் கலனொடு பரிகலம்
புலியுரி யுடையாடை
கொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர்நற்
கொழுந்தேயென் றெழுவாரை
என்று மேத்துவார்க் கிடரிலை கேடிலை
ஏதம்வந் தடையாவே.
06
1185 மாட மாளிகை கோபுரங் கூடங்கள்
மணியரங் கணிசாலை
பாடு சூழ்மதிற் பைம்பொன்செய் மண்டபம்
பரிசொடு பயில்வாய
கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற்
கொழுந்தேயென் றெழுவார்கள்
கேட தொன்றில ராகிநல் லுலகினிற்
கெழுவுவர் புகழாலே.
07
1186 ஒளிகொள் வாளெயிற் றரக்கனவ் வுயர்வரை
யெடுத்தலும் உமையஞ்சிச்
சுளிய வூன்றலுஞ் சோர்ந்திட வாளொடு
நாளவற் கருள்செய்த
குளிர்கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற்
கொழுந்தினைத் தொழுவார்கள்
தளிர்கொள் தாமரைப் பாதங்கள் அருள்பெறுந்
தவமுடை யவர்தாமே.
08
1187 பாடி யாடுமெய்ப் பத்தர்கட் கருள்செயும்
முத்தினைப் பவளத்தைத்
தேடி மாலயன் காணவொண் ணாதவத்
திருவினைத் தெரிவைமார்
கூடி யாடவர் கைதொழு கோட்டூர்நற்
கொழுந்தேயென் றெழுவார்கள்
நீடு செல்வத்த ராகியிவ் வுலகினில்
நிகழ்தரு புகழாரே.
09
1188 கோணல் வெண்பிறைச் சடையனைக் கோட்டூர்நற்
கொழுந்தினைச் செழுந்திரளைப்
பூணல் செய்தடி போற்றுமின் பொய்யிலா
மெய்யன்நல் லருளென்றுங்
காண லொன்றிலாக் காரமண் தேரர்குண்
டாக்கர்சொற் கருதாதே
பேணல் செய்தர னைத்தொழும் அடியவர்
பெருமையைப் பெறுவாரே.
10
1189 பந்து லாவிரற் பவளவாய்த் தேன்மொழிப்
பாவையோ டுருவாருங்
கொந்து லாமலர் விரிபொழிற் கோட்டூர்நற்
கொழுந்தினைச் செழும்பவளம்
வந்து லாவிய காழியுள் ஞானசம்
பந்தன்வாய்ந் துரைசெய்த
சந்து லாந்தமிழ் மாலைகள் வல்லவர்
தாங்குவர் புகழாலே.
11
சுவாமிபெயர் - கொழுந்தீசுவரர், தேவியார் - தேன்மொழிப்பாவையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.110 திருமாந்துறை
பண் - நட்டராகம்திருச்சிற்றம்பலம்
1190 செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ்
செருந்திசெண் பகமானைக்
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை
குருந்தலர் பரந்துந்தி
அம்பொன் நேர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைகின்ற
எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழ
லேத்துதல் செய்வோமே.
01
1191 விளவு தேனொடு சாதியின் பலங்களும்
வேய்மணி நிரந்துந்தி
அளவி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை உறைவானத்
துளவ மால்மக னைங்கணைக் காமனைச்
சுடவிழித் தவனெற்றி
அளக வாணுதல் அரிவைதன் பங்கனை
யன்றிமற் றறியோமே.
02
1192 கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமுங்
கூந்தலின் குலைவாரி
ஓடு நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைநம்பன்
வாடி னார்தலை யிற்பலி கொள்பவன்
வானவர் மகிழ்ந்தேத்துங்
கேடி லாமணி யைத்தொழ லல்லது
கெழுமுதல் அறியோமே.
03
1193 இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை
இளமரு திலவங்கங்
கலவி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைகண்டன்
அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும்
ஆடர வுடன்வைத்த
மலையை வானவர் கொழுந்தினை யல்லது
வணங்குதல் அறியோமே.
04
1194 கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி
குரவிடை மலருந்தி
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைவானைப்
பாங்கி னாலிடுந் தூபமுந் தீபமும்
பாட்டவி மலர்சேர்த்தித்
தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில்
தலைப்படுந் தவத்தோரே.
05
1195 பெருகு சந்தனங் காரகில் பீலியும்
பெருமரம் நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை மாந்துறைப்
புனிதனெம் பெருமானைப்
பரிவி னாலிருந் திரவியும் மதியமும்
பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு மலரடி
வணங்குதல் செய்வோமே.
06
1196 நறவ மல்லிகை முல்லையும் மௌவலும்
நாண்மல ரவைவாரி
இறவில் வந்தெறி காவிரி வடகரை
மாந்துறை யிறைஅன்றங்
கறவ னாகிய கூற்றினைச் சாடிய
அந்தணன் வரைவில்லால்
நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன்
நிரைகழல் பணிவோமே.
07
1197 மந்த மார்பொழில் மாங்கனி மாந்திட
மந்திகள் மாணிக்கம்
உந்தி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைவானை
நிந்தி யாவெடுத் தார்த்தவல் லரக்கனை
நெரித்திடு விரலானைச்
சிந்தி யாமனத் தாரவர் சேர்வது
தீநெறி யதுதானே.
08
1198 நீல மாமணி நித்திலத் தொத்தொடு
நிரைமலர் நிரந்துந்தி
ஆலி யாவரு காவிரி வடகரை
மாந்துறை யமர்வானை
மாலு நான்முகன் தேடியுங் காண்கிலா
மலரடி யிணைநாளுங்
கோல மேத்திநின் றாடுமின் பாடுமின்
கூற்றுவன் நலியானே.
09
1199 நின்று ணுஞ்சமண் தேரரும் நிலையிலர்
நெடுங்கழை நறவேலம்
நன்று மாங்கனி கதலியின் பலங்களும்
நாணலின் நுரைவாரி
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை
மாந்துறை யொருகாலம்
அன்றி யுள்ளழிந் தெழும்பரி சழகிது
அதுவவர்க் கிடமாமே.
10
1200 வரைவ ளங்கவர் காவிரி வடகரை
மாந்துறை யுறைவானைச்
சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன்
செழுமறை நிறைநாவன்
அரவெ னும்பணி வல்லவன் ஞானசம்
பந்தனன் புறுமாலை
பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும்
பாவமும் இலர்தாமே.
11
சுவாமிபெயர் - ஐராவணேசுவரர், தேவியார் - அழகாயமர்ந்தநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.111 திருவாய்மூர்
பண் - நட்டராகம்திருச்சிற்றம்பலம்
1201 தளிரிள வளரென உமைபாடத்
தாள மிடவோர் கழல்வீசிக்
கிளரிள மணியர வரையார்த்
தாடும் வேடக் கிறிமையார்
விளரிள முலையவர்க் கருள்நல்கி
வெண்ணீ றணிந்தோர் சென்னியின்மேல்
வளரிள மதியமொ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.
01
1202 வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி
விரிதரு கோவண வுடைமேலோர்
பந்தஞ்செய் தரவசைத் தொலிபாடிப்
பலபல கடைதொறும் பலிதேர்வார்
சிந்தனை புகுந்தெனக் கருள்நல்கிச்
செஞ்சுடர் வண்ணர்தம் மடிபரவ
வந்தனை பலசெய இவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.
02
1203 பண்ணிற் பொலிந்த வீணையர்
பதினெண் கணமு முணராநஞ்
சுண்ணப் பொலிந்த மிடற்றினார்
உள்ள முருகி லுடனாவார்
சுண்ணப் பொடிநீ றணிமார்பர்
சுடர்பொற் சடைமேல் திகழ்கின்ற
வண்ணப் பிறையோ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.
03
1204 எரிகிளர் மதியமொ டெழில்நுதல்மேல்
எறிபொறி யரவினொ டாறுமூழ்க
விரிகிளர் சடையினர் விடையேறி
வெருவவந் திடர்செய்த விகிர்தனார்
புரிகிளர் பொடியணி திருவகலம்
பொன்செய்த வாய்மையர் பொன்மிளிரும்
வரியர வரைக்கசைத் திவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.
04
1205 அஞ்சன மணிவணம் எழில்நிறமா
வகமிட றணிகொள வுடல்திமில
நஞ்சினை யமரர்கள் அமுதமென
நண்ணிய நறுநுதல் உமைநடுங்க
வெஞ்சின மால்களி யானையின்தோல்
வெருவுறப் போர்த்ததன் நிறமுமஃதே
வஞ்சனை வடிவினோ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.
05
1206 அல்லிய மலர்புல்கு விரிகுழலார்
கழலிணை யடிநிழ லவைபரவ
எல்லியம் போதுகொண் டெரியேந்தி
யெழிலொடு தொழிலவை யிசையவல்லார்
சொல்லிய அருமறை யிசைபாடிச்
சூடிள மதியினர் தோடுபெய்து
வல்லியந் தோலுடுத் திவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.
06
1207 கடிபடு கொன்றைநன் மலர்திகழுங்
கண்ணியர் விண்ணவர் கனமணிசேர்
முடிபில்கும் இறையவர் மறுகின்நல்லார்
முறைமுறை பலிபெய முறுவல்செய்வார்
பொடியணி வடிவொடு திருவகலம்
பொன்னென மிளிர்வதோர் அரவினொடும்
வடிநுனை மழுவினொ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.
07
1208 கட்டிணை புதுமலர் கமழ்கொன்றைக்
கண்ணியர் வீணையர் தாமுமஃதே
எட்டுணை சாந்தமொ டுமைதுணையா
இறைவனா ருறைவதோ ரிடம்வினவில்
பட்டிணை யகலல்குல் விரிகுழலார்
பாவையர் பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வட்டணை யாடலொ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.
08
1209 ஏனம ருப்பினொ டெழிலாமை
யிசையப் பூண்டோ ரேறேறிக்
கானம திடமா வுறைகின்ற
கள்வர் கனவில் துயர்செய்து
தேனுண மலர்கள் உந்திவிம்மித்
திகழ்பொற் சடைமேல் திகழ்கின்ற
வானநன் மதியினோ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.
09
1210 சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர்
சுண்ணவெண் ணீற்றினர் சுடர்மழுவர்
பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார்
பாம்பொடு நூலவை பசைந்திலங்கக்
கோடனன் முகிழ்விரல் கூப்பிநல்லார்
குறையுறு பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வாடல்வெண் டலைபிடித் திவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.
10
1211 திங்களோ டருவரைப் பொழிற்சோலைத்
தேனலங் கானலந் திருவாய்மூர்
அங்கமோ டருமறை யொலிபாடல்
அழல்நிற வண்ணர்தம் மடிபரவி
நங்கள்தம் வினைகெட மொழியவல்ல
ஞானசம் பந்தன் தமிழ்மாலை
தங்கிய மனத்தினால் தொழுதெழுவார்
தமர்நெறி யுலகுக்கோர் தவநெறியே.
11
சுவாமிபெயர் - வாய்மூரீசுவரர், தேவியார் - பாலினுநன்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.112 திருஆடானை
பண் - நட்டராகம்திருச்சிற்றம்பலம்
1212 மாதோர் கூறுகந் தேற தேறிய
ஆதியா னுறை ஆடானை
போதினாற் புனைந் தேத்து வார்தமை
வாதியா வினை மாயுமே.
01
1213 வாடல் வெண்டலை அங்கை யேந்திநின்
றாடலா னுறை ஆடானை
தோடுலா மலர் தூவிக் கைதொழ
வீடும் நுங்கள் வினைகளே.
02
1214 மங்கை கூறினன் மான்ம றியுடை
அங்கை யானுறை ஆடானை
தங்கை யாற்றொழு தேத்த வல்லவர்
மங்கு நோய்பிணி மாயுமே.
03
1215 சுண்ண நீறணி மார்பிற் றோல்புனை
அண்ண லானுறை ஆடானை
வண்ண மாமலர் தூவிக் கைதொழ
எண்ணு வாரிடர் ஏகுமே.
04
1216 கொய்ய ணிம்மலர்க் கொன்றை சூடிய
ஐயன் மேவிய ஆடானை
கைய ணிம்மல ரால்வ ணங்கிட
வெய்ய வல்வினை வீடுமே.
05
1217 வானி ளம்மதி மல்கு வார்சடை
ஆனஞ் சாடலன் ஆடானை
தேன ணிம்மலர் சேர்த்த முன்செய்த
ஊன முள்ள வொழியுமே.
06
1218 துலங்கு வெண்மழு வேந்திச் சூழ்சடை
அலங்க லானுறை ஆடானை
நலங்கொள் மாமலர் தூவி நாடொறும்
வலங்கொள் வார்வினை மாயுமே.
07
1219 வெந்த நீறணி மார்பிற் றோல்புனை
அந்த மில்லவன் ஆடானை
கந்த மாமலர் தூவிக் கைதொழுஞ்
சிந்தை யார்வினை தேயுமே.
08
1220 மறைவல் லாரொடு வான வர்தொழு
தறையுந் தண்புனல் ஆடானை
உறையும் ஈசனை யேத்தத் தீவினை
பறையும் நல்வினை பற்றுமே.
09
1221 மாய னும்மல ரானுங் கைதொழ
ஆய அந்தணன் ஆடானை
தூய மாமலர் தூவிக் கைதொழ
தீய வல்வினை தீருமே.
10
1222 வீடி னார்மலி வேங்க டத்துநின்
றாட லானுறை ஆடானை
நாடி ஞானசம் பந்தன் செந்தமிழ்
பாட நோய்பிணி பாறுமே.
11
சுவாமிபெயர் - ஆதிரத்தினேசுவரர், தேவியார் - அம்பாயிரவல்லியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.113 சீகாழி
பண் - செவ்வழி திருச்சிற்றம்பலம்
1223 பொடியிலங்குந் திருமேனி யாளர்புலி யதளினர்
அடியிலங்குங் கழலார்க்க ஆடும்மடி கள்ளிடம்
இடியிலங்குங் குரலோதம் மல்கவ்வெறி வார்திரைக்
கடியிலங்கும் புனல்முத் தலைக்குங்கடற் காழியே.
01
1224 மயலிலங்குந் துயர்மா சறுப்பானருந் தொண்டர்கள்
அயலிலங்கப் பணிசெய்ய நின்றவ்வடி கள்ளிடம்
புயலிலங்குங் கொடையாளர் வேதத்தொலி பொலியவே
கயலிலங்கும் வயற்கழனி சூழுங்கடற் காழியே.
02
1225 கூர்விலங்குந் திருசூல வேலர்குழைக் காதினர்
மார்விலங்கும் புரிநூலு கந்தம்மண வாளனூர்
நேர்விலங்கல் லனதிரைகள் மோதந்நெடுந் தாரைவாய்க்
கார்விலங்கல் லெனக்கலந் தொழுகுங்கடற் காழியே.
03
1226 குற்றமில்லார் குறைபாடு செய்வார்பழி தீர்ப்பவர்
பெற்றநல்ல கொடிமுன் னுயர்த்தபெரு மானிடம்
மற்றுநல்லார் மனத்தா லினியார்மறை கலையெலாங்
கற்றுநல்லார் பிழைதெரிந் தளிக்குங்கடற் காழியே.
04
1227 விருதிலங்குஞ் சரிதைத்தொழி லார்விரி சடையினார்
எருதிலங்கப் பொலிந்தேறும் எந்தைக்கிட மாவது
பெரிதிலங்கும் மறைகிளைஞர் ஓதப்பிழை கேட்டலாற்
கருதுகிள்ளைக் குலந்தெரிந்து தீர்க்குங்கடற் காழியே.
05
1228 தோடிலங்குங் குழைக்காதர் வேதர்சுரும் பார்மலர்ப்
பீடிலங்குஞ் சடைப்பெருமை யாளர்க்கிட மாவது
கோடிலங்கும் பெரும்பொழில்கள் மல்கப்பெருஞ் செந்நெலின்
காடிலங்கும் வயல்பயிலும் அந்தண்கடற் காழியே.
06
1229 மலையிலங்குஞ் சிலையாக வேகம்மதில் மூன்றெரித்
தலையிலங்கும் புனற்கங்கை வைத்தவ்வடி கட்கிடம்
இலையிலங்கும் மலர்க்கைதை கண்டல்வெறி விரவலால்
கலையிலங்குங் கணத்தினம் பொலியுங்கடற் காழியே.
07
1230 முழுதிலங்கும் பெரும்பாருள் வாழும்முரண் இலங்கைக்கோன்
அழுதிரங்கச் சிரமுர மொடுங்கவ்வடர்த் தாங்கவன்
தொழுதிரங்கத் துயர்தீர்த் துகந்தார்க் கிடமாவது
கழுதும்புள்ளும் மதிற்புறம தாருங்கடற் காழியே.
08
1231 பூவினானும் விரிபோதின் மல்குந்திரு மகள்தனை
மேவினானும் வியந்தேத்த நீண்டாரழ லாய்நிறைந்
தோவியங்கே யவர்க்கருள் புரிந்தவ்வொரு வர்க்கிடங்
காவியங்கண் மடமங்கை யர்சேர்கடற் காழியே.
09
1232 உடைநவின்றா ருடைவிட் டுழல்வாரிருந் தவத்தார்
முடைநவின்றம் மொழியொழித் துகந்தம்முதல் வன்னிடம்
மடைநவின்ற புனற்கெண்டை பாயும்வயல் மலிதர
கடைநவின்றந் நெடுமாட மோங்குங்கடற் காழியே.
10
1233 கருகுமுந்நீர் திரையோத மாருங்கடற் காழியுள்
உரகமாருஞ் சடையடிகள் தம்பாலுணர்ந் துறுதலாற்
பெருகமல்கும் புகழ்பேணுந் தொண்டர்க்கிசை யார்தமிழ்
விரகன்சொன்ன இவைபாடி யாடக்கெடும் வினைகளே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.114 திருக்கேதாரம்
பண் - செவ்வழி திருச்சிற்றம்பலம்
1234 தொண்டரஞ்சுங் களிறு மடக்கிச் சுரும்பார்மலர்
இண்டைகட்டி வழிபாடு செய்யுமிட மென்பரால்
வண்டுபாட மயிலால மான்கன்று துள்ளவரிக்
கெண்டைபாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே.
01
1235 பாதம்விண் ணோர்பலரும் பரவிப்பணிந் தேத்தவே
வேதநான்கும் பதினெட்டொ டாறும்விரித் தார்க்கிடந்
தாதுவிண்ட மதுவுண்டு மிண்டிவரு வண்டினங்
கீதம்பாட மடமந்தி கேட்டுகளுங் கேதாரமே.
02
1236 முந்திவந்து புரோதாய மூழ்கிம் முனிகள்பலர்
எந்தைபெம்மா னெனநின் றிறைஞ்சுமிட மென்பரால்
மந்திபாயச் சரேலச் சொரிந்தும் முரிந்துக்கபூக்
கெந்தநாறக் கிளருஞ் சடையெந்தை கேதாரமே.
03
1237 உள்ளமிக்கார் குதிரைம் முகத்தாரொரு காலர்கள்
எள்கலில்லா இமையோர்கள் சேரும்மிட மென்பரால்
பிள்ளைதுள்ளிக் கிளைபயில்வ கேட்டுப்பிரி யாதுபோய்க்
கிள்ளையேனற் கதிர்கொணர்ந்து வாய்ப்பெய்யுங் கேதாரமே.
04
1238 ஊழியூழி யுணர்வார்கள் வேதத்தினொண் பொருள்களால்
வாழியெந்தை யெனவந்தி றைஞ்சும்மிட மென்பரால்
மேழிதாங்கி யுழுவார்கள் போலவ்விரை தேரிய
கேழல்பூழ்தி கிளைக்க மணிசிந்துங் கேதாரமே.
05
1239 நீறுபூசி நிலத்துண்டு நீர்மூழ்கிநீள் வரைதன்மேல்
தேறுசிந்தை யுடையார்கள் சேரும்மிட மென்பரால்
ஏறிமாவின் கனியும்பலா வின்னிருஞ் சுளைகளுங்
கீறிநாளும் முசுக்கிளையோ டுண்டுகளுங் கேதாரமே.
06
1240 மடந்தைபாகத் தடக்கிம் மறையோதி வானோர்தொழத்
தொடர்ந்தநம்மேல் வினைதீர்க்க நின்றார்க்கிட மென்பரால்
உடைந்தகாற்றுக் குயர்வேங்கை பூத்துதிரக் கல்லறைகண்மேல்
கிடந்தவேங்கை சினமா முகஞ்செய்யுங் கேதாரமே.
07
1241 அரவமுந்நீர் அணியிலங்கைக் கோனையரு வரைதனால்
வெருவவூன்றி விரலாலடர்த் தார்க்கிட மென்பரால்
குரவங்கோங்கங் குளிர்பிண்டி ஞாழல்சுர புன்னைமேல்
கிரமமாக வரிவண்டு பண்செய்யுங் கேதாரமே.
08
1242 ஆழ்ந்துகாணார் உயர்ந்தெய்த கில்லாரல மந்தவர்
தாழ்ந்துதந்தம் முடிசாய நின்றார்க்கிட மென்பரால்
வீழ்ந்துசெற்றுந் நிழற்கிறங்கும் வேழத்தின்வெண் மருப்பினைக்
கீழ்ந்துசிங்கங் குருகுண்ண முத்துதிருங் கேதாரமே.
09
1243 கடுக்கள்தின்று கழிமீன்கவர் வார்கள் மாசுடம்பினர்
இடுக்கணுய்ப்பா ரவரெய்த வொண்ணாவிட மென்பரால்
அடுக்கநின்றவ் வறவுரைகள் கேட்டாங்கவர் வினைகளைக்
கெடுக்கநின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே.
10
1244 வாய்ந்தசெந்நெல் விளைகழனி மல்கும்வயற் காழியான்
ஏய்ந்தநீர்க்கோட் டிமையோர் உறைகின்ற கேதாரத்தை
ஆய்ந்துசொன்ன அருந்தமிழ்கள் பத்தும்மிசை வல்லவர்
வேந்தராகி யுலகாண்டு வீடு கதிபெறுவரே.
11
சுவாமிபெயர் - கேதாரேசுவரர்,
தேவியார் - கௌரியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.115 திருப்புகலூர்
பண் - செவ்வழி திருச்சிற்றம்பலம்
1245 வெங்கள்விம்மு குழலிளைய ராடவ்வெறி விரவுநீர்ப்
பொங்குசெங்கட் கருங்கயல்கள் பாயும்புக லூர்தனுள்
திங்கள்சூடித் திரிபுரமோ ரம்பாலெரி யூட்டிய
எங்கள்பெம்மான் அடிபரவ நாளும்மிடர் கழியுமே.
01
1246 வாழ்ந்தநாளும் மினிவாழு நாளும்மிவை யறிதிரேல்
வீழ்ந்தநாளெம் பெருமானை யேத்தாவிதி யில்லிகாள்
போழ்ந்ததிங்கட் புரிசடையி னான்றன்புக லூரையே
சூழ்ந்தவுள்ளம் உடையீர்காள் உங்கள்துயர் தீருமே.
02
1247 மடையின்நெய்தல் கருங்குவளை செய்யம்மலர்த் தாமரை
புடைகொள்செந்நெல் விளைகழனி மல்கும்புக லூர்தனுள்
தொடைகொள்கொன்றை புனைந்தானோர் பாகம்மதி சூடியை
அடையவல்லார் அமருலகம் ஆளப் பெறுவார்களே.
03
1248 பூவுந்நீரும் பலியுஞ் சுமந்துபுக லூரையே
நாவினாலே நவின்றேத்த லோவார்செவித் துளைகளால்
யாவுங்கேளார் அவன்பெருமை யல்லால்அடி யார்கள்தாம்
ஓவுநாளும் உணர்வொழிந்த நாளென்றுள்ளங் கொள்ளவே.
04
1249 அன்னங்கன்னிப் பெடைபுல்கி யொல்கியணி நடையவாய்ப்
பொன்னங்காஞ்சி மலர்ச்சின்ன மாலும்புக லூர்தனுள்
முன்னம்மூன்று மதிலெரித்த மூர்த்திதிறங் கருதுங்கால்
இன்னரென்னப் பெரிதரியர் ஏத்தச்சிறி தெளியரே.
05
1250 குலவராகக் குலம்இலரு மாகக்குணம் புகழுங்கால்
உலகில்நல்ல கதிபெறுவ ரேனும்மல ரூறுதேன்
புலவமெல்லாம் வெறிகமழும் அந்தண்புக ளுர்தனுள்
நிலவமல்கு சடையடிகள் பாதம்நினை வார்களே.
06
1251 ஆணும்பெண்ணும் மெனநிற்ப ரேனும்மர வாரமாப்
பூணுமேனும் புகலூர் தனக்கோர் பொருளாயினான்
ஊணும்ஊரார் இடுபிச்சை யேற்றுண்டுடை கோவணம்
பேணுமேனும் பிரானென்ப ராலெம்பெரு மானையே.
07
1252 உய்யவேண்டில் எழுபோத நெஞ்சேயுய ரிலங்கைக்கோன்
கைகளொல்கக் கருவரை யெடுத்தானையோர் விரலினால்
செய்கைதோன்றச் சிதைத்தருள வல்லசிவன் மேயபூம்
பொய்கைசூழ்ந்த புகலூர் புகழப் பொருளாகுமே.
08
1253 நேமியானும் முகநான் குடையந்நெறி யண்ணலும்
ஆமிதென்று தகைந்தேத்தப் போயாரழ லாயினான்
சாமிதாதை சரணாகு மென்றுதலை சாய்மினோ
பூமியெல்லாம் புகழ்செல்வம் மல்கும்புக லூரையே.
09
1254 வேர்த்தமெய்யர் உருவத் துடைவிட் டுழல்வார்களும்
போர்த்தகூறைப் போதிநீழ லாரும்புக லூர்தனுள்
தீர்த்தமெல்லாஞ் சடைக்கரந்த தேவன்திறங் கருதுங்கால்
ஓர்த்துமெய்யென் றுணராது பாதந்தொழு துய்ம்மினே.
10
1255 புந்தியார்ந்த பெரியோர்கள் ஏத்தும்புக லூர்தனுள்
வெந்தசாம்பற் பொடிப்பூச வல்லவிடை யூர்தியை
அந்தமில்லா அனலாட லானையணி ஞானசம்
பந்தன்சொன்ன தமிழ்பாடி யாடக்கெடும் பாவமே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.116 திருநாகைக்காரோணம்
பண் - செவ்வழி திருச்சிற்றம்பலம்
1256 கூனல்திங்கட் குறுங்கண்ணி கான்றந்நெடு வெண்ணிலா
வேனற்பூத்தம் மராங்கோதை யோடும்விரா வுஞ்சடை
வானநாடன் னமரர் பெருமாற் கிடமாவது
கானல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
01
1257 விலங்கலொன்று சிலையா மதில்மூன்றுடன் வீட்டினான்
இலங்குகண்டத் தெழிலாமை பூண்டாற் கிடமாவது
மலங்கியோங்கிவ் வருவெண் டிரைமல்கிய மால்கடற்
கலங்கலோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
02
1258 வெறிகொளாருங் கடற்கைதை நெய்தல்விரி பூம்பொழில்
முறிகொள்ஞாழல் முடப்புன்னை முல்லைம்முகை வெண்மலர்
நறைகொள்கொன்றைந் நயந்தோங்கு நாதற் கிடமாவது
கறைகொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
03
1259 வண்டுபாடவ் வளர்கொன்றை மாலைம்மதி யோடுடன்
கொண்டகோலங் குளிர்கங்கை தங்குங்குருள் குஞ்சியுள்
உண்டுபோலும் மெனவைத் துகந்தவ்வொரு வற்கிடம்
கண்டல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
04
1260 வார்கொள்கோலம் முலைமங்கை நல்லார்மகிழ்ந் தேத்தவே
நீர்கொள்கோலச் சடைநெடுவெண் டிங்கள்நிகழ் வெய்தவே
போர்கொள்சூலப் படைபுல்கு கையார்க் கிடமாவது
கார்கொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
05
1261 விடையதேறிவ் விடவர வசைத்த விகிர்தரவர்
படைகொள்பூதம் பலபாட ஆடும் பரமாயவர்
உடைகொள்வேங்கை யுரிதோ லுடையார்க் கிடமாவது
கடைகொள்செல்வங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
06
1262 பொய்துவாழ்வார் மனம்பாழ் படுக்கும்மலர்ப் பூசனை
செய்துவாழ்வார் சிவன்சே வடிக்கேசெலுஞ் சிந்தையார்
எய்தவாழ்வார் எழில்நக்க ரெம்மாற்கிட மாவது
கைதல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
07
1263 பத்திரட்டி திரள்தோ ளுடையான்முடி பத்திற
அத்திரட்டி விரலா லடர்த்தார்க் கிடமாவது
மைத்திரட்டிவ் வருவெண் டிரைமல்கிய வார்கடல்
கைத்திரட்டுங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
08
1264 நல்லபோதில் லுறைவானும் மாலும்நடுக் கத்தினால்
அல்லராவ ரெனநின்ற பெம்மாற் கிடமாவது
மல்லலோங்கிவ் வருவெண் டிரைமல்கிய மால்கடல்
கல்லலோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
09
1265 உயர்ந்தபோதின் னுருவத் துடைவிட்டுழல் வார்களும்
பெயர்ந்தமண்டை யிடுபிண்ட மாவுண்டுழல் வார்களும்
நயந்துகாணா வகைநின்ற நாதர்க் கிடமாவது
கயங்கொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
10
1266 மல்குதண்பூம் புனல்வாய்ந் தொழுகும்வயற் காழியான்
நல்லகேள்வித் தமிழ்ஞான சம்பந்தன் நல்லார்கள்முன்
வல்லவாறே புனைந்தேத்துங் காரோணத்து வண்டமிழ்
சொல்லுவார்க்கும் மிவைகேட் பவர்க்குந்துய ரில்லையே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.117 திரு இரும்பைமாகாளம்
பண் - செவ்வழி திருச்சிற்றம்பலம்
1267 மண்டுகங்கை சடையிற் கரந்தும் மதிசூடிமான்
கொண்டகையாற் புரம்மூன் றெரித்த குழகன்னிடம்
எண்டிசையும் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
வண்டுகீதம் முரல்பொழில் சுலாய்நின்ற மாகாளமே.
01
1268 வேதவித்தாய வெள்ளைநீறு பூசி வினையாயின
கோதுவித்தாய நீறெழக் கொடிமா மதிலாயின
ஏதவித்தா யினதீர்க் கும்மிடம் மிரும்பைதனுள்
மாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே.
02
1269 வெந்தநீறு மெலும்பும் மணிந்த விடையூர்தியான்
எந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை இரும்பைதனுள்
கந்தமாய பலவின் கனிகள் கமழும்பொழில்
மந்தியேறிக் கொணர்ந்துண் டுகள்கின்ற மாகாளமே.
03
1270 நஞ்சுகண்டத் தடக்கி நடுங்கும் மலையான்மகள்
அஞ்சவேழம் உரித்த பெருமான் அமரும்மிடம்
எஞ்சலில்லாப் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
மஞ்சிலோங்கும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே.
04
1271 பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பன்மகள்
கூசஆனை உரித்த பெருமான் குறைவெண்மதி
ஈசனெங்கள் ளிறைவன் னிடம்போல் இரும்பைதனுள்
மாசிலோர்கண் மலர்கொண் டணிகின்ற மாகாளமே.
05
1272 குறைவதாய குளிர்திங்கள் சூடிக் குனித்தான்வினை
பறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தசடை
இறைவனெங்கள் பெருமான் இடம்போல் இரும்பைதனுள்
மறைகள்வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே.
06
1273 பொங்குசெங்கண் ணரவும் மதியும் புரிபுன்சடைத்
தங்கவைத்த பெருமா னெனநின் றவர்தாழ்விடம்
எங்குமிச்சை யமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள்
மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே.
07
1274 நட்டத்தோடு நரியாடு கானத் தெரியாடுவான்
அட்டமூர்த்தி அழல்போ லுருவன் னழகாகவே
இட்டமாக இருக்கும் மிடம்போல் இரும்பைதனுள்
வட்டஞ்சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கும் மாகாளமே.
08
1275 அட்டகாலன் றனைவவ்வி னானவ் வரக்கன்முடி
எட்டுமற்றும் இருபத் திரண்டும் மிறவூன்றினான்
இட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள்
மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரு மாகாளமே.
09
1276 அரவமார்த்தன் றனலங்கை யேந்தி யடியும்முடி
பிரமன்மாலும் மறியாமை நின்ற பெரியோனிடங்
குரவமாரும் பொழிற்குயில்கள் சேரும் மிரும்பைதனுள்
மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே.
10
1277 எந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை யிரும்பைதனுள்
மந்தமாய பொழில்சூழ்ந் தழகாரு மாகாளத்தில்
அந்தமில்லா அனலாடு வானை யணிஞானசம்
பந்தன்சொன்ன தமிழ்பாட வல்லார் பழிபோகுமே.
11
சுவாமிபெயர் - மாகாளேசுவரர், தேவியார் - குயிலம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.118 திருத்திலதைப்பதி - மதிமுத்தம்
பண் - செவ்வழி திருச்சிற்றம்பலம்
1278 பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப்புலர் காலையே
அடிகளாரத் தொழுதேத்த நின்றவ்வழ கன்னிடங்
கொடிகளோங்கிக் குலவும் விழவார்தில தைப்பதி
வடிகொள்சோலைம் மலர்மணங் கமழும்மதி முத்தமே.
01
1279 தொண்டர்மிண்டிப் புகைவிம்மு சாந்துங்கமழ் துணையலுங்
கொண்டுகண்டார் குறிப்புணர நின்றகுழ கன்னிடந்
தெண்டிரைப்பூம் புனலரிசில் சூழ்ந்ததில தைப்பதி
வண்டுகெண்டுற் றிசைபயிலுஞ் சோலைமதி முத்தமே.
02
1280 அடலுளேறுய்த் துகந்தான் அடியார்அம ரர்தொழக்
கடலுள்நஞ்சம் அமுதாக வுண்டகட வுள்ளிடந்
திடலடங்கச் செழுங்கழனி சூழ்ந்ததில தைப்பதி
மடலுள்வாழைக் கனிதேன் பிலிற்றும்மதி முத்தமே.
03
1281 கங்கைதிங்கள் வன்னிதுன் னெருக்கின்னொடு கூவிளம்
வெங்கண்நாகம் விரிசடையில் வைத்தவிகிர் தன்னிடஞ்
செங்கயல்பாய் புனலரிசில் சூழ்ந்ததில தைப்பதி
மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகார்மதி முத்தமே.
04
1282 புரவியேழும் மணிபூண் டியங்குங்கொடித் தேரினான்
பரவிநின்று வழிபாடு செய்யும்பர மேட்டியூர்
விரவிஞாழல் விரிகோங்கு வேங்கைசுர புன்னைகள்
மரவம்மவ்வன் மலருந் திலதைமதி முத்தமே.
05
1283 விண்ணர்வேதம் விரித்தோத வல்லார்ஒரு பாகமும்
பெண்ணர்எண்ணார் எயில்செற் றுகந்தபெரு மானிடந்
தெண்ணிலாவின் ஒளிதீண்டு சோலைத்தில தைப்பதி
மண்ணுளார்வந் தருள்பேணி நின்றமதி முத்தமே.
06
1284 ஆறுசூடி யடையார்புரஞ் செற்றவர் பொற்றொடி
கூறுசேரும் உருவர்க் கிடமாவது கூறுங்கால்
தேறலாரும் பொழில்சூழ்ந் தழகார்தில தைப்பதி
மாறிலாவண் புனலரிசில் சூழ்ந்தமதி முத்தமே.
07
1285 கடுத்துவந்த கனன்மேனி யினான்கரு வரைதனை
எடுத்தவன்றன் முடிதோள் அடர்த்தார்க் கிடமாவது
புடைக்கொள்பூகத் திளம்பாளை புல்கும்மதுப் பாயவாய்
மடுத்துமந்தி யுகளுந் திலதைமதி முத்தமே.
08
1286 படங்கொள்நாகத் தணையானும் பைந்தாமரை யின்மிசை
இடங்கொள்நால் வேதனு மேத்தநின்ற இறைவன்னிடந்
திடங்கொள்நாவின் னிசைதொண்டர் பாடுந் திலைதைப்பதி
மடங்கல்வந்து வழிபாடு செய்யும்மதி முத்தமே.
09
1287 புத்தர்தேரர் பொறியில் சமணர்களும் வீறிலாப்
பித்தர்சொன்னம் மொழிகேட் கிலாதபெரு மானிடம்
பத்தர்சித்தர் பணிவுற் றிறைஞ்சுந்தில தைப்பதி
மத்தயானை வழிபாடு செய்யும்மதி முத்தமே.
10
1288 மந்தமாரும் பொழில்சூழ் திலதைமதி முத்தமேற்
கந்தமாருங் கடற்காழி யுள்ளான்தமிழ் ஞானசம்
பந்தன்மாலை பழிதீரநின் றேத்தவல் லார்கள்போய்ச்
சிந்தைசெய்வார் சிவன்சே வடிசேர்வது திண்ணமே.
11
சுவாமிபெயர் - மதிமுத்தநாதேசுவரர், தேவியார் - பொற்கொடியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.119 திருநாகேச்சரம்
பண் - செவ்வழி திருச்சிற்றம்பலம்
1289 தழைகொள்சந்தும் மகிலும் மயில்பீலியுஞ் சாதியின்
பழமுமுந்திப் புனல்பாய் பழங்காவிரித் தென்கரை
நழுவில்வானோர் தொழநல்கு சீர்மல்கு நாகேச்சரத்
தழகர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கழ காகுமே.
01
1290 பெண்ணோர்பாகம் மடையச் சடையிற்புனல் பேணிய
வண்ணமான பெருமான் மருவும்மிடம் மண்ணுளார்
நண்ணிநாளுந் தொழுதேத்தி நன்கெய்து நாகேச்சரங்
கண்ணினாற் காணவல்லா ரவர்கண்ணுடை யார்களே.
02
1291 குறவர்கொல்லைப் புனங்கொள்ளை கொண்டும்மணி குலவுநீர்
பறவையாலப் பரக்கும் பழங்காவிரித் தென்கரை
நறவநாறும் பொழில்சூழ்ந் தழகாய நாகேச்சரத்
திறைவர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கிட ரில்லையே.
03
1292 கூசநோக்காது முன்சொன்ன பொய்கொடுவினை குற்றமும்
நாசமாக்கும் மனத்தார்கள் வந்தாடு நாகேச்சரந்
தேசமாக்குந் திருக்கோயி லாக்கொண்ட செல்வன்கழல்
நேசமாக்குந் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே.
04
1293 வம்புநாறும் மலரும்மலைப் பண்டமுங் கொண்டுநீர்
பைம்பொன்வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை
நம்பன்நாளும் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார்
உம்பர்வானோர் தொழச்சென் றுடனாவதும் உண்மையே.
05
1294 காளமேகந் நிறக்கால னோடந்தகன் கருடனும்
நீளமாய்நின் றெய்தகாம னும்பட்டன நினைவுறின்
நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார்
கோளுநாளுந் தீயவேனும் நன்காங்குறிக் கொண்மினே.
06
1295 வேயுதிர்முத் தொடுமத்த யானைமருப் பும்விராய்
பாய்புனல்வந் தலைக்கும் பழங்காவிரித் தென்கரை
நாயிறுந்திங் களுங்கூடி வந்தாடு நாகேச்சரம்
மேயவன்றன் அடிபோற்றி யென்பார் வினைவீடுமே.
07
1296 இலங்கைவேந்தன் சிரம்பத் திரட்டியெழில் தோள்களும்
மலங்கிவீழம் மலையா லடர்த்தானிட மல்கிய
நலங்கொள்சிந்தை யவர்நாடொறும் நண்ணும் நாகேச்சரம்
வலங்கொள்சிந்தை யுடையார் இடராயின மாயுமே.
08
1297 கரியமாலும் அயனும் மடியும்முடி காண்பொணா
எரியதாகிந் நிமிர்ந்தான் அமரும்மிட மீண்டுகா
விரியின்நீர்வந் தலைக்குங் கரைமேவு நாகேச்சரம்
பிரிவிலாதவ் வடியார்கள் வானிற் பிரியார்களே.
09
1298 தட்டிடுக்கி யுறிதூக்கிய கையினர் சாக்கியர்
கட்டுரைக்கும் மொழிகொள்ளலும் வெள்ளிலங் காட்டிடை
நட்டிருட்கண் நடமாடிய நாதன் நாகேச்சரம்
மட்டிருக்கும் மலரிட்டடி வீழ்வது வாய்மையே.
10
1299 கந்தநாறும் புனற்காவிரித் தென்கரை கண்ணுதல்
நந்திசேருந் திருநாகேச் சரத்தின்மேன் ஞானசம்
பந்தன்நாவிற் பனுவல்லிவை பத்தும்வல் லார்கள்போய்
எந்தையீசன் னிருக்கும் முலகெய்த வல்லார்களே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.120 திருமூக்கீச்சரம்
பண் - செவ்வழி திருச்சிற்றம்பலம்
1300 சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர்
காந்தளாரும் விரலேழை யோடாடிய காரணம்
ஆய்ந்துகொண்டாங் கறியந் நிறைந்தாரவ ரார்கொலோ
வேந்தன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே.
01
1301 வெண்டலையோர் கலனாப் பலிதேர்ந்து விரிசடைக்
கொண்டலாரும் புனல்சேர்த் துமையா ளொடுங்கூட்டமா
விண்டவர்தம் மதிலெய்தபின் வேனில்வேள் வெந்தெழக்
கண்டவர்மூக் கீச்சரத்தெம் மடிகள்செய் கன்மமே.
02
1302 மருவலார்தம் மதிலெய் ததுவும்மான் மதலையை
உருவிலாரவ் வெரியூட் டியதும்முல குண்டதால்
செருவிலாரும் புலிசெங் கயலானையி னான்செய்த
பொருவின்மூக் கீச்சரத்தெம் மடிகள்செயும் பூசலே.
03
1303 அன்னமன்னந் நடைச்சாய லாளொடழ கெய்தவே
மின்னையன்ன சடைக்கங்கை யாள்மேவிய காரணந்
தென்னன்கோழி யெழில்வஞ்சியும் ஓங்குசெங் கோலினான்
மன்னன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மாயமே.
04
1304 விடமுனாரவ் வழல்வாய தோர்பாம்பரை வீக்கியே
நடமுனாரவ் வழலாடுவர் பேயொடு நள்ளிருள்
வடமனீடு புகழ்ப்பூழியன் தென்னவன் கோழிமன்
அடல்மன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே.
05
1305 வெந்தநீறு மெய்யிற்பூ சுவராடுவர் வீங்கிருள்
வந்தெனாரவ் வளைகொள்வது மிங்கொரு மாயமாம்
அந்தண்மா மானதன்னேரியன் செம்பிய னாக்கிய
எந்தைமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரேதமே.
06
1306 அரையிலாருங் கலையில்லவ னாணொடு பெண்ணுமாய்
உரையிலாரவ் வழலாடுவ ரொன்றலர் காண்மினோ
விரவலார்தம் மதில்மூன்றுடன் வெவ்வழ லாக்கினான்
அரையான்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே.
07
1307 ஈர்க்குநீர்செஞ் சடைக்கேற்ற துங்கூற்றை யுதைத்ததுங்
கூர்க்குநன் மூவிலைவேல் வலனேந்திய கொள்கையும்
ஆர்க்கும்வாயான் அரக்கன் னுரத்தைந்நெரித் தவ்வடல்
மூர்க்கன்மூக்கீச் சரத்தடிகள் செய்யாநின்ற மொய்ம்பதே.
08
1308 நீருளாரும் மலர்மேல் உறைவான் நெடுமாலுமாய்ச்
சீருளாருங் கழல்தேட மெய்த்தீத் திரளாயினான்
சீரினாலங் கொளிர்தென்னவன் செம்பியன் வல்லவன்
சேருமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் செம்மையே.
09
1309 வெண்புலான்மார் பிடுதுகிலினர் வெற்றரை யுழல்பவர்
உண்பினாலே யுரைப்பார் மொழியூனம தாக்கினான்
ஒண்புலால்வேல் மிகவல்லவ னோங்கெழில் கிள்ளிசேர்
பண்பின்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் பச்சையே.
10
1310 மல்லையார்மும் முடிமன்னர் மூக்கீச்சரத் தடிகளைச்
செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ்
நல்லராய்வாழ் பவர்காழியுள் ஞானசம் பந்தன
சொல்லவல்லா ரவர்வானுல காளவும் வல்லரே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.121 திருப்பாதிரிப்புலியூர்
பண் - செவ்வழி திருச்சிற்றம்பலம்
1311 முன்னம்நின்ற முடக்கால் முயற்கருள் செய்துநீள்
புன்னைநின்று கமழ்பா திரிப்புலி யூருளான்
தன்னைநின்று வணங்குந் தனைத்தவ மில்லிகள்
பின்னைநின்ற பிணியாக் கையைப் பெறுவார்களே.
01
1312 கொள்ளிநக்க பகுவாய பேய்கள் குழைந்தாடவே
முள்ளிலவம் முதுகாட் டுறையும் முதல்வன்னிடம்
புள்ளினங்கள் பயிலும் பாதிரிப் புலியூர்தனை
உள்ள நம்மேல் வினையாயின வொழியுங்களே.
02
1313 மருளினல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர்மேல்
பொருளினல்லார் பயில்பா திரிப்புலி யூருளான்
வெருளின்மானின் பிணைநோக்கல் செய்துவெறி செய்தபின்
அருளியாகத் திடைவைத் ததுவும் மழகாகவே.
03
1314 போதினாலும் புகையாலும் உய்த்தே யடியார்கள்தாம்
போதினாலே வழிபாடு செய்யப் புலியூர்தனுள்
ஆதினாலும் மவலம் மிலாதவடி கள்மறை
ஓதிநாளும் மிடும்பிச்சை யேற்றுண் டுணப்பாலதே.
04
1315 ஆகநல்லார் அமுதாக்க வுண்டான் அழலைந்தலை
நாகநல்லார் பரவந்நயந் தங்கரை யார்த்தவன்
போகநல்லார் பயிலும் பாதிரிப்புலி யூர்தனுள்
பாகநல்லா ளொடுநின்ற எம்பர மேட்டியே.
05
1316 மதியமொய்த்த கதிர்போ லொளிம்மணற் கானல்வாய்ப்
புதியமுத்தந் திகழ்பா திரிப்புலி யூரெனும்
பதியில்வைக்கப் படுமெந்தை தன்பழந் தொண்டர்கள்
குதியுங்கொள்வர் விதியுஞ் செய்வர் குழகாகவே.
06
1317 கொங்கரவப் படுவண் டறைகுளிர் கானல்வாய்ச்
சங்கரவப் பறையின் னொலியவை சார்ந்தெழப்
பொங்கரவம் முயர்பா திரிப்புலி யூர்தனுள்
அங்கரவம் மரையில் லசைத்தானை அடைமினே.
07
1318 வீக்கமெழும் இலங்கைக் கிறைவிலங் கல்லிடை
ஊக்கமொழிந் தலறவ் விரலாலிறை யூன்றினான்
பூக்கமழும் புனல்பா திரிப்புலி யூர்தனை
நோக்கமெலிந் தணுகா வினைநுணு குங்களே.
08
1319 அன்னந்தாவும் மணியார் பொழின்மணி யார்புன்னை
பொன்னந்தாது சொரிபா திரிப்புலி யூர்தனுள்
முன்னந்தாவி அடிமூன் றளந்தவன் நான்முகன்
தன்னந்தாளுற் றுணராத தோர்தவ நீதியே.
09
1320 உரிந்தகூறை யுருவத் தொடுதெரு வத்திடைத்
திரிந்துதின்னுஞ் சிறுநோன் பரும்பெருந் தேரரும்
எரிந்துசொன்னவ் வுரைகொள் ளாதேயெடுத் தேத்துமின்
புரிந்தவெண் ணீற்றண்ணல் பாதிரிப்புலி யூரையே.
10
1321 அந்தண்நல் லாரகன் காழியுள் ஞானசம்
பந்தன்நல் லார்பயில் பாதிரிப்புலி யூர்தனுள்
சந்தமாலைத் தமிழ்பத் திவைதரித் தார்கள்மேல்
வந்துதீயவ் வடையாமை யால்வினை மாயுமே.
11
சுவாமிபெயர் - தோன்றாத்துணையீசுவரர், தேவியார் - தோகையம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.122 திருப்புகலி
பண் - செவ்வழி திருச்சிற்றம்பலம்
1322 விடையதேறி வெறியக் கரவார்த்த விமலனார்
படையதாகப் பரசு தரித்தார்க் கிடமாவது
கொடையிலோவார் குலமும் முயர்ந்தம் மறையோர்கள்தாம்
புடைகொள்வேள்விப் புகையும்பர் உலாவும் புகலியே.
01
1323 வேலைதன்னில் மிகுநஞ்சினை யுண்டிருள் கண்டனார்
ஞாலமெங்கும் பலிகொண் டுழல்வார் நகராவது
சாலநல்லார் பயிலும் மறைகேட்டுப் பதங்களைச்
சோலைமேவுங் கிளித்தான் சொற்பயிலும் புகலியே.
02
1324 வண்டுவாழுங் குழல்மங்கை யோர்கூ றுகந்தார்மதித்
துண்டமேவுஞ் சுடர்த்தொல் சடையார்க் கிடமாவது
கெண்டைபாய மடுவில் லுயர்கேதகை மாதவி
புண்டரீக மலர்ப்பொய்கை நிலாவும் புகலியே.
03
1325 திரியும்மூன்று புரமும் மெரித்துத் திகழ்வானவர்க்
கரியபெம்மான் அரவக் குழையார்க் கிடமாவது
பெரியமாடத் துயருங் கொடியின் மிடைவால்வெயிற்
புரிவிலாத தடம்பூம் பொழில்சூழ் தண்புகலியே.
04
1326 ஏவிலாருஞ் சிலைப்பார்த் தனுக்கின் னருள்செய்தவர்
நாவினாள்மூக் கரிவித்த நம்பர்க் கிடமாவது
மாவிலாருங் கனிவார் கிடங்கில்விழ வாளைபோய்ப்
பூவிலாரும் புனற்பொய்கை யில்வைகும் புகலியே.
05
1327 தக்கன்வேள்வி தகர்த்த தலைவன் தையலாளொடும்
ஒக்கவேயெம் முரவோ னுறையும் மிடமாவது
கொக்குவாழை பலவின் கொழுந்தண் கனிகொன்றைகள்
புக்கவாசப் புன்னைபொன் திரள்காட்டும் புகலியே.
06
இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் சிதைந்துபோயிற்று.
07
1328 தொலைவிலாத அரக்கன் னுரத்தைத் தொலைவித்தவன்
தலையுந்தோளும் நெரித்து சதுரர்க் கிடமாவது
கலையின்மேவும் மனத்தோர் இரப்போர்க்குக் கரப்பிலார்
பொலியுமந்தண் பொழில்சூழ்ந் தழகாரும் புகலியே.
08
1329 கீண்டுபுக்கார் பறந்தார் அயர்ந்தார் கேழலன்னமாய்க்
காண்டுமென்றார் கழல்பணிய நின்றார்க் கிடமாவது
நீண்டநாரை இரையாரல் வாரநிறை செறுவினிற்
பூண்டுமிக்கவ் வயல்காட்டும் அந்தண் புகலியே.
09
1330 தடுக்குடுத்துத் தலையைப் பறிப்பாரொடு சாக்கியர்
இடுக்கணுய்ப்பார் இறைஞ்சாத எம்மாற் கிடமாவது
மடுப்படுக்குஞ் சுருதிப்பொருள் வல்லவர் வானுளோர்
அடுத்தடுத்துப் புகுந்தீண்டும் அந்தண் புகலியே.
10
1331 எய்தவொண்ணா இறைவன் உறைகின்ற புகலியைக்
கைதவமில்லாக் கவுணியன் ஞானசம் பந்தன்சீர்
செய்தபத்தும் இவைசெப்ப வல்லார்சிவ லோகத்தில்
எய்திநல்ல இமையோர்கள் ஏத்தவிருப் பார்களே.
11
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை முற்றும்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்பபண் - 24. அவை,
பகற் பண் :
புறநீர்மை, காந்தாரம், பியந்தைக்காந்தாரம்,
கவுசிகம், இந்தளம், தக்கேசி, சாதாரி, நட்டபாஷை,
நட்டராகம், பழம்பஞ்சுரம், காந்தாரபஞ்சமம், பஞ்சமம். ஆக பகற்பண் - 12.
இராப்பண் :
தக்கராகம், பழந்தக்கராகம், சீகாமரம், கொல்லி,
கொல்லிக்காவாணம், வியாழக்குறிஞ்சி, மேகராகக்குறிஞ்சி,
அந்தாளிக்குறிஞ்சி, குறிஞ்சி. ஆக இராப்பண் - 9
பொதுப்பண் :
செவ்வழி, செந்துருதி, திருத்தாண்டகம். ஆக பொதுப்பண் - 3
This file was last revised on 15 Feb. 2003